ஃபிரைட் ரைஸ் சாப்பிடலாமா?
2017-08-08 17:10:24 | General

அது தெருக் கடையோ, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோ  தவிர்க்க முடியாத ஓர் உணவாகிவிட்டது ஃபிரைட் ரைஸ். சிக்கன், மட்டன்,  மஷ்ரூம், பனீர், முட்டை... என நீள்கிற இந்த வறுத்த உணவு (சோறு) பலருக்குப் பிடித்த, பலர் அன்றாடம் சாப்பிடுகிற ஒன்று. எளிமையான செய்முறை, எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற வசதி, சாப்பிடும்போது கிடைக்கும் அலாதிச் சுவை மற்றும் திருப்தியான உணர்வு ஆகியவை இதன் பக்கம் பெரும்பாலானவர்களைத் திரும்ப வைத்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. 

தொட்டுக்கொள்ள கொஞ்சம் டொமட்டோ அல்லது சில்லி சோஸ் போதுமானது; கூடுதலாக பனீர் மசாலாவோ, சிக்கன், மட்டன் உள்ளிட்ட கிரேவியோ இருந்தால், விருந்துக்குச் சமமானது ஃப்ரைட் ரைஸ்.


ஒரு ரோட்டோரக் கடையில் எப்படி ஃப்ரைட் ரைஸ் தயாரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே சிலருக்கு நாக்கில் சுவை ஊற ஆரம்பித்துவிடும். பெரிய கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, குடமிளகாய், பீன்ஸ், கேரட் காய்கறிகளைப் போட்டு லேசாக வதக்குவார்கள். பிறகு மிளகு, மிளகாய், உப்பு, மசாலா எனப் பொடி வகைகள்.

அத்துடன் சோறு சேர்த்துக் கிளறும்போது எல்லாம் ஒன்றோடு ஒன்று கலப்பதற்கு ஏற்ப அடுப்பின் தீயை, கூட்டியும் குறைத்தும் ஜாலம் செய்வார்  சமைப்பவர். கடைசியாக, கடாயோடு சேர்த்துத் தூக்கி, ஒரு குலுக்குக் குலுக்குவார். “ஃப்ரைட் ரைஸ் தயார்' என அர்த்தம்.  


மிச்சமான, ஆறிப்போன உணவைச் சாப்பிட முடியாத சீனர்கள், கண்டுபிடித்ததுதான் ஃப்ரைட் ரைஸ் என்பவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வெரைட்டி; ஆனால், செய்முறை என்னவோ கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான். முக்கியமான சேர்மானம் வேகவைத்த சோறு. சைவப் பிரியர்கள் காய்கறிகளைச் சேர்த்தும், அசைவப் பிரியர்கள் முட்டை தொடங்கி, மட்டன் வரை சேர்த்தும் ஃப்ரைட் ரைஸ் தயாரிக்கிறார்கள்.

இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை என பல நாடுகளில் ஆழமாக வேர் பதித்து வளர்ந்து நிற்கிறது இந்த உணவு. என்ன... இதில் சேர்க்கப்படும் வாசனைப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களில் மட்டும்தான் சின்னச் சின்ன வேறுபாடு இருக்கும். 


 ஃப்ரைட் ரைஸ் எந்த பக்கவிளைவுகளையும் நம் உடலுக்கு ஏற்படுத்தாதது; ஆரோக்கியமானது; மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனாலும், நம் தெருவில் இருக்கும் குட்டி ஹோட்டல் வரை வந்துவிட்ட இது நம் உடலுக்கு, நம் வாழ்வியல் முறைக்கு ஏற்றதுதானா? 
ஃப்ரைட் ரைஸ் எளிதாகச் செய்யக் கூடிய ஓர் சீன வகை உணவு.

இது நம் உடல்நலத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கக் கூடியதும்கூட. இதில் சேர்க்கப்படும் எண்ணெய், நம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரோல் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில் உள்ள அதிகப்படியான எண்ணெய், வயிற்றைப் பாதித்து, அதிக அசிட் உருவாக வழிவகுக்கும். இது, குடலுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தும். இதில் உள்ள எம்.எஸ்.ஜி. (MSG Monosodium glutamate) தலைவலியை வரவழைக்கக் கூடியது. இந்த எண்ணெய் சேர்த்த உணவு வயிற்றைக் காலியாக்காமல் நீண்ட நேரம் தங்கியிருப்பதால், வயிற்று உப்புசம் ஏற்படும். 


ஃப்ரைட் ரைஸை அதிகம் சாப்பிட்டால், இதில் சேர்க்கப்படும் அதிக அளவிலான உப்பு, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த உயர் இரத்த அழுத்தம் பல இதய நோய்கள் ஏற்பட வழியமைத்துக் கொடுத்துவிடும். இதய நோய்கள் இருப்பவர்கள், இந்த உணவைத் தவிர்ப்பதே நல்லது. அரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதிகப் பசியோடு இருக்கும்போது ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டால், அந்த அரிசியின் மூலமாக உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்து, உடல்பருமன் வரை கொண்டுபோய் விட்டுவிடும்.

அதோடு சிக்கன், மட்டன் என இறைச்சி சேர்ந்தது என்றால், எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும். அதிலும் பயன்படுத்தப்படும் பிரொய்லர் கோழி, ஆட்டிறைச்சி எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பதிலும் உத்தரவாதம் இல்லை. எனவே, ஃப்ரைட் ரைஸ் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால், குறைவான எண்ணெய் ஊற்றி, வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.


ஹோட்டல்களிலும், இதற்கான பிரத்தியேகக் கடைகளிலும் எந்த எண்ணெயை ஊற்றுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை திரும்பத் திரும்பப் பயன்படுத்திய எண்ணெய் என்றால், அது நம் உடலுக்கு அதிக கொலஸ்ட்ரோல் சேர்ப்பது உட்பட, எத்தனையோ உடல் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

இறைச்சியாகட்டும், காய்கறியாகட்டும்... அவற்றின் சுத்தம் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. முக்கியமாக, நம் ஊரில் இதில் சேர்க்கப்படும் வினிகர், அஜினோமோட்டோ போன்றவை நம் உடலுக்கு ஏற்றவை அல்ல. ஆசைப்படுகிற குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை... சுகாதாரமான முறையில் வீட்டில் தயாரித்துக் கொடுக்கலாம்.

 

comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hzm6n
  PLEASE ENTER CAPTA VALUE.