பாக்கியராஜா மோகனதாஸ்-

லக்கியத் துறை சார்ந்தோர்களிடம் அதிக காழ்ப்புணர்ச்சி, போட்டி, பொறாமை, நானா? நீயா? என்கின்ற அகம்பாவம் விரவிக் கிடக்கிறதென்பது வெளிப்படையான உண்மை. இவ்வாறான சவால்கள் இலட்சியம் நோக்கிய இலக்கிய பயணத்திற்கு பெரும் சாபமாக அமைகிறது. இவை முற்றாக களையப்பட வேண்டும் என கே.எம்.ஏ.அஸீஸ் கூறுகின்றார்.

கேள்வி : கவிதை, கட்டுரை, காவியம் என்று பல்துறைகளில் தடம் பதித்திருந்தாலும் உங்களுக்கு நாட்டமான துறையை, அத் துறைக்குள் ஈடுபாடு வருவதற்கான பின்னணியை குறிப்பிட முடியுமா?

பதில் : ஏனைய துறைகளை விடவும் சமூகத்திற்கு நாம் சொல்ல விழையும் கருத்தை கவிதை ஊடாக சமர்ப்பிக்கும்பொழுது அதனை படிப்போர் மனதிலும் இது ஆழமாக பதிந்து விடுகிறது. சாதாரண தரத்தில் இலக்கிய பாடத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த கவிஞர் சாரண பாஸ்கரனினால் எழுதப்பட்ட யூசுப் சுலைஹ எனும் காதல் வரலாற்று சம்பவத்தை, தன் ஆளுமையான கவிதா வரிகளுக்குள் அவர் நெறிப்படுத்தியிருந்த முறைமை இன்றும் என் அடிமனதில் அழியாது ஆழமாக பதிந்திருக்கும் பின்னணியின் உந்துதலினால்தான் என்னையும் கவிதை துறைக்கு ஈர்க்கச் செய்தது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்வி : பாடல்கள் இயற்றுவதற்கான உந்துதல் மற்றும் சிந்தனை எவ்வாறு ஏற்பட்டது, இற்றை வரை எவ்வாறான பாடல்களை எழுதியுள்ளீர்கள்?

பதில் : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் நிகழ்ச்சியின் போது அடிக்கடி பல விதமான இஸ்லாமிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தன. அவற்றை கேட்கின்ற போதெல்லாம் ஏன் நாமும் இது போன்ற பாடல் எழுதலாம் தானே என்ற ஒரு உந்துதல் என்னுள் எழும். அதனாலேற்பட்ட தாக்கத்தினாலேயே ஐம்பதிற்கு மேற்பட்ட பாடல்கள் என்னால் எழுதி, இசையமைக்கப்பட்டு சங்கீத ஆசான் கலாபூசணம் எம்.எம்.எம்.மஹ்×ப் அவர்களால் ரூபவாஹினியில், வானொலியில் பாடல்களாக இசைக்கப்பட்டன.

நிந்தவூர் அல் அஸ்றக் உயர்தரப் பாடசாலையில் எனது காலை வந்தனப் பாடல் இசைக்கப்பட்டு அவர்களால் வெளியீடப்பட்ட சஞ்சிகையொன்றிலும் பிரசுரமாகியுள்ளது. சாய்ந்தமருது தனியார் சிறுவர் பாடசாலை ஒன்றிலும் எனது பாடல் காலை வந்தனப் பாடலாக இசைக்கப்பட்டு வருகிறது. மேலும் எனது ஊரான சாய்ந்தமருதைப் பற்றி நான் எழுதிய “எங்கள் தாயகமே’ எனும் பாடல் கல்முனை சாஹிறா கல்லூரியில் நடந்த விழாவொன்றின் போது சங்கீத ஆசிரியர் மாஹிரால் இசைக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கேள்வி : ஈழத்து இலக்கியப் பரப்பில் காவிய படைப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களின் வரிசையில், விரல் விட்டே எண்ணக்கூடியதாகவுள்ளது, அவ் வகையில் உங்களின் காவிய முயற்சிக்கு பின்னணியாக இருந்த விடயங்கள் ?

பதில் : காவியத் துறையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலருள் நீலாவணன், காப்பியக்கோ ஜின்னாஜ் சரிபுத்தீன், கலாபூசணம் பாலமுனை பா×க் ஆகியோரைக் குறிப்பிடலாம். 2004 ஆண்டு நிகழ்ந்த சுனாமியின் சீற்றமும் அதனால் எழுந்த மக்களின் மனமாற்றமுமே எனது காவிய முயற்சிக்கு பின்னணியாகவிருந்தது.

கேள்வி : புரவலர் புத்தகப் பூங்கா வெளியீடான “கனலாய் எரிகிறது’ என்ற கவிதை தொகுதி எவ்வாறு வெளிவந்தது ?

பதில் : 2007 ஆண்டிற்கு முன் பத்திரிகைகள் ஊடாக ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. ஆளுமையான சிறந்த கையெழுத்துப் பிரதிகளை புத்தக பூங்காவிற்கு அனுப்பி வைக்குமாறும், தேர்வுக்குழுவின் இறுதி முடிவில் தெரிவானவற்றை இலவசமாக அச்சுவாகனமேற்றி வெளியீட்டு வைப்பதென்ற விளம்பரத்தின் ஊடாக பூங்காவிற்குள் புகுந்து மணம் பரப்பியதை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது. பூங்காவின் ஸ்தாபகர் தலைவரையும் அதனோடிணைந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்.

கேள்வி : ஆக்க இலக்கியப் படைப்பான கவிதை துறையில் இன்றைய இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது ?

பதில் : பத்திரிகைகளில் பெயர் வரவேண்டும் பிரபலமாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் பலர் கவிதையின் கருப்பொருளை ஆழத்தை மறந்துவிடுகிறார்கள். கவிதை எழுதிய உடனே ஊடகங்களுக்கு அவசரப்பட்டு அனுப்பாமல் அதனை பலமுறை வாசித்து தேவையான சொற்களை சேர்த்து செப்பனிட்டு அனுப்பும்பொழுது ஆரோக்கியமான படைப்பாக அது அமையும். இவ்வாறான சிறந்த படைப்பாளிகள் நம்மில் பலர் இனம் காணப்பட்டிருக்கிறார்கள் என்பதை மனத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளலாம்.

கேள்வி : கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியத்தினை நூலிலும் இசையமைத்து பாடலாக்கி இறுவட்டிலும் வெளிக்கொணர்ந்தீர்கள், இவ் வகையில் இவற்றிற்கு உறுதுணையாக இருந்தவர்களின் செயற்பாடுகளை கூற முடியுமா ?

பதில் : ஆழிக்கடலலை திடீரென பொங்கியெழுந்து ஆர்ப்பரித்து பல நூற்றுக்கணக்கான உயிர்களையும் உடமைகளையும் காவு கொண்டு அழித்தொழித்த சுனாமி அரக்கனின் கோரங்களை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்வதற்காக அக்காட்சிகளை இசை ஊடாக இறுவட்டிலும் நூலாகவும் வெளியீட்டேன். இயற்கை காட்சிகளின் கோரங்களையும் பாடலையும் இறுவெட்டில் பதிவேற்றிய, சாய்ந்தமருது பிரதேச சபையில் பணியாற்றி வரும் சோதரர் ஜாபிருக்கும் பாடலை இசையமைத்து இதயம் நெகிழ பாடி உதவிய கல்முனைக்குடியைச் சேர்ந்த சாமஸ்ரீ இசைவாணர் எம்.ஏ.கபூருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை இத்தருணத்திலும் கூற விழைகிறேன்.

கேள்வி : இலக்கியத் துறையில் இளம் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் வீழ்ச்சியடைந்து செல்வதனை யாவரும் அறிவர். அவ்வகையில் இவ்வாறான ஆரோக்கியமற்ற நிலைமையினை நிவர்த்தி செய்ய பொறுப்பெடுக்க வேண்டியவர்கள் என்று நீங்கள் யாரைக் கருதுகின்றீர்கள். ?

பதில் : உண்மையில் உங்கள் கேள்வியின் யதார்த்தம் என்றோ உணரப்பட்ட ஒன்றுதான். நமது பகுதிகளில் எத்தனையோ கலையிலக்கிய வட்டங்கள் பேருக்கும் புகழுக்குமாக அங்கும் இங்குமாக புற்றீசல்கள் போல புறப்பட்டு தன்னை சார்ந்தவர்களை மட்டும் அழைத்து பொன்னாடை, விருது, புகழாரம் என்றெல்லாம் முத்திரை குத்தி அழகு பார்க்கிறதே தவிர வளர்கின்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டிலோ, வசதி குறைந்த படைப்பாளிகளின் நூல்களை சந்தைப்படுத்த உதவுவது, படைப்புகள் இருந்தும் அதனை வெளியீடுவதற்கான வசதி வாய்ப்பு இல்லாதோர்க்கு சமூக நலன் விரும்புவோர்களிடம் சென்றாவது வசதி வாய்ப்பற்றவர்களின் ஆக்கங்களை நூலுருப்பெற ஒத்துழைப்பு வழங்குவது ஆகியவை இன்றைய காலகட்டத்தில் இல்லாமல் போனதே இவ்வாறான வீழ்ச்சிகளுக்கு முக்கிய காரணமாகும். இலக்கியத்தின் அருமை இலக்கியவாதிகளுக்கு புரியவில்லையெனில் இதனை யாரிடம் சொல்வது.

கேள்வி :இலக்கியத் துறையில் உங்களுக்கு ஏற்பட்ட சவால்கள் மற்றும் வரவேற்புகள் தொடர்பாக நீங்கள் கூற விழைவது?

பதில் : இலக்கியத் துறை என்பது தற்போதைய சூழலில் எனக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் சவால்கள் நிறைந்ததுதான். ஏனைய துறையினரையும் இலக்கியத் துறையினரையும் ஒப்பிட்டளவில் உற்றுநோக்கும் போது இலக்கியத் துறை சார்ந்தோர்களிடம் அதிக காழ்ப்புணர்ச்சி, போட்டி, பொறாமை, நானா நீயா என்கின்ற அகம்பாவம் விரவிக் கிடக்கிறதென்பது வெளிப்படையான உண்மை. இவ்வாறான சவால்கள் இலட்சியம் நோக்கிய இலக்கிய பயணத்திற்கு பெரும் சாபமாக அமைகிறது. இவை முற்றாக களையப்பட வேண்டும். இந்த சவால்களின் மத்தியில் சில வரவேற்புகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.

கேள்வி;உங்களது கவிதை மற்றும் இலக்கிய பணியினை உங்களது உறவினர்கள் முன்னெடுத்து செல்கின்றனரா?

பதில் : எனது மூத்த மகள் ஹஸீனா, இளைய மகள் நஸீபா ஆகியோர் கவிதை துறையில் ஈடுபட்டு செய்தித் தாள்களிலும் ஒரு சில கவிதைகளை எழுதி வருகின்றனர்.

கேள்வி : உங்கள் கவிதை மற்றும் படைப்புகளுக்கு கிடைத்த வரவேற்புகள் பற்றி குறிப்பி முடியுமா?

பதில் : 1982 ஆம் ஆண்டு இந்து கலாசார அபிவிருத்தி அமைச்சு தேசிய மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசினையும் அதே ஆண்டில் வலம்புரி கவிதா வட்டத்தின்(வகவம்) தேசிய மட்டத்தினாலான கவிதைப் போட்டியில் பதினாறு சிறந்த கவிஞர் தேர்விலும் உள்வாங்கப்பட்டிருந்தேன்.

1984 ஆண்டு கப்பல் துறை அமைச்சின் ஆதரவில் ஆக்கவுரிமை வியாபாரக்குறி பதிவகத்தினால் தேசிய ரீதியிலான இலக்கிய போட்டியில் இருபத்தைந்து தமிழ்க் கவிதை தொகுதிகளில் ஒருவரை மட்டும் தேர்வு செய்ததில் எனது கவிதை தொகுப்பு அதி சிறந்ததாக தெரிவாகி ஐயாயிரம் ரூபாய் பணப் பரிசினையும் சான்றிதழினையும் பெற்றிருந்தது.

1995 ஆம் ஆண்டு மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தின் தேசிய ரீதியிலான கவிதைப் போட்டியில் ஒரு கொடி மலர்கள் என்ற கவிதை பரிசு பெற்று அவ் அமைப்பினால் வெளியிடப்பட்டு இன ஐக்கியம் இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் பிரதேச மட்ட கவிதைப் போட்டியில் நீதியே நீ தீயானாய் என்ற கவிதை முதலாம் பரிசினை சுவீகரித்துக் கொண்டது. அதே திணைக்களத்தினால் 2017 இல் இடம்பெற்ற பாடல் ஆக்கப் போட்டியில் “அழுகின்ற மழலைக்காய் அமுதூட்டும் தலாட்டு’ எனும் தொகுதி, பிரதேசத்திலும் மாவட்டத்திலும் முதல் பரிசினை பெற்றிருந்தது.

செரோ ஸ்ரீலங்கா அமைப்பினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசினையும் ஜப்னா முஸ்லிம் இணையம் தேசிய மட்ட கவிதைப் போட்டியில் சிறந்த கவிதை எழுதிய அறுவருள் நானும், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தேன்.

கேள்வி : உங்களுக்கு கிடைத்த விருதுகள் மற்றும் வரவேற்புகள் சார்ந்து கூற விழைவது?

பதில் : 2010 இல் அரச அங்கீகாரம் பெற்ற கலாபூசணம் விருதினையும், 2012 இல் கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதினையும், 2015 இல் மருதம் கலைக்கூடத்தினால் கவிப்புனல் பட்டத்தினையும், 2015 இல் லக்ஸ்டோ மீடியா நெற்வேர்க் ஸ்ரீலங்கா அமைப்பினால் தேடல் விருதினையும் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையினால் 2015 ஆம் ஆண்டுக்கான மேம்பாட்டு விருதினையும், 2017 இல் கலாசார திணைக்கள சாய்ந்தமருது பிரதேச சபையினால் கலைஞர் சுவதம் பாராட்டும் கிடைத்திருந்தது.

கேள்வி : நீங்கள் மிக அண்மையில் வெளியிடவுள்ள நூல்கள் தொடர்பாக கூற விழைவது?

பதில் : “ஈறலின் கீறல்கள்’ எனும் கவிதை தொகுதியினையும் அழுகின்ற மழலைக்காய் அமுதூட்டும் தலாட்டு எனும் பாடல் தொகுப்பினையும் வெளியீடவுள்ளேன்.

கேள்வி : உங்கள் இலக்கிய முயற்சிகள் மற்றும் படைப்புகளுக்கு, ஏணியாக இருந்து களம் அமைத்து தந்தவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது ?

பதில் : இலக்கிய முயற்சிகளுக்கு வித்தாக உரம் போட்ட ஊடகங்களை எளிதில் மறந்து விடுவதென்பது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். அந்த வகையில் எனது உயர்வுக்கு ஊன்றுகோலாய், உயிர் நாடியாய் அமைந்த தினக்குரல், தினகரன், வீரகேசரி, விடிவெள்ளி, நவமணி, சுடர்ஒளி, செங்கதிர், தினமுரசு, செந்தூரம் என அனைத்தும் எனது இதயத்தின் அழியாச் சொத்துக்கள். அத்தோடு ரூபவாஹினி கூட்டுத்தாபனம், பிறை பண்பலை ஆகிய ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இதய காணிக்கையாக்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

 

(Visited 56 times, 1 visits today)