கேம்பிறிச் அனலிட்டிக்கா நிறுவனத்துடன் முறைகேடாக பகிரப்பட்ட 87 மில்லியன் பயனாளர்களின் தகவல்களில் தன்னுடைய தகவல்களும் அடங்குவதாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஸக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் முன்  ஆஜரானபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் அண்மையில் ஏற்பட்ட குழப்பம் பேஸ்புக் பாவனையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது. இரண்டு கட்டமாக இடம்பெற்ற இந்த விசாரணைகளின் இறுதி விசாரணை அமர்வு நேற்று இடம்பெற்றது.

கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 50 மில்லியன் அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

எனினும் 87 மில்லியன் பாவனையாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை நேற்றைய ஸக்கர்பேர்க்கின் வாக்குமூலத்தை அடுத்து வெளியாகியுள்ளது.

நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போது, அவரிடம் வினவப்பட்ட கேள்விகளுக்கு சுமார் 40 தடவைகள் தன்னிடம் அதற்கான பதில் தற்பொழுது இல்லை எனவும், பின்னர் பதில் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மார்க்கின் இவ்வாறான பதிலுக்கு விசாரணைக்குழுவினர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கட்டுப்பாடுகள் அல்லது சட்ட நடைமுறைகள் தொடர்பில் மார்க் ஸக்கர்பேர்க்கிடம் வினவப்பட்ட போது, “இணைய நிறுவனங்கள் சில விதிமுறைகளை கொண்டிருக்க வேண்டும்” என தெரிவித்த அவர் எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டு கூறவில்லை.

நேற்றும், நேற்று முன்தினமும் இடம்பெற்ற விசாரணைகள் சுமார் 10 மணி நேரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 61 times, 1 visits today)