தாவரவியற் பெயர்: Eriodendron anfractuosum D.C
ஆங்கிலப் பெயர் : Copok tree or white silk cotton tree

இது இலங்கை, இந்தியாவில் உஷ்ணப் பிரதேசத்தில் வளரும் மரவகையைச் சேர்ந்தது. இதன் இலை, பூ ,வித்து, பட்டை, பிசின், பஞ்சு வேர் என்பன மருத்துவத்தில் பெரிதும் பயன்படும் உறுப்புகளாகும். இலவு மரத்தினால் நீர்க்கடுப்பு ,நீரெரிவு ,வெள்ளை இவைகள் விலகும். சுக்கிலமும் இர்தாதுவும் பலப்படும். இதனை பின்வரும் மருத்துவப் பாடலில் காணலாம்.

“நீர்க்கடுப்பு நீரெரிவு நீண்டொழுகு மேகமும்போம்
ஆர்க்கும் விந்து வோடைக்கு மாண்மையுறும் பார்க்குள்
நிலவு மதிவதன நேரிழையே ! வெப்பாம்
இலவு மரத்தா லியம்பு”

மருத்துவ பயன்பாடுகளாவன

இடு மருந்துக்கு
இலவம் பட்டையை அரைத்து , எலுமிச்சங்காயளவு எடுத்து புளித்த நீரில் கலக்கிக் கொடுக்க , இடு மருந்து முறியும்.

நீரெரிச்சல் குணமாக
கத்தரி இலை, இலவு மரப்பட்டை, நெல்லிமுள்ளி, கூவிளை , சீரகம் இவை வகைக்கு 10 கிராம் எடுத்து 8 பங்கு நீர்விட்டு எட்டிலொன்றாய்க் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை பருகி வரலாம்.

இலவம் பிசின், சிற்றாமுட்டி, நெற்பொரி வகைக்கு 10 கிராம் எடுத்து மேற்கூறியவாறு குடிநீர் செய்து காலை , மாலை பருகி வரலாம்.

நீர்க்கடுப்பிற்கு
இலவம் பிசின் 70 கிராம் , கடலழிஞ்சிப்பட்டை 70 கிராம், வெள்ளுள்ளி 70 கிராம் எடுத்து 10.7 லீற்றர் தண்ணீரில் இடித்துப் போட்டு 1.3 லீற்றராக சுருக்கிக் கொள்ளவும். சுக்கு, மிளகு ,திப்பிலி, சீரகம், பெருங்காயம், முருங்கைவேர், சாரணை, கொடிவேலி ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுக்கவும், அனைத்துச் சரக்குகளையும் மேற்சொன்ன குடிநீரூற்றி அரைத்து அடுப்பில் வைத்தெரித்துக் காய்ச்சி பதத்தில் 1.3 லீற்றர் நெய்யையும் கலந்து பக்குவத்தில் வடித்திறக்கிக் கொள்ளவும். 1 தே.க.
(5 கிராம்) காலை, மாலை சாப்பிட்டுவர நீர்க்கடுப்பு குணமாகும்.

வெள்ளைக்கு
இலவுமரத்துப்பூ , குன்றிமனியின் தோலினை போக்கி உள்ளிருக்கும் பருப்பினை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் புலியம் விதைத் தோல், அத்திப்பால் இவற்றைச் சேர்த்தரைத்து வெண்ணெயில் குழைத்து 5 கிராம் காலை, மாலை உட்கொள்ள வெள்ளை குணமாவதுடன் நீரிழிவும் போம்.

இதன் பட்டை, பொன்னாங்காணிவேர், வெள்ளறுகு வேர் , முத்தக்காசு, நற்சீரகம், ஏலம், உலுவா சம எடை எடுத்து பசுப்பாலில் அரைத்து தேசிக்காயளவு பாலிற் கலக்கி காலை, மாலை குடித்துவர வெள்ளை சாய்தல், எலும்புருக்கி தீரும்.

இலவுமரத்துப் பிசின், படிகாரம், கற்கண்டு, நெல்லிவற்றல் சம எடை தூள் செய்து 10 கிராம் வீதம் மோரில் கலக்கி 2 நேரம் 3 நாள் குடிக்கவும் . இதனால் வெள்ளை நீர்ச்சுருக்கு, எரிவும் தீரும்.

இந்திரிய புஷ்டிக்கு

இதன் வித்து, இஞ்சி, உள்ளி, தேன் , நெய் , 1 முட்டை வெண்கரு இவ் 6 உம் சம எடை கூட்டி மத்தித்து கறுவா 2.1 கிராம் கூட்டிப் புசிக்கவும் . இப்படி 7 நாட்கள் சாப்பிடவும் . இப்படி புசிக்கும் காலத்தில் ஒரு பலம் (30 மி.லீ.) நல்லெண்ணெயில் 3 கிராம் குங்குமப்பூ கூட்டி இழைத்து இலிங்கத்துக்கு மேலே தடவி வரவும், இந்திரியம் அதிகரிக்கும் லிங்கம் வலிவு தரும்.

நீரிழிவு நோயிற்கு
பிசினுண்டை

இலவு, விளா, வெள்வேல், கருவேல் , இவற்றின் பிசின்களைத் தனித்தனியே பொடித்து வைத்துக் கொண்டு ஆவாரை சமூலத்தை 600 கிராம் எடுத்துப் பானையில் போட்டு 10.7 லீற்றர் தண்ணீர் ஊற்றி 2.6 லீற்றர் ஆக சுருக்கிக் காய்ச்சிக் கொண்டு வடிகட்டி இக்குடிநீரைக் கொண்டு மேற்படி பொடித்த பிசின்களை ஒன்றுசேர்த்து அரைத்து எலுமிச்சங்காயளவு எடுத்துக் கொள்ளவும். இதில் 5 கிராம் காலை, மாலை உண்டுவரலாம்.

(Visited 64 times, 1 visits today)