மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்துக்குள்ளான இளம் யுவதிகள் இருவரில் ஒருவர் மீது, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்டபோது, அவர்கள் இருவரும் மதுபோதையில் நிலை தடுமாறி இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து நேற்று வெளியேறினர். அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

23 மற்றும் 24 வயதுடைய பெண்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மது போதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படுமென கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 19 times, 1 visits today)