ரமேஷ்காந்த் ஜெயசீலன்
“கதை வசனம் என்பது நாடகத்திற்கு மட்டுமல்லாமல் திரைப்படம், நாவல், சிறுகதை, தொடர் கதை… என சகல கதைக்களங்களுக்கும் ஓர் அடி நாதமாகும். கதை வசனம் அல்லாவிட்டால், அவை படைப்பாற்றல்களாக வெளிவர சாத்தியம் இல்லை. அந்த வகையில் 12 மேடை நாடகங்களுக்கான கதை வசனத்தை நான் எழுதி மேடையேற்றியுள்ளேன். 13ஆவது நாடக நூலான “ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்’ நூலினை அண்மையில் கொழும்பில் வெளியிட்டு வைத்தேன்.
இவ்வாறு ஈழத்தின் பழம்பெரும் மேடை நாடக இயக்குநரும் தயாரிப்பாளரும் கதைவசன கர்த்தாவும் பாடலாசிரியருமான கே.செல்வராஜன் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்தார்.

கே: நீங்கள் பிறந்தது, கல்வி கற்றமை எங்கே?

பதில் : கொழும்பு கொட்டாஞ்சேனையில் பிறந்து தெமட்டகொட அரசினர் தமிழ் மகா வித்தியாலயத்தில் எனது கல்வியை மேற்கொண்டேன்.

கே: பாடசாலை நாட்களில் உங்களது கலைத்துறை ஈடுபாடு எவ்வாறிருந்தது?

பதில் : நான் அங்கு பயிலும் காலத்தில் எனக்கு முன்னோடி மாணவர்களாக பி.எச்.அப்துல் ஹமீத், எஸ்.சந்திரசேகர், ஜி.போல் அன்டனி, வி.கே.ரி.பாலன், ஆர்.கே.புஹாரி போன்றோர் பயின்றுகொண்டிருந்தனர். பாடசாலையில் எத்தகைய கலை நிகழ்வுகள் இடம்பெற்றாலும் அவர்களே அவற்றில் பங்குபற்றிவந்தனர். இவர்களது நாடகங்களை பார்த்து எனது நாடகங்களும் மேடையேற்றப்படவேண்டும் என்ற ஆவல் அப்போது எனக்கேற்பட்டது. இவர்கள் பாடசாலையிலிருந்து மாணவர்களாக வெளியேறியதும் நான் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டேன். பல நாடகங்களை நான் அப்பாடசாலையில் மேடையேற்றி வரலானேன்.

நான் வளர்ந்த பகுதி ஊருகொடவத்தை. அன்று அப்பகுதி இயற்கை எழில்கொஞ்சும் பிரதேசமாக காட்சியளித்தது. இப்போது கட்டிடங்கள் சூழமைந்து காணப்படுகின்றது. அன்றைய அந்த இயற்கை சுழமைவு என்னை கவிஞனாகவும் மிளிர வைத்தது.

அந்த அடிப்படையில் ஹிந்திப்பாடல் மெட்டுகளுக்கு தமிழ்ப்பாடல் வரிகளை இயற்றி பாடசாலை கலை நிகழ்வுகளில் பாடல் வடிவில் அறிமுகப்படுத்தி வந்தேன். நான் பத்தாம் வகுப்பு படித்து வந்த வேளையில் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ், சமயம், கணிதம் ஆகிய பாடங்களை ரியூசன் கொடுத்து வந்தேன். அவர்களை வைத்து “முத்தமிழ் கலா மன்றம்’ என்ற மன்றத்தை உருவாக்கி ஓர் தீபாவளி தினத்தன்று கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினேன். அந்த வகையில் பாடசாலை மட்டத்தில் எனது முதலாவது நாடகம் “வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ ஆகும். சிவாஜி நடித்த அத்திரைப்பட கதைவசன புத்தகத்தை ஐம்பது சதத்துக்கு வாங்கி அதனை சுருக்கி சற்று மாற்றியமைத்து இயக்கி மேடையேற்றினேன். பலத்த வரவேற்பு அதற்குக் கிடைத்தது.

கே: முறைப்படி நாடக இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பிரபலமானது எப்படி?

பதில்: பாடசாலையில் எனது முதலாவது நாடகத்தை பார்க்க வந்த கே.வின்சன்ட் என்ற கலைஞர் மற்றுமோர் கலை மன்றத்தை நடத்திவந்த ஏ.சீ.எம்.ஹுசைன் பாரூக்கிடம் என்னைப்பற்றி கூறியிருக்கின்றார். நான் சாதாரணதரம் பயின்று பாடசாலையிலிருந்து வெளியேறியதன் பிற்பாடு ஏ.சி.எம்.ஹுசைன் பாரூக் தனது “இளம் கலைஞர் குழு’வில் என்னை இணைத்துக்கொண்டார்.

அக்குழுவில் ஜவாஹஹ் நானா, எம்.எம்.ஏ.லத்தீப், ஜோபு நஸீர், மகராஜா, கே.வி.எஸ்.மணியம் போன்ற பிரபல நடிகர்கள் அதில் அங்கம் வகித்தனர். அவர்களுடன் நானும் ஒருவனாக இணைந்து கொண்டேன். அதன்த வாயிலாக மேடை நாடகங்களை முறைப்படி எவ்வாறு எழுதுவது, இயக்குவது, மேடையேற்றுவது உட்பட நாடக உத்திகளை கற்றுக்கொண்டு என்னைப் படிப்படியாக வளர்த்துக்கொண்டேன்.

அந்தவகையில் எனது குருநாதர் ஏ.சி.எம்.ஹுசைன் பாரூக். அஜரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனினும் எனது 20ஆவது வயதில் முறைப்படி நான் கதை வசனம் எழுதி தயாரித்து மேடையேற்றிய நாடகம் “கேளுங்கள் தரப்படும்’ என்பதாகும்.

லடீஸ் வீரமணி, ஜோபு நஸீர், சுதாகர், மகராஜா ப்ரியா ஜெயந்தி, ரத்னகலா உட்பட மேலும் பலர் அதில் நடித்திருந்தனர். அந்நாடகத்திற்கான இசையை வழங்கியிருந்தவர் முகமட் சாலி ஆவார். நாடக உலகில் முதன்முதல் எனக்கென ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது அந்நாடகமே!

கே: நீங்கள் அறிமுகப்படுத்திய பல கலைஞர்கள் பிற்காலத்தில் நாடறிந்த கலைஞர்களாகவும் ஒலிபரப்பாளர்களாகவும் மிளிர்ந்திருக்கின்றார்கள்… அப்படித்தானே?

பதில் : சரிதான்! எம்.கே.சுதாகரே எனது முதல் அறிமுகம். பின்னர் 1974இல் எனது மன்றத்தின் மூலம் நான் கதை வசனம் எழுதி இயக்கிய முதல் நாடகமான “உறவுகள்’ நாடகத்தில் பல புது முகங்களை அறிமுகப்படுத்தியிருந்தேன்.

பி.விஜயராஜா எனது முதலாவது கதாநாயகன். ரெஜினா ரஹீம், ஆர். ராஜசேகரன், ஸ்ரீதர் பிச்சையப்பா, அவரது தந்தை டி.எஸ். பிச்சையப்பா ஆகியோர் அதில் நடித்து பிரபலமானார்கள். அந்த வரிசையிலேயே கே.மோகன்குமார், வீரபுஸ்பநாதன், பி.சீதாராமன், சற்குரு, ஜவாஹர் பெர்னாண்டோ, செ.மோகன்ராஜ், அபுபைதா மவூஜீட் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

கே: ஓர் நாடகத்தை இயக்குவதற்கும் தயாரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கூறமுடியுமா?

பதில்: நாடகம் எவ்வாறு மேடையேற்றபடவேண்டும் என்பது இயக்குநருக்குத்தான் நன்கு தெரியும். காட்சியமைப்பு, ஒளியமைப்பு, ஒப்பனை… சகல அம்சங்களையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். தயாரிப்பாளர் என்பவர் அந்நாடகத்தை மேடையேற்றி முடிப்பதற்குத் தேவையான நிதியினை பெற்றுக்கொடுப்பவர்.

ஆனால், தயாரிப்பாளர் வேறொருவராகவும் இயக்குநர் வேறொருவராகவும் இருக்கும் பட்சத்தில் அங்கு சிற்சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது, நாடகத்திற்காக இயக்குநர் கேட்கும் பணத்தினை தயாரிப்பாளரால் கொடுக்க முடியாத நிலை இருக்கும்.

அந்நேரத்தில் இருவருக்குமிடையே சற்று முறுகல் நிலை ஏற்படலாம். ஆனால், இவ்விரண்டினையும் ஒருவரே மேற்கொள்ளும்போது இந்தப் பிரச்சினை ஏற்படாது. நான் இயக்கி மேடையேற்றிய பல நாடகங்களுக்கு அன்று ஆர்.ஞானம் என்பவர் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் .

அவரால் எனக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்பட்டது கிடையாது. நான் கேட்கும் பணத்தினை நாடக மேடையேற்றத்துக்கு தந்துதவுவார். அதுபோன்று கந்தையா என்ற ஓர் நடிகரும் தயாரிப்பாளரும் இருந்தார். அவராலும் எமக்கு பெரும் ஒத்துழைப்புக் கிட்டியது.

கே : கதை வசனத்தின் சிறப்பு என்ன?

பதில்: கதை வசனம் என்பது நாடகத்திற்கு மட்டுமல்ல, திரைப்படம், நாவல், சிறுகதை, தொடர்கதை… என சகல கதைகளங்களுக்கும் ஓர் அடிநாதமாகும். கதை வசனம் அல்லாவிட்டால் அவை படைப்பாற்றல்களாக வெளிவர சாத்தியம் இல்லை. அந்தவகையில் 12 நாடகங்களுக்கான கதை வசனங்களை நான் எஸிதி மேடையேற்றியுள்ளேன்.

13ஆவது நாடக நூலினையே அண்மையில் கொழும்பில் மிக வெற்றிகரமாக வெளியிட்டு வைத்தேன். அதற்கு எனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவரையும் இவ்வேளையில் மிக்க நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

கே : உங்களை இனங்காட்டிய நாடகங்கள் எவை? எவை?

பதில் : “உறவுகள்’ நாடகமே என்னை மேடை நாடக கதை வசன கர்த்தாவாகவும் இயக்குநராகவும் இனங்காட்டிய நாடகமாகும். அதில் பங்குபற்றிய அனைவரையுமே அது ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்ததோடு தொடர் கலைஞர்களாகவும் நிலைத்து நிற்கவும் அடித்தளமிட்டுக்கொடுத்தது என்பதுவே நிதர்சனமாகும்.

எனது கதைவசனத்திலும் இயக்கத்திலும் மேடையேற்றம் செய்யப்பட்ட “அவள் ஒரு மெழுகுவர்த்தி’ நாடகம் கொழும்பு, மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் 12 தடவை மேடையேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

“மோகம் முப்பது நாள்’ நாடகமும் எனக்கு பெயரைப் பெற்றுக்கொடுத்தது. “தண்ணீர் தண்ணீர்’ நாடகம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தபோது அந்நாடகத்தினை நான் கொழும்பில் மேடையேற்றியிருந்தேன். அது பிறகு திரைப்படமாகவும் இந்தியாவில் வெளிவந்தது. ஆனால், அத்திரைப்படத்தை விட மேடை நாடகமாக நாம் அருமையாக செய்திருந்தோம் என பலர் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

“சலங்கையின் நாதம்’, “புல்லுருவி’ , “கடவுள் வந்திருந்தார்’, “ஞான ஒளி’, “பூகம்பம்’, “பிரளயம்’, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ ஆகிய நாடகங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டன. “சலங்கையின் நாதம்’ நாடகத்திற்கு ஆறு விருதுகளும் “ஆழ்கடலில் ஓர் சப்தம்’ நாடகத்திற்கு மூன்று விருதுகளும் “இப்போ இதெல்லாம் சகஜங்க’ நாடகத்திற்கு ஆறு விருதுகளும் “மௌனத்திரை’ நாடகத்திற்கு ஆறு விருதுகளும் கிடைக்கப்பெற்றமை மறக்கமுடியாதவை.

கே: மொத்தம் எத்தனை நாடகங்களை மேடையேற்றியுள்ளீர்கள்

பதில் : நான் கதை வசனம் எழுதிய 12 நாடகங்களைத் தவிர, மொத்தம் 39 நாடகங்களை மேடையேற்றியுள்ளேன். அவை யாவும் 150 இற்கும் மேற்பட்ட தடவை மேடையேற்றம் செய்யப்பட்டிருக்கினறன. எம்.உதயகுமார், நீர்கொழும்பு முத்துலிங்கம், ஆ.நா.கந்தசாமி, லடீஸ் வீரமணி, பேராதனை ஜுனைதீன், சத்திய எழுத்தாளர் நாகூர்கனி, சிந்தனைப்பிரியன் முஸம்மில், ஸ்ரீதர் பிச்சையப்பா போன்ற நம்நாட்டு எழுத்தாளர்களின் நாடகங்களுடன் இந்திய எஸித்தாளர்களான சுஜாதா, வியட்நாம் வீடு சுந்தரம், கோமல் சுவாமிநாதன், தமிழ்வாணன், கண்ணதாசன் போன்றோரின் நாடகங்களையும் நான் நமது நாட்டில் மேடையேற்றியுள்ளேன்.

கே : அன்றைய காலத்தில் நாடகத்துறையை தவிர, மெல்லிசைத்துறையில் ஓர் பாடலாசிரியராகவும் புகழ்பெற்றவர் நீங்கள். பாடல் இயற்றும் சந்தர்ப்பம் எப்படி கிடைத்தது? உங்களுக்கு பெயரை ஈட்டிக்கொடுத்த மெல்லிசைப் பாடல்கள் எவை?

பதில் : நானே மறந்துபோயிருந்த விடயத்தை ஞாபகப்படுத்தினீர்கள். நான் கலைகத்துறையில் அறிமுகமானதே பாடலாசிரியராகத்தான். மேடை நாடகங்களுக்காக நான் இயற்றி பதிவுசெய்யப்பட்ட சில பாடல்கள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் வெளிவரமுடியாமற் போயின.

எனினும் பிற்பாடு இளம் கலைஞர் குழு மன்றத்தின் நாடகத்திற்காக நகைச்சுவைப் பாடலொன்றை இயற்றி ஒலிப்பதிவு இன்றி அந்நாடகத்தில் பயன்படுத்தினேன். பிற்பாடு அன்புள்ள அத்தான் நாடகத்திற்கு கே.எம்.சவாஹிர் மாஸ்டரின் இசையில் மூன்று பாடல்களை இயற்றி ஒலிப்பதிவு செய்யப்பட்டும் நாடகம் மேடையேற்றப்படாததால் அவை வெளிவராமற் போயின.

மூன்றாவது சந்தர்ப்பமாக இசையமைப்பாளர் ஏ.மகேந்திரனின் இசையில் ரூபவாஹினியில் “உதயகீதம்’ நிகழ்ச்சிக்காக “விண்ணில் தோன்றும் வெண்ணிலா.. என் கண்ணில் கண்டேன் பெண்ணிலா’ என்ற பாடலை நான் இயற்றிக்கொடுத்து ஒளிபரப்பானது.

பிற்பாடு ஏராளமான பாடல்களை தொலைக்கட்சிக்காகவும் வானொலிக்காகவும் இயற்றியுள்ளேன். “உச்சி வெயில் நேரத்துல என் அத்த மகள் மோகத்தில… தாகத்துக்கு இங்கு நீரும் இல்ல… என் மோகத்துக்கு வேறுயாரும் இல்ல’ என்ற பாடல் எனக்கு பெரும் புகழைத் தேடித்தந்த பாடலாகும். மகேந்திரன் மாஸ்டரே அதற்கும் இசையமைத்திருந்தார்.

“என்னடி பெண்ணே ரகசியம் அதை என்னிடம் சொல்லடி அவசியம்’ என்ற பாடலும பிரபலமானது. அப்பாடலுக்கு இசையமைத்திருந்தவர் கல்முனை எஸ்.சிவா. “அன்னை ஒரு தெய்வமே… என்னை ஆளும் ஜீவனே.. அன்பு என்னும் உலகினிலே அணையாத தீபமே’ என்ற பாடலும் என்னை ஓர் நல்ல பாடலாசிரியராக நிலைநிறுத்திய பாடலாகும். அதுபோன்று சிதம்பரம் தியகராஜாவின் இறுவெட்டுக்காக 50 இற்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்திப்பாடல்களை இயற்றியுள்ளேன்.

கே : உங்களது பிள்ளைகளும் கலைத்துறையில் அன்று ஈடுபட்டவர்கள் அல்லவா?

பதில் : ஆமாம்! எனது இளைய மகன் எஸ்.பிரவீன்குமார் பல மூத்த கலைஞர்களுடன் எனது இயக்கத்தில் வெளிவந்த பல நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர். அதன் பிற்பாடு நடனக் கலைஞராகவும் நடன ஆசிரியராகவும் பரிணமித்திருந்தார். மகள் சுதர்ஷனியும் மூத்த மகன் கமலேந்திரனும் கலைத்துறையில் ஈடுபட்டவர்கள். தற்போது தமது குடும்பம் தொழில் என வாழ்ந்து வருகின்றனர்.

கே : “சிலோன் யுனைட்டட் ஆர்ட்ஸ் ஸ்டேஜ்’ கலை மன்றத்தை தாங்கள் ஆரம்பிக்கக் காரணம் யாது?

பதில் : நான் ஏ.சீ.எம்.ஹுசைன் பாரூக்கின் இளம் கலைஞர் குழுவில் இருக்கும் காலத்தில் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அது என்னவெனில், புதுமுக நடிகர்களை வைத்து நாடகங்கள் நடத்துவதனை அவர் விரும்புவது கிடையாது. “கேழுங்கள் தரப்படும்’ நாடகத்தில் சுதாகரை நான் அறிமுகப்படுத்தியபோது சுதாகர் புதுமுகம் என்பதால் ஹுசைன் பாரூக் விரும்பவில்லை.

எனினும் நான் சுதாகரை அதில் நடிக்க வைத்தேன். நானும் ஓர் புதுமுகமாக இருந்தே பிரபலமானேன். அக்காலகட்டத்தில் நாடகங்களில் நடிக்க புதியவர்கள் பலர் மிகுந்த ஆவலோடு இருந்தனர். ஆகவே, புதியவர்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் இளம் கலைஞர் குழுவிலிருந்து வெளியேறி “சிலோன் யுனைட்டட் “ஆர்ட் ஸ்டேஜ்’ மன்றத்தை 1974 இல் ஸ்தாபித்தேன்.

எந்தக் காரணத்திற்காக இதனை ஆரம்பித்தேனோ இன்றுவரை புதியவர்களை மையப்படுத்தியே எனது மன்றம் இயங்கிவருகின்றது. அதேநேரம் மூத்த கலைஞர்களை நான் ஒதுக்கியது கிடையாது. அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றேன். வழங்கியும் வருகின்றேன்.

கே : தற்போது உங்கள் மன்றத்தில் அங்கம் வகிப்போர் யார் யார்?

பதில் : பிரதம ஆ÷ லாசகர் பிரபல ஊடகவியலாளரும் ஆசிரியருமான சசாங்கன் சர்மா, தலைவர் நான், உப தலைவர்கள் ஆர். சிதம்பரம், ஜி.கே. ராஜ், செயலாளர் ஜே.எம்.இர்ஷாத், உபசெயலாளர் ஆ.இளங்கோ, பொருளாளர் ஞானம், உபபொருளாளர் மாணிக்கம். இது தவிர, கணேஷ், அமிர்தவள்ளி போன்ற கலைஞர்களும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

கே : கலைத்துறையில் உங்களுக்கு மனக்கசப்பினை ஏற்படுத்திய சம்பவம் என்று ஏதேனும் உண்டா?

பதில் : 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடக விஷீõவில் எமது மன்றத்தின் மூலம் “ஆழ்கடலில் ஓர் சப்தம்’ எனும் நாடகத்தை அரங்கேற்றியிருந்தோம். எனினும் எமது மன்றத்துக்கு அவ்விழாவில் விருது வழங்கப்படவில்லை. முறைப்படி பார்த்தால் விருது எமது நாடகத்துக்கே கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், எமக்கு கிடைக்க முடியாதவாறு அதில் தில்லுமுல்லுகள் இடம்பெற்றிருந்தன. எமது சொந்த படைப்பான எமது நாடகத்துக்கு விருது வழங்காமல் ஓர் நாவலை வைத்து உருவாக்கப்பட்ட நாடகத்துக்காக பிறிதொரு மன்றத்துக்கு விருது வழங்கியிருந்தார்கள்.

இது எனக்குமனக்கசப்பினை ஏற்படுத்தியிருந்தது. அதனால், நாடகத்துறையிலிருந்து சற்று காலம் ஒதுங்கியிருந்தேன். பின்னர் நான் உடல் நலமும் குன்றிபோனேன். இவ்வாறான நிலையில் மீண்டும் நான் கலைத்துறையில் ஈடுபட வேண்டும் என ஊக்கப்படுத்தியவர் அண்மையில் காலஞ்சென்ற கலைஞர் கே. மோகன்குமார் ஆவார்.

அவருக்கு சமர்ப்பணமாக நான் எழுதி அண்மையில் வெளியிடப்பட்டதே எனது “ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்’ நாடக நூலாகும்.

கே : நாடகத்துறையாக இருக்கட்டும் இசைத்துறையாக இருக்கட்டும் எமது ஈழத்து தமிழ்க் கலைத்துறையில் அன்று இருந்த ஆரோக்கியமான சூழ்நிலை அற்றுப்போய்விட்டதாகவே தோன்றுகிறது. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : தற்போது வீட்டுக்கு வீடு கேபிள் தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பே மேலோங்கிக் காணப்படுகின்றது. கையடக்க தொலைபேசியிலேயே சகலதையும் பார்த்துக்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாம் சிறந்த படைப்புகளைத் தந்தாலும் வெளியே வந்து அவற்றை பார்த்து ரசிக்கக்கூடிய ஆர்வம் ரசிகர்களிடம் இல்லாமற்போய்விட்டது.

அதுவும் ஓர் காரணம். அது மட்டுமன்றி, மண்டப வாடகைகள், ஏனைய சேவைகளுக்கான கட்டணங்கள் யாவும் அதிகரித்துப்போயுள்ளன. 19851990களில் ஒரு நாடகத்தை மேடையேற்றுவதனால் பத்தாயிரம் ரூபா இருந்தால்போதும்.

தற்போது மேடையேற்றுவதனால் மண்டபத்துக்கு மடடும் 70 ஆயிரம் ரூபா தேவை. அன்று 10 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு அனுசரணையாளர்கள் பலர் இருந்தனர். அவர்கள் முன்வந்து அனுசரணை வழங்கிய காலம் அது. இப்போது மண்டபத்துக்கே 70 ஆயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை தேவைப்படும் நிலையில் ஓர் நாடகத்தையோ இசை நிகழ்ச்சியையோ நடத்த எவர் அனுசரணை வழங்குவார்கள்? விளம்பர அனுசரணையாளர்களை நாம் குறைகூறமுடியாது.

நாட்டின் இன்றைய பொருளாதார சூழ்நிலைமை பெரும் பூதாகரமாக உருவெடுத்துள்ளமையும் நமது ஈழத்து கலைத்துறை நலிவுறுவதற்கு ஓர் பிரதான காரணிகளில் ஒன்றாகும்.

தற்போதைய சூழ்நிலையில் எமது மேடை நாடகத்துறை வருமானமற்ற துறையாக இருப்பதனால் இளைஞர் யுவதிகள் வருமானத்தை ஈட்டக்கூடிய கலைத்துறையை நாடிச்செல்கின்றனர். என்ன புரியவில்லையா? அதாவது குறுந்திரைப்படங்கள் இயக்குவ, அவற்றில் நடிப்பது, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஒலி (ளி) பரப்பாளர்களாக வருவது ஆகிய வருமானத்தை பெறக்கூடிய கலையம்சங்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதனாலும் நாடகத்துறையில் அவர்கள் ஆர்வம் செலுத்துவது குறைந்துவிட்டது.

கே: சுமார் 65 வயதை அடைந்திருக்கும் நீங்கள் “கலாபூஷணம்’ விருதுக்கு விண்ணப்பிக்காதது ஏன்?

பதில் : ஏன் கிடையாது? எனது 62 ஆவது வயதிலும் கடந்த வருடம் எனது 64 ஆவது வயதிலும் கலாபூஷணம் விருதுக்காக விண்ணப்பித்தும் இதுவரை எனக்கு இவ்விருது கிடைக்கப்பெறவில்லை. குறித்த தரப்பினரிடம் இது குறித்து நான் வினவியபோது “உங்களைவிட வயதில் மூத்தவர்களுக்கு கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்படவேண்டியுள்ளது’ என பதில் வந்தது. இவர்களிடம் நான் கேட்பது யாதெனில், உண்மையில் கலாபூஷணம் விருதுக்கான வயதெல்லை 60 தானா.. அல்லது..?

கே : புதிய கலைஞர்களுக்கு தாங்கள் கூறவிரும்புவது என்ன?

பதில்: இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழில் இம்மூன்றுமே ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் தேவையான அம்சங்களாகும். மனித வாழ்க்கைக்கு 25 வீத கலையும் 25 வீத விளையாட்டும், 25 வீத கல்வியும், 25 வீத நற்பழக்கவழக்கங்களும் இருந்தால்தான் முழுமையான மனிதனாகலாம்.

கலைத்துறை 25 சதவீதம் எனும் போது அதில் இயல், இசை, நாடகம் அடங்குகின்றது. நீங்களும் நானும் தற்போது இந்தப் பேட்டிக்கா கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றோமே இதுவும் ஓர் நடிப்புத்தான். ஓர் குழந்தையை உறங்க வைப்பதற்காக தாலாட்டுப்பாடுவோமானால் அது இசை.

ஆகவே, வாழ்க்கைக்கு கலையும் அவசியம். புதியவர்கள் வருமானத்தை ஈட்டக்கூடிய ஏனைய துறைகளை தேடிக்கொண்டாலும் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வரவேண்டும். கலையினால் மனிதன் சிறந்த மனிதனாக வார்த்தெடுக்கப்படுகின்றான்.

கேள்வி : இந்நேர்காணல் வாயிலாக ஊடகங்களிடம் நீங்கள் வேண்டுகோள் விடுப்பது என்ன?

பதில் : ஊடகங்களை கலைஞர்களாகிய நாம் ஒருபோதுமே குறைகூறமுடியாது. குறைகூறவும் கூடாது. ஏனெனில், நாம் நமக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ள அவற்றிடம் நாடும்போது ஊடகங்கள் நமக்கு ஒத்தாசை புரிகின்றன. ஒரு செய்தியை வழங்கினால் அது ஒலி(ளி) பரப்பாகவும் பிரசுரிக்கப்படவும் செய்கின்றன.

நமது கலைத்துறை செய்திகளை நாம் வழங்காமலேயே ஊடகங்கள் வெளியிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆகவே, ஈழத்து கலைப்படைப்பு என்று வரும்போது இன்னும் சற்றுக் கூடுதலாக ஆதரவு தரும்படியும் எமது கலைஞர்களையும் வரழைத்து பேட்டி கண்டு புதிய தலைமுறையினருக்கு அறிகமுகம் செய்யும்படியும் மிகுந்த தாழ்மையுடன் ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்

(Visited 26 times, 1 visits today)