நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வதற்காக கைத்தொழில் துறை மற்றும் ஏற்றுமதி துறைகளில் மாற்றத்தை ஜனாதிபதி சிறிசேன ஏற்படுத்துவதற்கான
சாத்தியம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கும் அதேவேளை, ஐ.தே.க.விடமிருந்து பொருளாதாரத்தை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாதென முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில்
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்குடன் பெப்ரவரி 10 இல் இடம்பெறும் உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னர் அமைச்சரவையில் மாற்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார சமூக அரசியல் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றம் இலக்காக அமையும் என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். அரசியல் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவிடம் கேள்வி ஒன்று எழுப்ப்பட்டது.

இந்த வருடம் நாட்டின் பொருளாதார நிதி முகாமைத்துவத்தை ஜனாதிபதி எடுத்துக் கொள்வாரா? என்று கேட்கப்பட்ட போது அது தொடர்பாக உறுதியான விதத்தில் அமைச்சர் அபேவர்த்தன பதிலளித்திருக்கிறார்.

அதேசமயம் ஜனாதிபதி சிறிசேன நிதி மற்றும் திட்டமிடல் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றங்களை மேற்கொள்வாரா? பொருளாதாரத்தை கையாள்வதற்காக கைத்தொழில் துறை மற்றும் ஏற்றுமதிகளை தனது நோக்கத்திற்காக மாற்றியமைத்துக் கொள்வாரா என்று கேட்கப்பட்ட போது அது சாத்தியமாக அமையும் என்று அமைச்சர் யாப்பா தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை நிதி மற்றும் பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட அமைச்சுக்களை ஐ.தே.க.வின் அமைச்சர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூழ்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் பொருளாதார விவகாரங்களை செயற்படுத்தவோ அல்லது முகாமைத்துவப் படுத்துவதற்கோ அதிகாரத்தை ஜனாதிபதி சிறிசேன கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் அரசியலமைப்பு விவகார நீதியமைச்சரரான பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார விவகாரங்கள் யாவற்றையு>ம் தான் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று எந்தவொரு தயக்கமும் இல்லாது அண்மையில் ஜனாதிபதி அறிக்கை விடுத்திருந்தார்.

அவை ஐ.தே.க.வின் கரங்களில் கடந்த மூன்று வருடங்களாக உள்ளன. மூன்று வருடத்தின் பின்னர் அவர் இப்போது விழித்தெழுந்து அறிக்கைகளை விடுகிறார். எவ்வாறாயினும் நிதி அமைச்சு மூலோபாயங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு, சர்வதேச வர்த்தக அமைச்சு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சு என்பன யாவும் ஐதேகவின் சிரேஷஷ்ட அமைச்சர்களின் கரங்களில் உள்ளன. ஆதலால் ஐ.தே.க. எம்.பி.க்களிடமிருந்த இந்த அமைச்சுக்கள் யாவற்றையும் ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதனால் இந்த அமைச்சுக்கள் யாவற்றையும் தன் பொறுப்பில் எடுக்க வேண்டி நேரிடும். இல்லாவிடில் அரசியலமைப்பின் பிரகாரம் அவ்வாறு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று பிரீஸ் கூறியுள்ளார்.

தனது தலைமையின் கீழ் விசேட பொருளாதார பேரவையின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை தான் நேரடியாக முகாமைத்துவப்படுத்தப் போவதாக ஜனாதிபதி சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.

(Visited 27 times, 1 visits today)