நவஜோதி ஜோகரட்னம்

“தாமரைச் செல்வி தான் எழுதிய கதைகளில் எந்த அரசியல் சார்பும் இல்லாமல், எவர்மீதும் குறை காணாமல் தனக்குள் சூழ்ந்து கிடக்கும் உள்ளுணர்வின் உண்மைக் கருத்துக்களில் எதிரொலித்திருக்கிறார். போதனைகளை அள்ளிச் சொரியாமல் தன்னுடன் வாழ்ந்த மக்களையும், அவர்களின் துயரங்களையும் முன்னிறுத்தி தனது சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.

போர்க்காலச் சூழ்நிலையில் சிக்குண்ட ஒரு பிரதேசத்தின் சரித்திரமாக தாமரைச்செல்வியின் கதைகள் அமைந்திருக்கின்றன. சாதாரண மனிதர்கள் முகம் கொடுத்த பெருங் கொடுமைகளை கண்ணீர்த் துளிகளுடன் படைத்திருக்கும் ஒரு சரித்திரக் காவியமாக தாமரைச் செல்வியின் கதைகள் திகழ்கின்றன.

ஹரியற் பீச்சர் ஸ்ரோவின் “ரொம் மாமாவின் குடிசை’ என்ற அமெரிக்கக் கறுப்பின மக்களின் வாழ்க்கைச் சித்திரம்போல தாமரைச்செல்வியின் வன்னியாச்சி என்ற சிறுகதைத் தொகுப்புத் திகழ்கின்றது’ என்று பிரபல நாவலாசிரியரான ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் லண்டனில் நடைபெற்ற தாமரைச்செல்வியின் வன்னியாச்சி என்ற கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கில் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்: சமுதாயத்தில் ஊடுருவிப்போன பழைய பிற்போக்குக் கட்டுமானங்களையும் உணர்வில் சுமந்துகொண்டு ஓடும் சுயநலம் பிடித்த மனிதர்களைச் சுடுவார்த்தைகளால் சாடவேண்டும் என்பதை தாமரைச்செல்வி தனது கதைகளில் மௌனமொழியில் ஆணையிடுகிறார்.

ஆண்மையின் ஆளுமை, வக்கிர புத்தி, மற்றவர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற செயற்பாடுகள் எந்தச் சூழ்நிலையிலும் சில தமிழர்களிடமிருந்து அழியப்போவதில்லை என அவரது கதைகள் பிரதிபலிக்கின்றன’ என்று தெரிவித்தார்.

இவ்வரங்கிற்கு தலைமை தாங்கிய சந்திரா ரவீந்திரன் தனது தலைமை உரையில்: “போர்க்காலச் சூழலில் வன்னி மக்கள் பட்ட கொடுமைகளை அடுத்தடுத்த இடப்பெயர்வுகளால் ஏற்பட்ட அவலங்களை மிக இயல்பாக யதார்த்தமாக எழுதிச் செல்கிறார்.

எந்த அரசியல் சாடலும் இன்றி சதாமாந்தர்கள் தாம் எதிர்கொள்ளும் சூழலில் எவ்வாறு செயற்படுவார்களோ அந்த விதமாகவே அந்தப் பாத்திரங்களைப் பேச வைத்திருக்கிறார். ஈழத்தின் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் தாமரைச்செல்வியின் இடம் தனித்துவமானதாகும். 200 சிறுகதைகளுக்குமேல் சிறுகதைகளைப் படைத்தும் சிறந்த நாவல்களை ஆக்கியும் தாமரைச் செல்வி சாதனை படைத்திருக்கிறார்.

மிக நேர்த்தியான சித்தரிப்புக்களுடன் கதைகளை வளர்த்துச் செல்லும் தாமரைச்செல்வியின் நுட்பம் அவரின் பல சிறுகதைகள் குறும்படங்களாக வெளிவருவதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. இயக்குனர் “உதிரிப்பூக்கள்’ மகேந்திரன், ஜான் மகேந்திரன் போன்ற திரைப்படக் கலைஞர்கள் ஒரு திரைப்படக் கலைஞனின் பார்வையில் தாமரைச்செல்வியின் கதைகள் அமைந்திருக்கின்றன என்பதையும் தொட்டுக்காட்டி உரையாற்றினார்.

நவஜோதி ஜோகரட்னம் தனது விமர்சன் உரையின்போது “தாமரைச்செல்வி “வன்னியாச்சி’ என்ற இச்சிறுகதைத் தொகுதியில் எழுதியுள்ள இந்தக் கதைகள் ஒரு யுத்த காலத்தின்போது வன்னிமக்கள் அனுபவித்த கொடூரங்களை அந்தக் காலகட்டத்தில் மட்டுமல்ல என்றென்றும் உலகிற்கு எடுத்துச் சொல்கின்ற சிரஞ்சீவிக் கதைகளாக நிலைத்து நிற்கும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை எனக் கூறினார். ஒரு சமூகத்தின் அரசியல் எழுச்சி எத்தகைய வடிவங்களை எடுக்கின்றது என்பதை அந்தந்த காலத்தின் கால தேச வர்த்தமானங்களே நிர்ணயிக்கின்றன.

ஆனாலும் எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு உக்கிரமான முரண்பாட்டிற்குத் தீர்வு காண எல்லா வழி முறைகளாலும் முயற்சிப்பதில் தவறில்லை. ஆயுதப் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒரு காலப்பகுதியில் உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பொதுமக்கள் எழுச்சி என்பனவற்றிற்கு இடமேயில்லை என்று அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை.

ஆயுதப்போராட்டத்தையே முழுமூச்சாகக் கொண்ட விடுதலைப்புலிகள் உண்ணாவிரதத்தையும் ஆயுதமாகக்கொண்டு திலீபனை இழந்தமையும் நாம் சந்தித்த வரலாறுதான். இன்று வடக்கில் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டாமாகவும் உண்ணாவிரதமாகவும், ஊர்வலமாகவுமே திகழ்கிறது என்பதை நான் அழுத்திச் சொல்ல வேண்டியதில்லை’ என்றும் பேசியிருந்தார்.

தோழர் வேலு தனது விமர்சன உரையில் : “எவ்வளவுதான் யுத்த நெருக்கடிகள் இடப்பெயர்வுகள் என்பன வன்னி மக்களின் வாழ்வைச் சிதறடித்தாலும் யுத்தத்திற்கு முன்னர் கொண்டிருந்த அதே மனப்பான்மையையே தொடர்ந்தும் கொண்டிருப்பதை தாமரைச்செல்வியின் கதைகள் வெளிப்படுத்துகின்றன.

அநாதரவாக நிற்கும் நிலைமைகள் இந்த மக்களின் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பதனையும் தாமரைச்செல்வியின் கதைகளில் காணமுடிகிறது’ என்று குறிப்பிட்டார்.

இதுவரை ஆசிரியர் எம்.பௌசர் கருத்துரையாற்றும்போது: “போர்க்காலத்தில் இராணுவ ஆக்கிரமினாலும், இடப்பெயர்வினாலும் தான் எழுதிய ஆக்கங்களைத் தொலைத்துவிட்டிருக்கும் தாமரைச்செல்வியின் அனைத்து ஆக்கங்களும் தேடப்பட்டு ஆவணமாக்கப்படவேண்டியது நம்முன்னுள்ள பெரும் கடமையாகும். யுத்தங்கள் ஏற்படுத்திய சூழலில் இத்தகைய சிருஷ்டிகளும் அழிய நேர்வது கவலைக்கிடமானது’ என்று தெரிவித்தார்.

நெதர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த “அ ஆ இ’ இதழின் ஆசிரியராகத் திகழ்ந்த சாள்ஸ் குணநாயகம் உரையாற்றும்போது: ” பரந்தனைச் சார்ந்த பிரதேச மக்களின் நல்லபிமானத்திற்குரியவராகத் திகழ்ந்த ரதி அக்கா என்று அழைக்கப்படும் தாமரைச்செல்வி வெறும் எழுத்தோடு நின்று விடாமல் கடந்த 20 ஆண்டுகளாக பரந்தன் பாடசாலைக்குத் தொடர்ச்சியாக பெருமளவில் உதவியும், ஆதரவற்ற வன்னிச் சிறுவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கியும் செயற்பட்டு வரும் உயர்ந்த பண்பைப் பாராட்டியாக வேண்டும் என்று தெரிவித்தார்.

அவரது வன்னிக் கதைகளுக்கூடாக நாமும் எமக்குப் பழகிய வயல் வெளிகளிலும் பாலங்களிலும் குளக்கட்டிலும் உலவும் உணர்வு எத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் நம் மனதில் ஏற்படுத்துகின்றது’ என்று குறிப்பிட்டார்.

ஏழு, எட்டுக் கதைகளை எழுதிவிட்டு அலுப்பில்லாமல் சுயபுராணம் பாடும் எழுத்தாளர்கள் மத்தியில் 200 கணக்கான சிறுகதைகளை எழுதிவிட்டு தன்னடக்கத்தோடு திகழும் தாமரைச்செல்வி புதுமையான பெண்மணியாகத் திகழ்கின்றார்.

அவருடைய பாலம் என்ற சிறுகதை அரசியல் ரீதியான ஒரு குறியீட்டுச் சிறுகதையாக மிளிர்கிறது. ராணுவத்தின் வருகையைத் தடுப்பதற்காக ஒரு பாலத்தை உடைக்கும் நிகழ்வு ஏர்னஸ்ற் ஹெமிங்வேயின் ஒரு நாவலில் எதிரியின் உள் நுழைவைத் தடுப்பதற்காக ஒரு காட்டுப் பகுதியில் பாலத்தை உடைப்பதற்காக அனுப்பட்ட ஒரு கிளர்ச்சிப் போர்வீரன் அந்தப் பாலத்தை உடைக்க மனமின்றி திரும்பிப் போய்விடுவதை இந்தக் கதையோடு சேர்த்துப் பார்க்கத் தோன்றுகின்றது’ என்று பிரபல விமர்சகர் மு.நித்தியானந்தன் பேசியிருந்தார்.

இ.பத்மநாப ஐயர் உரையாற்றும்போது “தாமரைச்செல்வியின் ஆக்கங்கள் மீள் பதிப்பாகக் கொண்டுவரவேண்டும் என அவரது சகோதரர் சுப்ரம் சுரேஷ் தன்னை அணுகியபோது காலச்சுவட்டிற்கூடாக இந்நூலை வெளியிடுவதற்கு உரிய உதவிகளைச் செய்தேன்’ என்று தெரிவித்தார்.

வன்னி மக்கள் குறிப்பாக பெண்களின் கூடுதலான வருகையினால் மண்டபம் நிறைந்து மிகச் சிறந்த கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கமாகத் திகழ்ந்தது.

(Visited 60 times, 1 visits today)