கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இரண்டு வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயும், தந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை ஹிஜ்ரா வீதியில் கடந்த திங்கடகிழமை மாலை திடீரென உயிரிழந்த 2 வயது சிறுவனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தாது தந்தையும் தாயும்​ அடக்கம் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூர்மையில்லாத ஆயுதம் ஒன்றால் பல தடவைகள் தாக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையூடாக தெரியவந்துள்ளது.

சிறுவனின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சந்தன பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, கொலை என்ற அடிப்படையில் சிறுவனின் தாயும், தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் சிறுவனின் உண்மையான பெற்றோர் அல்லவென்ற விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பு – தொட்டலங்க பகுதியில் வசித்த தம்பதியினரின் மகனையே தாம் வளர்த்து வந்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

சிறுவனின் பெற்றோர் வௌிநாடு செல்வதால், தாம் சிறுவனை வளர்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், சிறுவனை வளர்ப்பதற்கான எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிறப்புச் சான்றிதழும் இதுவரை பெறப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் புதுக்கடை இலக்கம் 4 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

(Visited 33 times, 1 visits today)