'கவலைப்படாதீர்கள்' இதய நோய் வந்துவிடும்
2017-06-12 12:54:56 | General

புகைபிடித்தல், புகையிலைப் பொருட்கள் உபயோகித்து அந்த உமிழ் நீரை விழுங்குவது, மூக்குப்பொடி பழக்கம் இவையெல்லாம் இதய நோய் வருவதற்கான அடிப்படைக் காரணங்கள். புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதயநோய் வரும்... பழக்கம் உள்ளவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.


எப்படிப்பட்டவர்களை அதிகம் பாதிக்கும்?


இரத்தக் கொதிப்பு, அதிகமான உப்பு, அதிக எடை, ஒபிசிட்டி (உடல்பருமன்), உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான கொழுப்பு உடையவர்களாக இருப்பவர்கள்.


அப்படியானால் கொழுப்பு கெட்டதா?


கொழுப்பில், எச்டிஎல் வகை கொழுப்பு  உடலுக்கு நன்மை தரக்கூடியது. இது ஆண்களுக்கு 40 மில்லி கிராமும் பெண்களுக்கு 50 மில்லி கிராமும் இருக்க வேண்டும். ஆனால், இந்தியர்களுக்கு 30 மில்லி கிராமுக்கும் குறைவாகத்தான் இந்தக் கொழுப்பு இருக்கிறது.


தீங்கு விளைவிக்கும் கொழுப்பு எது?


டிரைக்ளிசரைட்ஸ் வகை கொழுப்பு  உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இது உடலில் அதிகம் சேர்வதால் இதயநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. நம் நாட்டில் டிரைக்ளிசரைட் கொழுப்பு உடையவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.


இந்தக் கொழுப்பு சேராமல் இருக்க... இதயநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?


இதய நோய் வராமல் இருக்க வேண்டுமானால், நீரிழிவு நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.


அப்போ மற்றவங்களுக்கு..?


இப்படி எந்தப் பிரச்சினையுமே இல்லாதவர்களுக்குக்கூட இதய நோய் வரும். மருத்துவ துறையில் இதை அசோஸியேட் ரிஸ்க் ஃபேக்டர் என்று அழைக்கிறோம். காரணம், அவர்களுக்கு எதனால் இதயநோய் வருகிறது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.


சரி, இதயநோய் வராமல் இருக்க என்ன செய்வது?


காய்கறி,  பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக 150லிருந்து 260 கிராம் வரை காய்கறியும் அதே அளவு பழமும் உட்கொள்வதால் இதயத்துக்கு போகும் இரத்தக் குழாய்களில் அடைப்பு வராமல் இருக்கும்.


பின்னர்?


தினமும் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது அவசியம். நோய் உள்ளவர்கள் மட்டும்தான் என்று இல்லை, பொதுவாக எல்லோருமே தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.


அவ்வளவுதானா?


தியானம், யோகா, நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவதாலும் இதய நோய் வராமல் தடுக்கமுடியும். இயந்திரத்தனமான வாழ்க்கையால், யாருமே உடற்பயிற்சிக்காக இன்று நேரம் ஒதுக்குவது இல்லை.


உடலைப் பேணினால் போதுமா?


மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் இதய நோய் வராது. அதற்கு அதிகமான பணிச்சுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பதற்றம் கூடவே கூடாது.


அது தவிர... வேறென்ன செய்ய வேண்டும்?


சரியான தூக்கம்... இது மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 6 மணி நேரத் தூக்கம் ஒரு மனிதனுக்கு அவசியம்.


சரி, இதயநோய் வந்திருப்பதை எப்படி அறிவது?


சாப்பிட்டுவிட்டு நடக்கும்போதோ, கையில் பளுவுடன் நடக்கும்போதோ நெஞ்சை அழுத்துவது மாதிரி ஒரு வலி ஏற்பட்டால் அது இதய நோயாக இருக்கலாம்.


அது சாதாரண வலியாகக் கூட இருக்கலாமே?


பலரும் இப்படித்தான் அலட்சியம் காட்டுகிறார்கள்... இப்படிப்பட்ட பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் வெறும் வயிற்றில் நடந்தாலும், பளுவின்றி நடந்தாலும் நெஞ்சை அழுத்துவது மாதிரி வலி ஏற்படத் தொடங்கும். இது நோய் முற்றி வருவதற்கான அறிகுறி.


அப்படி வந்தால் அது அட்டாக்கா?


சிலருக்கு திடீரென்று வேர்த்து விறுவிறுக்கும், சோர்வடைவார்கள். இது சைலன்ட் ஹார்ட் ஹட்டாக். இந்த வகை தாக்குதலையும் உடனே கவனிக்க வேண்டும்.


நோய் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?


இதயத்துக்கு செல்லும் மூன்று இரத்தக் குழாய்களில் ஒரு குழாயில் மட்டும் அடைப்பு ஏற்பட்டால் சுலபமாக அடைப்பை நீக்கிவிட முடியும். இரண்டு மற்றும் மூன்று குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டால், பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம்தான் அந்த அடைப்பை நீக்க முடியும்.


சத்திரசிகிச்சைதான் ஒரே தீர்வா?


ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கு மாத்திரையின் மூலமும், அதிலும் முடியாமல் போனால், ஆன்ஜியோபிளாஸ்டி முறையிலும், அதற்கடுத்த நிலையாக அறுவை சிகிச்சை மூலமும் இதய அடைப்பை சரிசெய்ய முடியும்.


சத்திரசிகிச்சை செய்தால் நடமாட முடியுமா?


பலருக்கும் இருக்கும் சந்தேகம் இது. நோயோடு இருக்கும்போது நடமாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நோய் தீர்ந்த பிறகு ஏன் இந்த சந்தேகம் வருகிறது. உடல்நிலையைப் பொறுத்து எல்லா வேலைகளையும் முன்பு போலச் செய்யமுடியும்.

சத்திரசிகிச்சைக்கு பிறகு என்ன மாறுதல் தேவை?


சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்கள் அந்தக் காயம் ஆறும் வரையில் ஓய்வாக இருக்கவேண்டும். அதன்பிறகு டாக்டரின் ஆலோசனையின் பேரில் சகஜமாக வாழலாம். ஆனால், தேவையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும். பழைய தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும்.


மீண்டும் வருமா இதயநோய்?


அது உங்கள் நடவடிக்கையைப் பொறுத்த விடயம்... இதயத்துக்கு தொல்லை கொடுக்காத வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால் சிக்கலில்லை. முறையான மருந்து மாத்திரைகள், சீரான இடைவெளியில் மருத்துவ ஆலோசனை என்று வாழ்ந்தால் நூறு வயது வாழலாம்!

comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
p9zlc
  PLEASE ENTER CAPTA VALUE.