டாக்டர் பானுமதி
சித்த மருத்துவர்

ம்முடைய அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் உணவுப் பொருளாக தக்காளி அமைந்துள்ளது. சுவை என்பதையும் கடந்து ஏராளமான உயிர் சத்துகளும், கனிம சத்துகளும் தக்காளியில் அடங்கியுள்ளன. அதனாலேயே ‘ஏழைகளின் அப்பிள்’ என்று செல்லமாக வர்ணிக்கப்படுகிறது.

”தக்காளியின் அறிவியல் பெயர் Solanum lycopersicum என்பதாகும். நமது உடலின் சருமப் பராமரிப்புக்கும், இதய நலனுக்கும் மிகவும் நன்மை தரக்கூடியது தக்காளி. மேலும், உடல் எடை குறைப்புக்கு உதவக்கூடியது. தக்காளியில் காணப்படும் Lycopene என்ற சத்து புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கக் கூடியது.

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, விட்டமின் A, விட்டமின் B1, B2, B6 மற்றும் விட்டமின் C ஆகிய சத்துகள் தக்காளியில் மிகுதியாக அடங்கியுள்ளன. இந்த சத்துகள் சமைத்து சாப்பிடுவதனாலோ அப்படியே பச்சையாக சாப்பிடுவதனாலோ மாறுபடுவதில்லை. எப்படி எடுத்துக் கொண்டாலும் தக்காளியின் சத்துகள் குறையாமல் அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது இதன் விசேஷ சிறப்பம்சம்”

”தக்காளியில் உள்ள லைகோபீன் சிறந்த புற்றுநோய் தடுப்பானாக இருக்கிறது. பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் C ஆகியவை இதயத்துக்கு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருளாகவும், இதய நோய்களைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.

தக்காளியில் உள்ள சுண்ணாம்புச்சத்தும், விட்டமின் கேயும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது. லைகோபீன், லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துகள் கண் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.

தக்காளியில் உள்ள கொலாஜென் என்னும் பொருள் நம்முடைய சருமம், நகம், முடி மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு ஒரு முக்கிய சத்துப் பொருளாக விளங்குகிறது. இதில் காணப்படும் ஃபோலிக் அமிலம் கருவுற்ற காலங்களில் பெண்களின் கருவில் உள்ள சிசுவின் நரம்பு மண்டலத்தின் குழல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

இதில் உள்ள நியாசின் (விட்டமின் B3) என்ற உயிர்ப் பொருளானது, நம் உடலில் சேர்கிற கொழுப்பினை இரத்த நாடி மற்றும் நாளங்களில் தேங்காமல் தடுக்கிறது” .

தற்போது கடைகளில் கிடைக்கும் தக்காளி வகைகளில் நாட்டுத் தக்காளியே நமக்கு சிறந்தது. அன்றாட உணவில் சேர்மான பொருளாக மட்டும் தக்காளியை பயன்படுத்தாமல் சூப்பாகவும், பச்சையாகவும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும், தக்காளி சோஸ், தக்காளி ஜாம் போன்றவைகளைத் தவிர்த்து விடுவது நல்லது. அதில் சுவைக்காகவும், கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் ஏராளமான இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.

(Visited 58 times, 1 visits today)