அரசிற்கு கால அவகாசம் வழங்கும் வகையில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் செயற்படுவதாக வடக்கு கிழக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பு இன்று முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எமது பிள்ளைகளின் நிலை தொடர்பாக அறியாது அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

அவர்களின் பிள்ளைகள் ஆயுதம் ஏந்தி போராடவோ, காணாமல் போகவோ இல்லை. பிள்ளைகளை காணாது தவிக்கும் எமது வேதனைகளை அவர்கள் அறியாதவர்களாகவே உள்ளனர்.

அதனாலேயே அவர்கள் அரசுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். எமக்கு நட்டஈடுகளோ, உதவிகளோ தேவை இல்லை. எமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்.

அதற்கு சர்வதேசம் அரசுக்கு கடுமையான இறுக்கப்பாடுகளை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

(Visited 1 times, 1 visits today)