நோய்களின் எதிரி திராட்சை
2017-08-14 14:11:10 | General

"உலகின் எல்லா நாகரிக வரலாற்றிலும் இடம்பெற்ற பழம், திராட்சை. எந்தப் பருவத்திலும் கிடைக்கக் கூடிய பழம். விட்டமின், தாது உப்புக்கள், அன்டி ஒக்சிடன்ட் நிறைந்தது. கறுப்பு, பச்சை என இரண்டு வகைகள் இருந்தாலும்,  இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறது சித்த மருத்துவம்'.


"திராட்சைக்கு, சித்த மருத்துவத்தில் கொடிமுந்திரி, முந்திரிகை, மதுரசம் எனப் பல பெயர்கள் உண்டு. 100 கிராம் திராட்சையில், 70 கலோரி, ஒரு கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.  இதில், நம் உடலுக்கு நாள் ஒன்றுக்குத் தேவையான ஆறு சதவிகிதம் விட்டமின் சி, பி6 தையமின், நான்கு சதவிகிதம் ரிபோஃபிளேவின், இரண்டு சதவிகிதம் விட்டமின் ஏ கிடைத்துவிடும். விட்டமின் பி6 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது' .

"திராட்சை, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இரத்தக் குழாய்ச் சுவரைத் தளர்வாக்கி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் உடலில் உள்ள திசுக்களுக்கு ஒக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்களை போதுமான அளவு கிடைக்கச் செய்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மலச்சிக்கலைப் போக்குவதற்கும் அருமருந்து!


குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்கும்போது, வயிறு தொடர்பான பிரச்சினை  ஏற்படும். அவர்களுக்கு தினசரி ஒன்று இரண்டு திராட்சையைக் கொடுத்துவருவதன் மூலம் இந்தப் பிரச்சினை யைத் தவிர்க்கலாம். திராட்சைச் சாறு நுரைத்துப் பொங்கும்போது, அதன் அடியில் தங்கும் படிவுக்கு, திராட்சை உப்பு என்று பெயர். இதில், டார்டாரிக் அமிலம்' நிறைந்து இருப்பதால், இது மலச்சிக்கலுக்குச் சிறந்த மருந்தாகும். திராட்சையில் தயாரிக்கப்படும் கஷாயத்தைப் பருகுவதன் மூலம் வரட்டு இருமல் போகும். உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி அடையும்.


செல் அளவில் ஏற்படக் கூடிய தாக்கம் மற்றும் வீக்கங்கள்தான் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம். திராட்சையில் இருக்கும் அன்டி ஒக்சிடன்ட் மற்றும் வேதிப்பொருட்கள், ஒரு புற்றுநோய்த் தடுப்பாக மாறுகின்றன. மார்பகப் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய், புரொஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிரான ஆற்றல் திராட்சையில் உள்ளதாக, பல ஆய்வுகள் கூறுகின்றன. உலர் திராட்சையிலும் கூட அதிக மருத்துவப் பலன்கள் உண்டு.


சூரிய ஒளியில் உலர்த்தித் தயாரிக்கப்படும் உலர் திராட்சையை, நெஞ்சில் சளி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.  பழத்தைப் போலவே இதுவும் மலமிளக்கியாகச் செயல்படும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றும் பணியை உலர் திராட்சை செய்கிறது.

குழந்தைகளுக்கு இதைச் சாப்பிடக் கொடுக்கலாம். இதனால் பற்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. மேலும் பற்சிதைவும் தடுக்கப்படும். இதில் அதிகப்படியான இரும்புச் சத்து உள்ளதால், இரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிட்டுவந்தால் நல்ல நிவாரணம் பெறலாம்.


தேர்வு நேரங்களில் மாணவர்கள், சிறிது உலர் திராட்சைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் சோர்வு, மறதி ஆகியவற்றைத் தவிர்க்கலாம். சுறுசுறுப்பும் கிடைக்கும். அதிகப்படியான மது உட்கொள்பவர்கள், ஆல்கஹோலினால் உடல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சைப் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.


சித்த மருத்துவம் என்பது நம் நாட்டில் உள்ள காய்கறிகள், பழங்கள், மூலிகைகளைக்கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தக் குணங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் விதை இல்லாப் பழங்களில் எதிர்பார்க்க முடியாது. இதில் உள்ள சத்துக்கள், இறக்குமதியான பழங்களில் இருக்கவும் இருக்காது. மேற்
சொன்ன குணங்கள் நம் நாட்டுப் பழங்களில் மட்டுமே உண்டு.

மரபணு மாற்றப்பட்ட, செயற்கை விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படுபவை உடலுக்குக் கெடுதலையே தரும். திராட்சைச் செடியைப் பாதுகாக்க, அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், நன்கு கழுவிய பின் உண்பதே சிறந்தது'.

 

comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
f9mjj
  PLEASE ENTER CAPTA VALUE.