கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் வலது கரமான மிகேல் டயஸ்-கேனலை ரவுல் காஸ்ட்ரோவுக்கு பிறகு அதிபர் வேட்பாளராக அந்நாட்டு நாடாளுமன்றம்நியமித்ததன் மூலம் காஸ்ட்ரோ குடும்பத்தின் நீண்ட ஆட்சிக்காலம் முற்றுப்பெறவுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு உடல்நலன் குன்றிய தனது சகோதரர் பிடல் காஸ்ட்ரோவுக்கு பதிலாக ரவுல் காஸ்ட்ரோ கியூபா அதிபராக பதவியேற்றார்.

ஓபமா அமெரிக்க அதிபராக இருந்தபோது கியூபாவுடனான அமெரிக்காவின் உறவு மேம்பட்டது.. ஆனால், டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, இந்த மேம்பாட்டில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பதவி விலகினாலும் கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் ரவுல் காஸ்ட்ரோ பலம்பொருந்திய மற்றும் செல்வாக்குள்ள நபராக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மிகேலின் புதிய நியமனத்தின் மீது நாட்டின் தேசிய அவை வாக்களித்துள்ள போதிலும், வியாழக்கிழமை வரை முடிவுகள் அறிவிக்கப்படாது.

வியாழனன்று மிகேலிடம் அதிபர் அதிகாரத்தை ரவுல் முறைப்படி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் பதவியில் இருந்து விலகினாலும் வரும் 2021-ஆம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ரவுல் காஸ்ட்ரோவே இருப்பார்.

அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மிகேல், கடந்த 5 ஆண்டுகளாக அதிபர் பதவிக்கு தயார் செய்யப்பட்டார்.
நாட்டின் துணை அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே, மிகேலுக்கு ஒரு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது.

(Visited 27 times, 1 visits today)