புத்தாண்டை முன்னிட்டு இலங்கை புகையிரத திணைக்களம் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைவாக கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை மற்றும் மாஹவ வரையிலும் மாஹவயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இன்றும் நாளையும் இரண்டு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. நேற்றிரவு 7.20 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை நோக்கி சென்ற புகையிரதத்தில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இணைக்கப்பட்டன.

எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் இந்த மேலதிக புகையிரத சேவை இடம்பெறும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக இரண்டாயிரம் பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தப் போவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு, மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை 24 மணிநேரமும் பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்தார். எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை பிற மாவட்டங்களில் இருந்து கொழும்பு நோக்கி மேலதிக பஸ் சேவைகள் நடத்தப்படும்.

பயணிகளுக்கு முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கு கொழும்பு மத்திய பஸ்தரப்பு நிலையத்தில் விசேட பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தொலைபேசியின் ஊடாகவும் பிரதான அலுவலகத்திற்கும் அறிவிக்க முடியும். இதற்கான தொலைபேசி இலக்கம் 011 7 555 555 ஆகும்.

இதற்கு மேலதிகமாக பஸ்களில் காட்சிப்படுத்தப்படும் தொலைபேசி ஊடாகவும் பிரதேச அலுவலகங்களுக்கு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். இந்தக் காலப்பகுதியில் போக்குவரத்துச் சபையின் சாரதிகள், நடத்துனர்கள் அடங்கலாக சகல பணியாளர்களதும் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திரு.சிறிவர்த்தன குறிப்பிட்டார்.

(Visited 26 times, 1 visits today)