புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உலகின் பல நாடுகளில் தனித்திறமையுடன் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர் .பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் பொருளாதாரத்திலும் மேம்பாடு கண்டு அவர்கள் வாழும் நாடுகளின் அரசியலிலும்இறங்கியுள்ளனர். அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டில் பேர்ன் நகரில் தூன் மாகாணத்தில் ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகா கிருஷ்ணானந்தம் வடிவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

முதல் தமிழ்ப்பெண் கவுன்சிலர் என்ற, பெருமையோடு இவர் அண்மையில் தமிழகம் வருகை தந்தார். இவ்வருகையை முன்னிட்டு ‘இனிய நந்தவனம்’ சஞ்சிகை ஏற்பாட்டில் சென்னை மகாகவி பாரதிநகர் கிளை நூலக வாசகர் வட்டம் ‘கல்வெட்டு பேசுகிறது’ மாத சஞ்சிகையுடன் இணைந்து கடந்த புதன்கிழமை பாராட்டு விழா ஒன்று நடாத்தப்பட்டது

கவிஞர் சொர்ணபாரதி தலைமையில் புலவர் மு.அரங்கநாதன் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது. பாராட்டுப் பெற்ற டர்ச்சிகா தனது ஏற்புரையில் தமிழகம் எனது தொப்புள் கொடி உறவுகளின் தேசம் இங்கே வருகின்ற ஒவ்வொரு முறையும் அகமகிழ்ச்சியடைவேன். நான் கவுண்சிலரான பின் இப்போது தான் முதல் முறையாக தமிழகம் வருகிறேன். இப்படியான பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாலும் என் தமிழ் உறவுகளுடன் கலந்துரையாடுவதாலும் நிறைய அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறேன்.

எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது நாங்கள் புலம் பெயர்ந்த நாட்டில் எங்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளனர். அதன் பயனாக பல் துறைகளில் சாதித்து தற்போது அரசியலிலும் பயணிக்கத் தொடங்கியுள்ளோம். ஆனால் 30 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கக் கூடிய ஈழத்தமிழர்களுக்கு இன்னும் குடியுரிமை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்று எதிர்பார்கிறேன். மேலும் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் நூலகம் அமைக்க வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியை எடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்” என டர்ச்சிகா தனது ஏற்புரையில் தெரிவித்தார்

மேலும் விழாவில் வே.எழிலரசு ,முனைவர் தமிழ் மணவாளன் , கவிஞர் நா.பாபு பா.ஹேமாவதி, முனைவர் வசந்தா, கவிஞர் ஜலாலுதீன், கலாநிதி வே.த.யோகநாதன், பத்திரிகையாளர் கோமபுரம் இரா.ப .சந்திரகேரன் தாமரைப் பூவண்ணன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூக செயல்பாட்டாளர் குமரன், திருச்சி விம்ரா பேக்ஸ் உரிமையாளர் சாதிக் பாட்சா ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர். முன்னதாக நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க நூலகர் பெ.கனகராஜ் நன்றி கூறினார்.

(Visited 336 times, 1 visits today)