சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 கோடி பேரும், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் உய்குர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் 1 கோடி பேரும் அடங்குவர்.

இவர்கள் வழிபாட்டுக்காக நாடு முழுவதும் பிரம்மாண்டமான பல மசூதிகள் உள்ளன. அவற்றில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் உள்ள உசோங் நகரில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த வெய்சூங் பெரிய மசூதியும் ஒன்றாகும்.

இந்த மசூதியை புணரமைக்கும் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டுவாக்கில் தொடங்கின. தற்போது பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மசூதியின் உச்சியில் உள்ள கோபுரங்கள் (மினராக்கள்) தொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் மசூதி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

இந்த மினராக்கள் சீன கட்டிட வடிவமைப்பின்படி இல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மசூதிகளின் கட்டிட வடிவமைப்பு போல் காணப்படுவதால் இவற்றை இடித்துவிட்டு, சீன பாரம்பரிய கட்டிடக்கலையின்படி மாற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு எதிராக நிங்சியா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கொதித்து எழுந்தனர்.

கடந்த வியாழனன்று இந்த மசூதியை இடிப்பதற்கு அதிகாரிகள் தயாரான நிலையில், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் மசூதி வளாகத்தை முகாமிட்டனர். அவர்களில் பலர் மசூதிக்குள் அமர்ந்தபடி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வரும் இந்த முற்றுகை போராட்டம் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கலாம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மிகப்பெரிய அடுப்புகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையலுக்கு தேவையான உணவுப்பொருட்கள் பெரிய அளவில் அங்கு கொண்டு செல்லப்படுவதை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

தற்போது மசூதியில் அமைக்கப்பட்டுள்ள மினராக்களை அகற்றிவிட்டு வேறுமாதிரியான கட்டுமானம் மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் சம்மதிக்கவில்லை. இந்த மினராக்களை இடித்துவிட்டால் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் என்பதற்கான அடையாளமே இல்லாமல் போகும் என அவர்கள் குறிப்பிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

(Visited 51 times, 1 visits today)