வட அமெரிக்காவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் தமிழ் விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் 31-வது தமிழ் விழா டெக்சாஸ் மாநிலம் பிரிஸ்கோ நகரில் வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன், பேராசிரியர் ஞானசம்பந்தன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், விஜிபி சந்தோசம், ஐசரி கணேஷ்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

அமெரிக்க தமிழர்களுக்கு தமிழ் மொழியின் கலையை, பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அமைப்பாக வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை செயல்படுகிறது. உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாகவும் உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் 31-வது தமிழ் விழா மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

முதல் நாள் விழாவாக அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இரண்டாவது நாள் வரவேற்பு மற்றும் அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் பங்குபெறும் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகளும், மூன்றாம் நாள் இந்திய, தமிழக அரசியல், கலை, சமுதாய நலன் சார்ந்த விழா நடைபெறும்.

விழாவில் 5000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொள்வார்கள். தமிழ்நாட்டில் இருந்து அரசியல், கலை, மருத்துவம், தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்துகொள்ளும் வகையில் பேரவை ஒருங்கிணைப்பாளர் கால்டுவேல் வேள்நம்பி ஏற்பாடு செய்துள்ளார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், பேராசிரியர் கா.ஞானசம்பந்தன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், வழக்கறிஞர் அருள்மொழி, நடிகர் கார்த்திக், எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன், ஐ.பி.எஸ். அதிகாரி கலியமூர்த்தி, தொல்லியலாளர் அமர்நாத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

(Visited 56 times, 1 visits today)