ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஐதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதில் பின் வரிசையில் உள்ள அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை  இரவு நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இதுவரை தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி கண்டு 12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தனது கடந்த 3 லீக் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியை சுவைத்து கம்பீரம் கண்டுள்ளது. அந்த அணி வீரர் ஜோஸ்பட்லர் அடுத்தடுத்து 5 அரை சதம் அடித்து பேட்டிங்கில் அசத்தி வருகிறார். பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் அபாரமாக விளங்குகிறார். அவர் 7 ஆட்டங்களில் ஆடி 13 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். ரஹானே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அந்த அணிக்கு அவசியமானதாகும்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி அடுத்தடுத்து சந்தித்த 2 தோல்வியில் இருந்து மீண்டு வந்து கடைசி லீக் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி நம்பிக்கை பெற்றுள்ளது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 245 ரன்கள் குவித்தது. கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார்கள். சுனில் நரின் இதுவரை 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வி காணும் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி அடுத்த அணிகளின் முடிவுக்காக காத்து இருக்க நேரிடும். வெற்றி பெறும் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி முயற்சிக்கும். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறையும்இ கொல்கத்தா அணி 7 தடவையும் வென்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

(Visited 18 times, 1 visits today)