இந்திய பின்னணி பாடகர்கள் காப்புரிமை சங்கம் சார்பில் பாடகர்களுக்கு ரூ.51 லட்சத்து 77 ஆயிரத்து 704 ‘ராயல்டி’ தொகை வழங்கும் விழாவும் 8-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ள பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் சென்னையில் நேற்று நடந்தது.
இதில் கே.ஜே.ஜேசுதாஸ் பங்கேற்று கேக் வெட்டினார். பாடகர்கள் அவருக்கு பூங்கொத்து வழங்கினார்கள்.
அப்போது கே.ஜே.ஜேசுதாஸ் பேசியதாவது:-
“தேசிய விருதை 8-வது முறையாக பெறுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றி. பாடல்கள் பாடும்போது பணம் எவ்வளவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இல்லை. சுருதி, உணர்வுகள் பாடலில் நன்றாக இருக்கிறதா என்றுதான் யோசிப்பேன்.
அப்போதுதான் சரஸ்வதி கூடவே இருப்பாள். பாடகர்களுக்கு ராயல்டி கிடைப்பதன் மூலம் மரியாதை வந்து இருக்கிறது. பாட்டுத்தொழிலை தியானமாக பாவித்து செய்தால் எல்லாமே தேடிவரும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசியதாவது:-
“ஜேசுதாசுக்கு 8-வது முறையாக தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பெல்லாம் பாடல் பதிவின்போது இசைக்கருவிகள், கலைஞர்கள் என்று கல்யாண கச்சேரி மாதிரி இருக்கும். இப்போது அப்படி இல்லை. பாடகர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலைகள் தெரியாது. பாடத்தான் தெரியும். என்னைப்போன்ற சிலர் டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்கிறோம்.
இந்த நேரத்தில் பாடகர்களுக்கு ராயல்டி தொகை புதையல் மாதிரி கிடைத்து இருக்கிறது. முன்பெல்லாம் பாடகர்களுக்கு இது கிடையாது. பக்தி பாடல்கள் பாடினால் வருடம் தோறும் கொஞ்சம் பணம் தருவார்கள்.”
இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், மனோ, எஸ்.பி.பி.சரண் பாடகிகள் பி.சுசீலா, வாணிஜெயராம், சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(Visited 50 times, 1 visits today)