ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை தழுவியது.

மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்தது. இதனால் 4 ரன்னில் சென்னை அணி கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.

கேப்டன் டோனியின் அதிரடியான ஆட்டம் பலன் இல்லாமல் வீணாகிவிட்டது. அவர் 44 பந்தில் 79 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 5 சிக்சர்களும் அடங்கும். கடைசி ஓவரில் டோனி இன்னும் அதிகமான அதிரடியை வெளிப்படுத்தி இருந்தால் வெற்றி பெற்று இருக்கும்.

அம்பதி ராயுடு 35 பந்தில் 49 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 13 பந்தில் 19 ரன்னும் எடுத்தனர். ஆண்ட்ரூ டை 2 விக்கெட்டும், அஸ்வின், மொகித் சர்மா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

சென்னை அணி தோற்றாலும் கேப்டன் டோனியின் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முதுகு வலியோடு அவர் தனி ஒருவராக அணியின் வெற்றிக்கு போராடினார். அவர் பந்துகளை சிக்சர், பவுண்டர்களாய் அடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார். பந்துவீச்சாளர்கள் எதிர் பார்க்காத வகையில் அவரது ஆட்டம் பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜாவுக்கு முன்னதாக பிராவோவை களம் இறக்காதது. குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. ரன்ரேட் தேவை மிக அதிகமாக இருக்கும் போது பிராவோவை தான் முன்னதாக களம் அனுப்பி இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஜடேஜா 13 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். அவர் இன்னும் கூடுதலாக அதிரடியை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். பிராவோ அவர் இடத்தில் இருந்தால் ஆட்டத்தின் தன்மைமாறி இருக்கலாம்.

இதுகுறித்து கேப்டன் டோனி விளக்கம் அளித்து உள்ளார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

ஜடேஜா மீது நம்பிக்கை இருக்கிறது. அவருக்கான வாய்ப்பை வழங்க இது தான் சரியான நேரம். அவர் சிறப்பாக ஆடுவார் என நம்புகிறேன். இடது கை ஆட்டக்காரரான அவரால் ஆட்டத்தை மாற்ற இயலும்.

பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் ஆட்டம் அபாரமாக இருந்தது. இதேபோல முஜீப் நன்றாக பந்துவீசினார்.

2-வது பாதி ஆட்டத்தில் பனி அதிகமாக இருக்கும் என்று கருதி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தேன். ஆனால் எதிர்பார்த்த பலன் இல்லை. எந்த மாதிரியான பந்துகளை அடிக்காமல் விட்டோம் என்பது உள்ளிட்ட வி‌ஷயங்களை யோசித்து நாங்கள் செயல்பட வேண்டிய நேரம் இதுவாகும். அனைத்து போட்டியிலும் வெற்றி அருகே தான் இருக்கிறது. ஆனால் அணியில் உள்ளவர்கள் இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து துறையிலும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டி இருக்கிறது.

எனக்கு முதுகில் வலி ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் கடவுள் எனக்கு அதிக சக்தியை கொடுத்து இருக்கிறார். எனது கைகள் அதன் வேலையை செய்வதால் எனது முதுகை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. அதிகமான பாதிப்பாக இது இருக்கக்கூடாது. எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் தோல்வியை தழுவியது. 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தானை 20-ந்தேதி சந்திக்கிறது.

பஞ்சாப் அணி 2-வது வெற்றியை பெற்றது. அந்த அணி 4-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை 19-ந்தேதி சந்திக்கிறது.

(Visited 35 times, 1 visits today)