கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக இன்று பதவியேற்றார் எடியூரப்பா. அவருக்கு அம்மாநில ஆளுநர் வஜ்ஜுபாய் வாலா பதவிப்பிராமணம் செய்து வைத்தார்.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க, அம்மாநில அளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.ஏ. போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு நள்ளிரவு 2 மணி தொடங்கு மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது. முடிவில் கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.

ஆனால் கடந்த 15ம் தேதி அன்று, ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 16ம் தேதி ஆட்சியமைக்க எடியூரப்பா ஆளுநருக்கு எழுதிய கடிதத்தையும் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் எடியூரப்பா இன்று காலை 9.02 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்றார்.

இதற்கான ஏற்பாடுகள் பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் தீவிரமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து தற்போது முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். அவருடன் 4 துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

முதலமைச்சராக பதவியேற்ற உடன் எடியூரப்பா விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அதற்கான உத்தரவில் கையெழுத்திடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்இ தர்மேந்திர பிரதான் மற்றும் ஜெ.பி. நட்டா ஆகியோர் கலந்துக்கொண்டனர்

கர்நாடாகவின் 23வது முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ள எடியூரப்பா, ஏற்கனவே 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

(Visited 38 times, 1 visits today)