பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர். ரஷியாவில் ஜூன் மாதம் தொடங்கும் உலகக்கோப்பையில் பிரேசில் அணி இவர் தலைமையில்தான் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரான்ஸ் அணியின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வந்த நெய்மருக்கு கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை.

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் நெய்மர் முழுவதுமாக குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரேசில் அணியை நெய்மர் வழி நடத்துவார் என்று பீலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெய்மர் குறித்து பீலே கூறுகையில் ‘‘சரியாக என்ன நிகழப்போகிறது என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. ஆனால், உலகக்கோப்பைக்கு முன் நெய்மர் தயாராகிவிடுவார். அவரது காயம் மிகப்பெரிய அளவில் மோசமானதல்ல. உலகக்கோப்பையில் நான் பெற்ற அதிர்ஷ்டம் நெய்மரும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்றார்.

லீக்-1 கால்பந்து தொடரில் பிப்ரவரி 25-ந்தேதி நடைபெற்ற போட்டியின்போது நெய்மர் காயம் அடைந்தார். ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதற்கு முன் நெய்மர் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 20 times, 1 visits today)