நேர்கண்டவர்: திருமதி ஆனந்தி

நோர்வேயில் பல ஆண்டுகள் வாழ்ந்து, உலகளாவிய ரீதியில் இசைப்பணி ஆற்றி வரும் மிருதங்க கலா வித்தகரும் கணினிப் பொறியியலாளருமான ஏழாலை சிவப்பிரகாசம் சக்திதரன் தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணல்.

கேள்வி: நீங்கள் கலைத்துவப் பயணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் இசை உலகம், எங்களைப் பொறுத்த வரை மறை பொருள் தான். வெறும் ரசனை சஞ்சாரத்துக்கு அப்பால், நீண்ட இடைவெளி கடந்த இசையில் கரை கண்ட அனுபவ ஞானம், உங்களுக்கு வாய்த்த பெரும் பேறு. சொல்லுங்கள் ஒரு கை தேர்ந்த மிருதங்க வித்துவானான தங்களுக்கு இசைத்துறை மீதான இந்த நாட்டம் எப்போது எவ்வாறு வந்தது? ஒருவேளை இதற்கு உங்கள் குடும்பப் பின்னணியும் காரணமாக இருந்திருக்கலாம். பரம்பரை வழியாகவே இந்தக் கலைஞானம் உங்களிடமும் கண் திறந்ததா? உங்கள் பின் புலம் எப்படி? உங்கள் பிறப்பிடம் தற்போதைய வதிவிடம் குடும்பம் இவை பற்றிக் கூறுங்கள்.

பதில்: என் பின்புலம் ஏழாலையில் தான் ஆரம்பமானது. என் தந்தை மகாராஜா நிறுவனத்தில் எழுதுவினைஞராகப் பணி புரிந்தவர். தாய் ஒரு மருத்துவத் தாதி. அம்மம்மா ஒரு பக்திப் பழம். எந்நேரமும் பக்திக் கோலத்துடனேயே அவரை நான் சிறு வயதில் கண்டிருக்கிறேன்.

எங்கள் வீட்டில் எப்போதும் தெய்வீகக் களை தான். காரணம் இங்கு அம்மன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, தினமும் பூசை தவறாது நடக்கும். அவ்வேளை தேவாரம் பண்ணிசைத்துப் பாடச் சிறு வயதிலிருந்தே நாங்கள் கற்க நேர்ந்தது. இதன் முதிர்ச்சி பெற்ற அனுபவமே, என்னை ஒரு சங்கீதக் கலைஞனாக்கியது. மேலும் ஏழாலை மடத்துப் பிள்ளையார் கோவிலில் சிறுவருக்கான அறநெறிப் பாடசாலை, சனி, ஞாயிறு தோறும் தவறாது நடக்கும். அங்கு தேவாரப் பண்ணிசை வகுப்பு நடைபெறும் போது, அதில் ஒருவனாகக் கற்றுத் தேர்ந்த அனுபவமும் எனக்குண்டு. என்னிடம் கலை ஞானம் வருவதற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

மேலும் என் தந்தையும் சங்கீதத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒரு பரம ரசிகர். நான் சங்கீதத்துறையில் ஈடுபட்டு ஒரு மிருதங்க வித்துவானாக வருவதற்கு முக்கிய காரணமாகத் திகழ்வது மங்களகரமான வீட்டுச் சூழல் தான். அப்போது மகாஜனக் கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்த ஒரு சக மாணவன் என் நண்பன் மிருதங்கம் பயில்வதைக் கண்டுதான் நானும் இத்துறைக்கு வர நேர்ந்தது.

அவர் இப்போது ஒரு டாக்டராக இருக்கிறார். நோர்வே வந்த பிறகு தான் என் கலை வாழ்க்கை மேலும் களை கட்டத் தொடங்கியது. என் மனைவி ஒரு பல் மருத்துவர். அவரின் வீட்டிலும் சங்கீதம் பாடக் கூடிய கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவருக்கும் மிகுந்த கலா ரசனையுண்டு எனக்கு இவ்வழியில் முழு ஒத்துழைப்பும் தந்து ஊக்குவித்த பெருமை அவரையே சாரும். ஒரேயொரு மகள் தான் எனக்கு அவள் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.

கேள்வி: கலை ஆர்வம் வருவதற்குப் பரம்பரையில் அது இருந்தால் தான் வரும் என்பதில்லை. கடவுளருளால் ஒரு வரமாக வந்து சேரும். தெய்வீகமான கலைப் பணி செய்வது போலத், தமிழ்ப் பற்று விட்டுப் போகாமல் ஒரு இசை ஆளுமை கொண்ட கம்பீரமான கலைஞனாக உங்களைத் தரிசனம் காண்பது, மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. மிருதங்கத்தில் மட்டுமல்ல, வேறு எத்தனை வாத்தியங்களை வாசிக்க நீங்கள் பயின்றிருக்கிறீர்கள்? இதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்த உங்கள் குருவைப் பற்றிச் சொல்லுங்கள்.

பதில்: “நான் மகாஜனாக் கல்லூரியில் படிக்கும் போது என் நெருங்கிய நண்பன் ஒருவன் டாக்டரானவன். படிக்கிற காலத்தில் அவன் மிருதங்கம் கற்று வருவதைப் பார்த்த பின்னரே நானும் அதைப் பயில ஆரம்பித்தேன். எனது குரு க. ப. சின்னராசா தான்.மேலதிகமாக இதை நான் தமிழ் நாட்டிலுள்ள காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியிடம் சிறப்பு பயிற்சி பெற்றேன்.

இதை விட தபேலா, கஞ்சிரா, மோர்சிங் ஆகிய வாத்தியங்களையும் நான் பூரணமாகக் கற்றதன் பலனே எனது உலகளாவிய புகழுக்கு வித்தானது. தபேலாவை நான் இந்துஸ்தானி கலைஞர் சஞ்சுசகாயிடம் தான் முறையாகக் கற்றேன். பிரபல இசையமைப்பாளர் இசை ஞானி இளையராஜாவின் இசைக் குழுவில் பணியாற்றும் மது என்பவரிடமும் இதை நான் பயின்றிருகிறேன்.

‘அது மட்டுமல்ல நோர்வேயில் மிருதங்கம் கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆர்யாலயா என்ற ஒரு இசைக் கல்லூரியையும், நான் வழி நடத்தி வருகிறேன். இத்துடன் மேலதிகப் பொறுப்பாக நோர்வே நுண் கலைக் கல்லூரியிலும் நான் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறேன்.

கேள்வி: இன்னுமொரு முக்கிய கேள்வி வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற வாத்தியங்கள் இனிமையாகப் பாடல் இசைக்கக் கூடிய திறன் கொண்டவை. ஆனால், மிருதங்கமோ வெறும் பக்கவாத்தியமாகவே இருக்க முடியும் அவற்றைப் பழகாமல் நீங்கள் இத்துறைக்கு ஏன் வந்தீர்கள்? மனதில் பட்டதைக் கேட்கிறேன். குறை நினைக்க வேண்டாம்.

பதில்: எனக்கு எப்பவுமே கணிதத் துறையில் ஈடுபாடு உண்டு. கணிதத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மிருதங்கத்தை இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியுமென்பதாலேயே நான் இத் துறைக்கு வந்தேன். ஒரு சங்கீத வித்துவானாக இருப்பதோடு மேடையேறிப் பேசிய அனுபவமும் எனக்குண்டு.

இதுவே பின்னர் நான் ஒரு நாடகக் கலைஞனாகப் பரிணமிப்பதற்கும் ஏதுவாயிற்று. மறைந்த இலங்கை வானொலி புகழ் கே.எம் வாசகர் நாடகங்கள் சிலவற்றிலும் நான் நடித்திருக்கிறேன். இலங்கை வானொலியிலும் ஒரு இசைக் கலைஞனாகப் பணியாற்றிய அந்த நாட்கள் மிக இனிமையானவை.

கேள்வி: நோர்வேயில் அந்தக் குளிருக்கு நடுவிலும் நீங்கள் மிருதங்கத்துக்காக ஆர்யாலா என்றொரு ஒரு கலைக் கல்லூரி நிறுவி இசைத் தொண்டு புரிவதே உன்னதமான ஒரு கலை சேவை தான். நீண்டகாலமாக நோர்வே மண்ணில் இருக்கிறீர்கள். அங்கு வாழும் தமிழர்களுக்கும் எங்கள் மண்ணில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் மிடையே ஏதும் முரண்பாடு வாழ்வியல் முறைகளிலும் இசைத் துறையிலும் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? இதைப் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: வாழ்வியல் சார்பான முரண்பாடுகளை விளக்கிக் கூறுவதானால் மிக நீளும். சுருக்கமாகக் கூறுவதானால் அங்கு வாழும் போது வேர் கழன்று போன துருவத்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமை தான். மேலும், இங்குள்ள தமிழர்களிடையே இசைத் துறை மீதான நாட்டம் குறைந்து வருவதையே காணக் கூடியதாக இருக்கிறது.

ஆனால், மேலை நாட்டில் போதிய பண வளம் இருப்பதால் அநேகமானோர் கலையை வளர்ப்பதில் நாட்டம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சங்கீதத்துறையில் மட்டுமல்ல பரதக் கலை பயிலவும் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். எனினும் அதை வேகமாகப் பயின்று வருடம் ஒன்று பூர்த்தியாவதற்கு முன்பே அரங்கேற்றம் காண அவர்கள் முன் நிற்பதை நினைக்க, ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. கலையிலே முழுமை பெற இது தடைக் கல்லாகவே இருக்கும்.

கேள்வி: பல்வேறு நாடுகளுக்கெல்லாம் சென்று மிகவும் பிரபலமான இந்தியக் கலைஞர்களுக்கெல்லாம் நீங்கள் மிருதங்கம் வாசித்திருப்பதாக நான் அறிகிறேன். இசைத் துறையில் உங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இதை எம்மால் உணர முடிகிறது. இதை எவ்வாறு நீங்கள் பெற்றீர்கள்? அங்கு யார் யாருக்கெல்லாம் மிருதங்கள் வாசித்தீர்கள்?

பதில்: என் திறமைக்குக் கிடைத்த வெற்றியே இது. நான் கேட்டுப் பெற்றதல்ல. என் பூரணத்துவமான கலை வாழ்க்கையின் உன்னத பெரும் பேறே இது. 2016 இல் சென்னையில் நடந்த மதுர கானலயா இசைக் கல்லூரிரியில் நடந்த ஸ்ரீ சற்குரு தியாகராஜ சுவாமியின் ஆராதனை நிகழ்வில் நோர்வேயிலிருந்து நானும் ஓர் இசைக் கலைஞனாகப் போய்ப் பங்கு பற்றினேன்.

அதில் வந்து பாடிய சின்மயா சகோதரிகளுக்கும், இசைக் கல்லூரி மாணவர்களுக்காகவும், நான் பல்வேறு இசைக் கருவிகளைத் திறப்பட வாசித்து பாராட்டுப் பெற்றதோடு, எனக்கான கௌரவமும் கிடைத்தது. அது மட்டுமல்ல ஒரு சமயம் நோர்வேயில் பேராசிரியர் சிற்றம்பலத்திற்கு பாராட்டு விழா நடந்த போது, நானும் ஆபிரிக்கக் கலைஞர் ஒருவருமாகச் சேர்ந்து, ஒரே மேடையில் வாத்தியங்கள் இசைத்தோம். அவர் வாசித்த கோற என்ற வாத்தியம், சித்தார் வாத்தியத்துக்கு நிகரான வாத்தியம். நைலோன் வலைகளால் உருவான ஒரு வாத்தியம்.

அதை அவர் வாசிக்க அதற்கு இசைவாக நானும் மோர்சிங் மிருதங்கள் எல்லாம் வாசித்த போது, மேடை களைகட்டியது மாத்திரமல்ல சபையோரின் கரகோஷமும் வானைப் பிளந்தது. அச் சமயம் நான் ஒரு தமிழ்ப் பாடல் இயற்றி இசையமைத்துப் பாடியதை அவர் அதை மொழி பெயர்த்துப் பாடினதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த மாதிரியான இசைச் சங்கமம் கூட, இனம் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைவதற்கான ஒரு நல்லிணக்கச் செயற்பாடு தான்.

நான் மீண்டும் இங்கு வரும் போது, சகோதர இனக் கலைஞர்களோடு இணைந்து, இவ்வாறான ஒரு இசைச் சங்கமத்தை அரங்கேற்றி நல்லிணக்கம் காண வேண்டுமென விரும்புகிறேன். மேலும் நான் லண்டன், சுவீடன், ஜெர்மனி இன்னும் பல மேலைத் தேசங்களுகெல்லாம், சென்று பக்க வாத்தியம் வாசித்திருக்கிறேன்.

கேள்வி: நோர்வே மண்ணில் ஒரு மிருதங்க ஆசானாக இருப்பதோடு, ஒரு கணினிப் பொறியியலாளராகவும் நீங்கள் பணி புரிந்து வருகிறீர்கள். இரண்டுக்கும் ஈடு கொடுத்துப் பணியாற்றுவது, உங்களுக்குக் கஷ்டமாகப்படவில்லையா?

பதில்: மிகவும் கஷ்டமான பணி தான். வேலையிலிருந்து களைத்து வந்தாலும், என் ஆத்ம திருப்திக்காக வீட்டிலே உட்கார்ந்து, நேரம் போவது கூடத் தெரியாமல், மிருதங்கத்தில் மேலும் மெருகேறச் சாதகம் செய்து கொண்டிருப்பேன். கவலையை மறக்க, இது ஒரு இனிய பொழுது போக்கு தினமும் எனக்கு இது ஒரு தவம் மாதிரி.

கேள்வி: இசை சார்ந்த கலைத்துறையில் சாதிக்கவென்றே பிறந்த உங்களுடைய வெற்றிகரமான சாதனைகளுக்கெல்லாம் உறுதுணையாக இருப்பது எது? இருப்பவர் யார் என்று கூறுவீர்களா?

பதில்: இதில் எனக்கு உறு துணையாக எப்போதும் இருப்பது எதிலும் மனம் தளர்ந்து போகாத தன்னம்பிக்கை தான். இருப்பவர் எவர் என்று கேட்டால் என் மனைவியையே சொல்வேன். குடும்ப வாழ்வுக்கு ஒத்துப் போவதோடு, என் கலை வாழ்வுக்கும் அவர் தான் ஓர் ஆதர்ஸ நாயகி. அவ்வளவு ஒத்துழைப்பை அவர் எனக்குத் தந்து வருகிறார். இன்னும் தருவார்.

கேள்வி: இதுவரை உங்களுக்குக் கிடைத்த விருதுகள், பட்டங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: வட இலங்கை சங்கீத சபை மூலம், மிருதங்க கலாவித்தகர் என்ற பட்டம் எனக்குக் கிடைத்தது. கொழும்பு லயநாதலயாவின் இயக்குநர் வேனிலானினால், 2015 இல் எனக்கு லயநாதசுரபி என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இன்னுமொரு பட்டம் 2002 இல் போர் நிறுத்த சமாதான காலத்தில் ஏழாலை இந்து சமயப் பேரவையால், ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தேறிய சமாதானப் போர் இசை என்ற, நிகழ்வில், ஓர் இசைக் கலைஞனாக நானும் நோர்வேயிலிருந்து வந்து கலந்து கொண்ட போது, அதன் தலைவர் அருட்கவி வினாசித்தம்பி ஐயா அவர்களால், எனக்கு தெய்வலய சுரபி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டம் விருது இவைகளுக்கு மேலாக நான் விரும்புவதெல்லாம் ஆத்மார்த்தமானமான கலைப் பணி ஒன்றை மட்டுமே. இதற்குப் பிரதிபலனாக நான் எதையுமே எதிர்பார்ப்பதில்லை.

கேள்வி: மிருதங்கம், தபேலா, மோர்சிங், கஞ்சிரா ஆகிய வாத்தியங்கள் பயின்று புகழ்பெற்றதோடு, நீங்கள் நல்ல குரல் வளம் கொண்ட பாடகரெனவும் அறிகிறேன். இதைப் பற்றிக் கூறுங்கள்.

பதில்: நான் சிறு வயதிருந்தே நன்றாகப் பாடுவேன். மிருதங்கம் கற்காவிட்டால், நான் ஒரு பாடகனாவே வந்திருப்பேன். சமீபத்தில் நானே ஒரு பாடல் இயற்றி, இசையமைத்துப் பாடி, ஒரு இறுவெட்டு வெளியிட்டிருக்கிறேன். அழகான தமிழ் மொழி அழியாது உலகிலே என்று தொடங்கும் பாடல் இது.

இதன் வெளியீட்டு விழா மலேஷியாவின் துணை அமைச்சரும், இளைஞர் விவகார விளையாடுத் துறை அமைச்சருமான, டத்தோவால், மிகவும் சிறப்பாக வெளியீடு செய்யப்பட்டு, அதில் என்னைக் கௌரவிக்கும் முகமாகச், சொற் சுடர் வேந்தன் என்ற பட்டமும் தந்து, தங்கப் பதக்கமும் அளித்தார்கள். இந்த விழாவினை ஒழுங்கு செய்தவர் பிரபல தவில் வித்துவானான கோகிலன் சேலம்.

கேள்வி: ஒரு புகழ் பெற்ற இசைக் கலைஞர் மட்டுமல்ல, நீங்கள் ஒருசமூக ஆர்வலரும் கூட என்று அறிகிறேன். தன்னலம் கருதாது மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகப் பொதுப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம், உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

பதில்: ஏழாலை முத்தமிழ் மன்றத்தோடு, எனக்குச் சிறு வயது முதற் கொண்டே தொடர்பு உண்டு. அதில் அரங்கேறிய நாடகங்களிலெல்லாம் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறேன். இது மட்டுமல்ல, பொதுப்பணியில் நான் ஈடுபட நேர்ந்தது இதன் மூலம் தான். அதன் அங்கத்தவர்களோடு சேர்ந்து, நான் நிறையச் சிரமதானப் பணி செய்திருக்கிறேன். மேலும், என் அம்மா ஒரு மருத்துவத் தாதி என்பதால், ஊரிலே சேவை புரியும் போது இலவசமாகவே இந்தப் பணியை செய்து முடிப்பார் நான் சமூக ஆர்வலனாக முன்னின்று உழைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்., இந்த மன்றம் எனக்கு அளித்த பெரும் கொடை தான் என்று சொல்வேன்.

கேள்வி: உங்களது நீண்ட கால இசையுலக வாழ்க்கையில், மறக்க முடியாத சம்பவங்களாய், பல இருக்கலாம். அதில் ஒன்றை மட்டும் கூறுவீர்களா?

பதில்: மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்றை மட்டும் இங்கு கூறுகிறேன். ஒரு முறை அவுஸ்திரேலியாவில் ஒரு மிருதங்க அரங்கேற்றம் நடந்த போது என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அவ்வேளை அங்கு பிரபல பின்னணிப் பாடகியும் கர்நாடக இசைப் பாடகியுமான மஹதி, இசைக் கச்சேரி செய்த போது நானும், அதில் கலந்து கொண்டு மோர்சிங் வாசித்த அனுபவம், இன்னும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது.

கேள்வி: சொந்த மண்ணை விட்டு எதற்காக நீங்கள் புலம் பெயர்ந்து போனீர்கள்? போன வழி எவ்வாறானது? பலரும் போனது போல் அகதியாகவா? அன்றி வேறு வழியிலா?

பதில்: மேலைநாடுகளில் அகதிகளுக்கான வாழ்விட உரிமை பெறுவதற்கான வாசல் திறக்காத காலம். அப்போது. 1984 இல் தான் நான் மாணவர் விசா எடுத்து நோர்வே சென்றேன். அதற்கு முன் திறந்த வெளி பல்கலைக் கழகத்தில், சட்டம் பயின்றவன் நான். நோர்வே வந்த பிறகு, அக்டர் பல்கலைக் கழகத்தில் படித்துத் தான் நான் ஒரு கணினிப் பொறியியலாளரானேன்.

கேள்வி: இறுதியாகத் தினக்குரல் வாசகர்களுக்காக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்.?

பதில்: இது ஒரு முக்கியமான கேள்வி. இதற்குப் பதில் கூறவேண்டிய தார்மீகக் கடமை எனக்கிருக்கிறது. ஏனென்றால், கலை வழிபாடு என்று வரும் போது, காசு பற்றிய பிரக்ஞை எனக்கு வருவதில்லை. எவரும் மிருதங்கம் வாசிக்க அழைத்தால், நானாக விரும்பி ரேட் பேசிக் காசு வாங்குவதில்லை. அவர்களாக விரும்பிக் காசு தந்தால், மட்டுமே வாங்குவேன்.

அதுவும் என் கலைப் பணிக்காக மட்டுமே. ஆர்யாலயா என்ற கலைக் கல்லூரியின் நிதித்தேவைகளை நிறைவேற்றவே அதைப் பயன்படுத்துகிறேன். இதற்கு மாறாக என் உன்னதமான கலை வாழ்க்கையின் புனிதத்தையே கொச்சைப்படுத்துகிற மாதிரி, எனது இசை வாழ்க்கையில் பல சவால்களுக்கு, நான் முகம் கொடுக்க நேர்ந்தது. அதில் எல்லோரும் அறிய வேண்டுமென்பதற்காக, இங்கு ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறேன். கொழும்பில் நடந்தேறிய ஒரு கசப்பான அனுபவம் இது எனக்கு. உண்மை அறிய வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

கலையை விற்று பிழைப்பு நடத்துகிறவன் நானில்லை. எனக்கு அதன் புனிதம் ஒன்றே குறிக்கோள். அப்படிப்பட்ட என்னிடம், கச்சேரி செய்யப் போன போது அதை ஒழுங்கு செய்ய இருந்த ஒரு பெரியவர், ஒரு பெரிய புகழ் பெற்ற அரங்க ஏற்பாட்டாளர்களில் ஒருவராக அங்கம் வகிக்கும் ஒருவர், துணைப் பக்க வாத்தியக் கலைஞர்களுக்குக் காசு கொடுக்கும் விடயமாகப் பேசும் போது அவர் தங்களுக்கு எவ்வளவு தருவீர்களென்று என்னைக் கேட்ட போது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது கலை என்ன வியாபாரச் சரக்கா? விற்பதற்கும் வாங்குவதற்கும். இது ஒரு மகோன்னதமான வழிபாட்டுக் கலை.

அவர் கேட்கிற மாதிரி அப்படி வாரிவழங்குவதற்கு, நான் அப்படியொன்றும் பணக் கடலில் நீந்துகிறவனுமல்ல. பெயருக்குத் தான் வெளிநாட்டுத் தமிழன். அப்படிப்பட்ட எங்களைக் காசு மரம் காய்ப்பவர்களென்று தான் இங்குள்ளவர்கள் நினைக்கிறார்கள். நிலைமை வேறு. அங்கு வந்து பார்த்தால் தான் இது புரியும். ஒருவரோடு ஒருவர், பேசி உறவாடி, மகிழ்ச்சி கொண்டாடுகிற வாழ்க்கையா அது ? அப்படியிருக்கிற என்னிடம் போய்க் காசு கேட்கிற இவரை நினைத்து, நான் மிகவும் மனம் வருந்தினேன்.

எனது புனிதமான கலை வழிபாட்டிற்கே சவால் விட்ட மாதிரி, இந்த அனுபவம் எனக்கு. ஆகவே தான் தினக்குரல் வாசர்களுக்காக, நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான். கலை வழிபாடு என்று வரும்போது, காசை மறந்து விட்டு அதை ஒரு தவம் மாதிரி ஏற்றுக் கொள்ளுங்கள். இது ஒரு தூய்மையான இறைபணி மாதிரி உங்களைப் புனிதப்படுத்தும். வாழ்க இந்தக் கலை வழிபாடு. மேலும் ஓர் அன்பான வேண்டுகோள். இங்கு கலை நிகழ்ச்சி நடத்த முன் வருகிறவர்கள், கலையை நம்பியே பிழைக்கிற கலைஞர்களின் பொருட்டு, அவர்களுக்கு நிதியுதவி வழங்கிக் கௌரவிக்குமாறு மிகப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

 

(Visited 41 times, 1 visits today)