சிங்கப்பூரில் புதிய வரலாற்றை எழுதத் தயாராகியுள்ள கிம் ஜாங் உன்னின்  கடந்த கால வாழ்வை திரும்பி பார்க்கலாம்.

கடந்த பல ஆண்டுகளாக, தனிமைப்படுத்திக் கொண்ட, ஒதுக்கப்பட்ட நாடாக வடகொரியா திகழ்ந்தது. இதன் அதிபர் கிம் ஜாங் உன், முதல் முறையாக உலக நாடுகளை அரவணைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். அதற்கு உதாரணமாக, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசவுள்ளார்.

கம்யூனிஸ்ட் நாடாக கருதப்படும் வடகொரியாவின் தலைவர்கள், வெளிநாட்டு பயணங்களை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங்   பயணம் செய்ய மிகுந்த அச்சப்படுவார். இந்நிலையில் வயதில் 30களில் இருக்கும் கிம், உலக அரங்கில் வடகொரியாவை தனித்து முன்னிறுத்தினார்.

விதிமுறைகளை மீறிய அணுகுண்டு சோதனைகள், ஏவுகணை சோதனைகள் என உலகை பதற்றமான சூழலிலேயே வைத்திருந்தார். நடப்பாண்டில் அமெரிக்க கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன், கிம்மை சந்தித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான ரோட்மேன், டிரம்பின் நட்பை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க கிம் ஒப்புக் கொண்டது, உலக அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கிம் ஜாங் உன் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு டிரம்பை, ஒரு மனநோயாளி, முட்டாள் என்றெல்லாம் திட்டித் தீர்த்த கிம், அமெரிக்க நல்லுறவை பெறும் அளவிற்கு மனமாற்றம் அடைந்துள்ளார். இதற்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங், தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோருடனான சந்திப்பை உதாரணமாக கூறலாம்.

கொரியா ஜனநாயக மக்கள் குடியரசின் முடியாட்சியில் மூன்றாவது தலைவராக கிம் ஜாங் உன் விளங்குகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு வடகொரியாவிற்கு தலைமைப் பொறுப்பு ஏற்ற போது, கிம்மின் வயது 20களில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது கிம் எதற்கும் உதவாதவர் என்று வடகொரிய அரசின் மூத்த தலைவர்களால் கருதப்பட்டார். ஆனால் ராணுவத்தில் சிறப்பான செயல்பாடு, கட்சியில் சிறப்பான பங்களிப்பு, சர்வாதிகார மனப்பான்மை ஆகியவற்றின் மூலம் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தனது மாமாவாகவும், வழிகாட்டுநராகவும் இருந்த ஜாங் சாங் தேக்கை, பல்வேறு அரசியல் குற்றங்களுக்காக கிம் திடீரென தூக்கிலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம்மின் சகோதரர் கிம் ஜாங் நம், பட்டப்பகலில் ரசாயனம் தடவி கொல்லப்பட்டார். அவரைக் கொன்றதும் கிம் ஜங் உன் என்று பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால் தனது சகோதரி கிம் யோ ஜாங்கை மட்டும், நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக வைத்துள்ளார். தனது அரசாங்க பயணங்களில் கிம் யோ ஜாங்கை தவறாமல் கூட்டிச் செல்கிறார். கடந்த பிப்ரவரியில் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரிய அரசாங்க பிரதிநிதியாக கிம் யோ ஜாங் கலந்து கொண்டார்.

வடகொரியாவில் மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் நடைபெறுவதாகவும், 80,000 முதல் 1,20,000 வரையிலான அரசியல் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன. உலகின் பார்வையில் சர்வாதிகாரியாக திகழ்ந்தாலும், உள்நாட்டில் அரசு ரீதியிலான நடவடிக்கைகளில் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறார்.

தனது தந்தையைப் போல் அல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் சிரித்த முகத்துடனும், அதிகாரிகளுடன் நகைச்சுவையாக பேசிக் கொண்டும் கிம் காணப்படுகிறார். இவர் தனது தாத்தா கிம் ஐஐ சங் போன்று, தலைமுடி, உடை, பாவனை, பொதுக் கூட்டங்களில் பேச்சு ஆகியவற்றை அமைத்துக் கொண்டார்.

வடகொரிய தலைநகர் யாங் யாங் மிகவும் பதற்றம் நிறைந்து, பலத்த பாதுகாப்புடன் திகழும் நகரம். அங்குள்ள ஒவ்வொருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கிம்மின் தந்தை, தாத்தா படங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அவர்களது உடல்கள் கும்சூசன் அரண்மனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வடகொரியாவை கட்டமைத்த கிம் ஐஐ சுங், 1994ல் இறக்கும் வரை அதிபராகவே திகழ்ந்தார். தனது தாத்தாவைப் போல் அல்லாமல், கிம் ஜாங் உன்னின் இளமைக் காலம் ஜப்பானியர்களுக்கு எதிரான போராட்ட சூழல் நிறைந்து காணப்பட்டது. அதேசமயம் கிம் ஆடம்பரமாகவே வளர்க்கப்பட்டார்.

கிம் ஜாங் உன், தனது தந்தையின் மூன்றாவது மனைவியான ஜப்பானில் பிறந்த கொரிய நடன மங்கை கோ யோங் ஹூயிற்கு பிறந்தார். அவர் கடந்த 2004ல் மார்பக புற்றுநோய் காரணமாக இறந்ததாக நம்பப்படுகிறது. கிம் ஜாங் உன்னின் பெரும்பாலான பின்னணி, மர்மங்கள் நிறைந்த பகுதியாக திகழ்கிறது.

கிம்மின் பிறந்த நாள் கூட தெளிவில்லாமல் தான் இருக்கிறது. தனது 8வது வயதில் அதிபரின் சீருடை ஒன்றை பெற்றுக் கொண்டார். அதிலிருந்து தன்னை வடகொரியாவின் அதிபராகவே சித்தரித்துக் கொண்டார். கிம் சுவிட்சர்லாந்தில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

அங்கு தாய் வழி அத்தையான கோ யாங் சுக் மற்றும் அவரது கணவரிடம் வளர்ந்தார். பள்ளியில் கிம் ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று யாருக்கும் தெரியாது. மிகவும் கூச்ச சுபாவம் நிறைந்தவராக, பனிச்சருக்கு, ஹாலிவுட்டின் ஜீன் – கிளாடே வான் டம்மி, கூடைப்பந்து ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார்.

தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், கிம் ஜாங் உன் சந்திப்பை உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

(Visited 159 times, 1 visits today)