காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்த அமர்வு மாத்தறையில் நாளைமறுதினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முதலாவது அமர்வு, மன்னாரில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிலையில் இதன் அடுத்த அமர்வு மாத்தறையில் இடம்பெறவுள்ளதோடு, காலை 9.30க்கு காணாமல் போனவர்களின் உறவினர்களையும், முற்பகல் 11.30 மணிமுதல் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் காணாமலாக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்களையும் அலுவலக அதிகாரிகள் சந்திப்பார்கள் என தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்போது, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில், அலுவலகத்தின் ஆணையாளர்களான ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹான் பீ பீரிஸ், கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹீம், சட்டத்தரணி சோமசிறி லியனகே மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

(Visited 31 times, 1 visits today)