இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, நேற்றுடன் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.

இதையடுத்து இராணுவத்தின் இரண்டாவது நிலை தளபதிப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இலகு காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, கடந்த 2017 ஜூலை 21திகதி இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ஓய்வுபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவுக்கு பனாகொடவில் உள்ள இலகு காலாட்படை தலைமையகத்தில் நேற்று பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2009ஆம் ஆண்டு இவர் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த போதே, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை இடம்பெற்றிருந்தது.

இந்தக் கொலை தொடர்பாக, மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவிடம் அண்மையிலும் விசாரணை நடத்தப்பட்டது, இவர் கைது செய்யப்படவுள்ளார் என்றும் தகவல் பரவியமை குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர ஓய்வு பெற்றதை அடுத்து இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, இன்னமும் யாரும் நியமிக்கப்படவில்லை.

(Visited 30 times, 1 visits today)