சீன, மத்திய கிழக்கு, ரஷ்ய நிறுவனங்கள் நாள் ஒன்றிற்கு 100,000 பீப்பாய்கள், 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கையானது நாள் ஒன்றிற்கு 50,000 பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்கக் கூடிய 50 வருடங்கள் பழமை வாய்ந்த சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினைக் கொண்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரான தம்மிக்க ரணதுங்க இது தொடர்பாக தெரிவிக்கையில்,

அரசிற்குச் சொந்தமான எரிபொருள் விற்பனையாளரானது பங்குடைமையில் இணைந்து இதனை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளது. இதற்கான செலவீனமானது 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற ரீதியில் அமையும்.

2 மத்திய கிழக்கு நிறுவனங்கள், சீன, ரஷ்ய நிறுவனங்கள் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாகவுள்ளன.

மேலும் இப்புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் எமது நாடானது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதியில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும். கடந்த வருடம் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கான செலவீனமானது 3.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

தற்போது புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது இரட்டை கொள்ளளவினைக் கொண்டதாக அமையவுள்ளது. இலங்கையானது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை தரம் உயர்த்த இருந்ததுடன் உள்நாட்டு எரிபொருள் தேவையினை 30% ஆக நிறைவேற்ற இதன் மூலம் திட்டமிட்டிருந்தது.

இதற்கமைய புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்கான செலவீனத்தையும் குறைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யாவின் வலுசக்தி அமைச்சானது இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கலந்துரையாடியது.

இலங்கையானது தற்போதும் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பாக கலந்துரையாடி வருவதுடன் இந்தியாவுடன் இணைந்து மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினையும் நிர்மாணிப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகின்றது.

(Visited 32 times, 1 visits today)