சார்ஜில் இருந்த மொபைல் வெடித்ததால், சிறுவன் உயிரிழந்தான்.

சட்டீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டம் குட்ரபாரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ரவி சன்வான்(12). இவன் கடந்த திங்கள் அன்று இரவு, தனது நண்பருடன் அமர்ந்து மொபைலில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது மொபைல் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென மொபைல் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டு, குடல் வெளியே வந்துள்ளது. இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே தடிமனான துணியால் வயிற்றை இறுகச் சுற்றி, அம்பிகாபூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் நிலைமை மோசமாகவே, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

 ஆனால் ஊதிய உயர்வு கோரி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்ததால், உடனே அழைத்துச் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் மறுநாள் காலை அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் சிறுவன் உயிரிழந்தான். இவனது நண்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

(Visited 38 times, 1 visits today)