ஜேர்மனியில் ஸ்ருட்காட் நகரில் 24.03.2018 சனிக்கிழமை லயம் நுண்கலைக் கழகம் வழங்கிய ”இசை மழை 2018” நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது.

ஈழதமிழரை தன் இசையால் வசமாக்கிய ”ஈழத்து இசைப்புயல் ” இசையமைப்பாளர் இசைப்பிரியனின் நேரடி நெறியாள்கையில் 35 இற்கு மேற்பட்ட மாணவர்கள் இசையமைக்க பிரபலமான தாயகப்பாடகர்கள் பாடிட இசை மழை பொழிந்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் வெற்றிமணி ஆசிரியரும் மதுரக் குரலோன் எஸ்.கண்ணனும் கலந்து சிறப்பித்தார்கள்.

இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள லயம் நுண்கலைக்கல்லூரி நிறைவான இசைப் பயிற்சி பெற்று முன்னணிக்கு வருவதை உங்கள் இசை உணர்த்துவதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் குறிப்பிட்டார்.

அவர் மாணவர்களைப் பாராட்டியதோடு அந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆசான் இசைப்ரியன், கழகத்தை சிறப்பாகக் கட்டிக்காக்கும் நிறுவனர் நடாராசா சத்தியகிரி அவருடன் இணைந்து பணியாற்றும் கழக உறுப்பினர்கள்.பெற்றோர்களையும் பாராட்டி மகிழ்ந்தார்.

மேலும் குறிப்பாக சிறுவர்கள் மேடையில் பாடும்போது பாடல்வரிகளை காகிதத்திலோ அல்லது கைத் தொலைபேசியிலோ பார்த்துப் பாடாமல், மனனம் பண்ணிப் பாடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழத்தியது. இன்று பிரபல திரைப்படப் பாடகர்கள் கூட அவர்கள் பாடிய பாடல்களையே வரிக்கு வரி கைத்தொலைபேசியில் பார்த்துப் பாடுவதையும் நீங்கள் கண்டு இருப்பீர்கள். ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நம்மவர்களது வீட்டு மொழி தமிழாக இருப்பதும், நம் சிறார்களின் தமிழ் சிறப்பாக இருப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது என உரைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுரக்குரலோன் கண்ணன் இசைப்பிரியனின் சிறப்பான பணிக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார். இசைப்பிரியனது அர்ப்பணிப்பான இசைப்பணி மாணவர்களது இசையில் தெரிகிறது. பல பாடல்கள் சிறுவர்களுக்கு சவாலாக அமைந்தாலும், அப்பாடல்களுக்கு எல்லாம் மிக நுணுக்கமாக பின்னணி இசைவழங்கிய மாணவர்களையும், இத்தருணத்தில் பாராட்டுவதாகக் கூறினார்.

ஸ்ருட்காட் நகரில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் விழாவில் உணவுச்சாலை அமைத்து அதன் வருமானத்தில் ஒரு பகுதியை தாயக மாணவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். மகிழ்ச்சியான தருணங்களிலும் தாய் மண்ணை மறவதாத மாணவர்கள் பாராட்டுக்குரியவர்களே. இசை மழை யாவரது உள்ளங்களையும் நனைத்தது.

சிவப்பிரியன்,

(Visited 226 times, 1 visits today)