கொழும்புக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன்விழா வியாழக்கிழமை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அன்றைய தினம் மாலை இராமகிருஷ்ண தோட்டம், இல.12 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லஷ்மி கோயிலிலிருந்து கம்பன் திருவுருவப்படமும் சீதா இராம விக்கிரகங்களும் ஊர்வலமாக விழா மண்டபம் நோக்கி எடுத்து வரப்பட்டன. இவ் ஊர்வலத்தில் நம் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த பிரமுகர்களும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த அறிஞர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் மங்கள இசையும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இசையும், மங்கையர்களின் நிறைகுட பவனியும் ஊர்வலத்தை அலங்கரிக்கவுள்ளன.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருக்கேதீஸ்வரர் ஆலயத் திருப்பணியைச் சார்ந்த திருமதி அ. கயிலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைக்க, ஸ்ரீ ஐஸ்வர்ய லஷ்மி திருக்கோயில் அறங்காவலர் சபைத் தலைவரான செல்வி மாலா சபாரத்தினம் தலைமையில் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சரான டத்தோ எம். சரவணன் தொடக்கவுரையாற்றினார்.

அதனையடுத்து நூல் வெளியீடு, இறுவட்டு வெளியீடு என்பன இடம்பெற்றன. முதற்பிரதிகளை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி, நாவலர் நற்பணி மன்ற தலைவர் என்.கருணைஆனந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமாரின் எழிலுரை இடம்பெற்றது. இறுதியாக நாட்டிய சங்கமத்தில் நாட்டிய கலாமந்திர் வாசுகி ஜெகதீஸ்வரன், நிருத்தன நாட்டியப் பள்ளி சிவானந்தி ஹரிதரர்ஷன், நிர்மலாஞசலி நடனப்பள்ளி நிர்மலா ஜோன் ஆகியோர் விங்கிய ”இராமாவதாரம்” நாட்டிய சங்கமமுதும் இடம்பெற்றதுடன் அவர்களுக்கு கௌரவமும் வழங்கப்பட்டது.

படப்பிடிப்பு ஏ.கே.விஜயபாலன்;

(Visited 232 times, 1 visits today)