‘மாத்தளை சோமுவின் இலக்கிய முயற்சிகளின்
சிகரமாக அமையும் சமூக வரலாற்று நாவல்’
                                                                                         
                                                                                                             – பாரதி –
‘மாத்தளை சோமு’ என்ற பெயர் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பரிச்சயமானது. இலக்கியத் துறையில் தனக்கென தனியான ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அவர். சிறுகதைஇ நாவல்இ பயண இலக்கியம்இ விமர்சனம் என பல துறைகளில் கால்பதித்துள்ளார். அவை அனைத்திலும் முத்திரையும் பதித்துள்ளார்.

இதுவரையில் 25 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார். இவரது ‘மூலஸ்தானம்’ என்ற நாவலும்இ ‘அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்’ என்ற நாவலுல் இலங்கை சாகித்திய விருதைப் பெற்றவை. அத்துடன் இவரது ‘எல்லை தாண்டாத அகதிகள்’ என்ற நூல் இலங்கை சுதந்திர அமைப்பு வழங்கிய சிறந்த நாவலுக்கான ‘விபவி’ விருதைப் பெற்றது. சமகாலத்தில் முன்னணி எழுத்தாளர் வரிசையில் நோக்கப்படும் அவர், அவுஷ்திரேலியாவில் புலம்பெயர்ந்த நிலையில் அமைதியாக தனது எழுத்துப்பணியை சமூக நோக்கோடு செய்துவருபவர். அதனால்தான் ‘கண்டிச் சீமை’ என்ற இந்த சமூக வரலாற்று நாவலும் அதிகளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அவரது இலக்கிய முயற்சிகளின் சிகரமாக ‘கண்டிச் சீமை’ அமைந்திருக்கின்றது எனக் குறிப்பிடலாம். இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கின்றார் என்பதை நூலைப்படிக்கும் போது புரிந்துகொள்ள முடிகின்றது. இதனை ஒரு ‘சமூக வரலாற்று நாவல்’ என அவர் குறிப்பிடுகின்றார். மலையக மக்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட நாவல் இது.

குறிப்பாக தமிழகத்திலிருந்து பெருந்தோட்டத் தொழிலுக்கென மலையகத்துக்குக் கொண்டுவரப்பட்ட மக்களின் துயர வாழ்க்கையை இந்த நாவல் கூறுகின்றது. வரட்சியும் பஞ்சமும் அதனால் ஏற்பட்ட மரணங்களும் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியிருந்த நிலையில் அதிலிருந்து தப்பிக்கலாம் என்ற ஏக்கத்துடன் கடல் கடந்து வந்த ஒரு சமூகத்தின் கதையை இந்த நாவல் கூறுகின்றது.

1765 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கறுவாப் பட்டைத் தொழிலுக்காகத்தான் முதன்முதலாக தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அப்போது இலங்கை டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கைத் தீவில் கண்டி இராஜ்யம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை அவர்கள் கைப்பற்றியிருந்தார்கள். இந்த ஆரம்பம் பிரித்தானியர் ஆட்சியில் மேலும் தீவிரமடைந்தது.

1830 இல் கண்டியை பிரித்தானியர்கள் கைப்பற்றி கோப்பிப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்த பின்னர்தான் தமிழகத்திலிருந்து பெருந்தொகையானவர்கள் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். இலங்கையின் பொருளாதாரத்தில் அவர்களுடைய உழைப்பு பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தாலும் கூட அவர்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டார்கள் என்பதையிட்டோ அவர்களுடைய வாழ்கை நிலை எவ்வாறிருக்கின்றது என்பதையிட்டோ ஆளும் வர்க்கத்தினர் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. தமிழகத்திலிருந்து படகில் கொண்டுவரப்பட்ட அவர்கள் தலைமன்னார் துறைமுகத்தில் இறங்கப்பட்டு அங்கிருந்து கால்நடையாகவே மலையகத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள்.

இந்தப் பயணம் எந்தளவுக்கு மோசமானதாக இருந்திருக்கும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். வீதிகள் சீராக இல்லாத நிலை, உணவு, மருத்துவ வசதிகள் போதிளவில் இல்லாத நிலை. குடிதண்ணீரைக் கூட பெறமுடியாத அவலம் இதனால் மலையகத்துக்கு வருவதற்கு முன்னரே வழியில் இறந்தவர்கள் பலர். மலையகத்து வந்த பின்னர் காடுகளை அழித்து வளம் கொழிக்கும் பெருந்தோட்டங்களாக அவற்றை உருவாக்கும் போது மடிந்தவர்கள் மேலும் பலர்.

இந்தப் பின்னணியில் கோப்பி, தேயிலைக் கால வரலாற்றுக்கால மலையக சமூகத்தின் வாழ்க்கை நிலையை இந்த நாவலில் வெளிக்கொண்டு வருகின்றார் மாத்தளை சோமு. அதனால்தான் இதனை ஒரு சமூக வரலாற்று நாவல் என்று அவர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு குறிப்பிடப்பட்டாலும் தனக்கேயுரிய சுவாரஸ்யத்துடன் லாவகமாக கதையை நகர்த்திச் செல்கின்றார் ஆசிரியர். அதனால், ஒரு நாவலைப் படிக்கும் விறுவுறுப்புடன் இதனைப்படிக்க முடிகின்றது.

லண்டன் டவர் பிரிஜ் பகுதியில் அன்டன் ஸ்மித், கதரின் ஆகியோரின் சந்திப்பு, காதலர்களான அவர்களிடையேயான உரையாடலுடன் நாவலை ஆரம்பிக்கிறார் நூலாசிரியர். கதை எங்கே போகப்போகின்றது என்பதை அந்த உரையாடலே கோடி காட்டுகின்றது. இவ்விருவருமே பிரித்தானியர்கள். ஸ்மித்தின் தந்தை பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் தோட்டத் துரையாகப் பணிபுரிந்தவர். அங்கு பணிபுரியும் காலத்தில் சிவப்பி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார். அதன் மூலம் 4 பிள்ளைகளுக்குத் தந்தையானவர். பின்னர் லண்டன் திரும்பி மணமுடித்த பிரித்தானிய பெண்ணுக்குப் பிறந்தவன்தான் ஸ்மித்.

தந்தை மரணமடைந்த பின்னர் அவரது டயறிக் குறிப்புக்களிலிருந்து தந்தையின் இலங்கை வாழ்க்கையை அறிந்துகொள்கின்றான் ஸ்மித்தின் தாய். அது ஸ்மித்துக்குத் தெரியவருகிறது. தந்தையின் முதல் மனைவியைப் பார்ப்பதற்காக தன்னுடைய காதலியான கத்தரினையும் அழைத்துக்கொண்டு இலங்கை செல்கிறான் ஸ்மித். இப்படி ஆரம்பிக்கும் நாவலில் ‘பிளாஷ்பாக்’காகத்தான் மலையக மக்களின் வரலாற்றைக் கொண்டுவருகின்றார் நூலாசிரியர்.

தமிழகத்தில் ஏற்பட்ட வரட்சி. அதனால் ஏற்பட்ட பஞ்சம். அந்தப் பஞ்சத்திலிருந்து தப்புவதற்காக கண்டிச் சீமைக்கு புறப்பட்ட மக்கள். அவர்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக பிரித்தானிய ஆட்சியாளர்கள் கையாண்ட உபாயங்கள் என பலதரப்பட்ட விடங்களையும் உள்ளடக்கியதாக இந்த நாவல் செல்கின்றது. சிவப்பி என்ற ஒரு பெண் பாத்திரத்தின் மூலம் தன்னுடைய கதையை நூலாசிரியர் நகர்த்திச் செல்கின்றார். சிவப்பி என்பது மாத்தளை சோமுவின் ஒரு பாத்திரப் படைப்பாக இருக்கலாம். ஆனால், இதன் மூலமாக ஒரு சமூகத்தின் கதையை அவர் சொல்கின்றார். கதை என்றால் அதில் கற்பனையும் இருக்கும். ஆனால், ‘இது யாவும் கற்பனை’ என்று முடித்துவிடக் கூடிய ஒரு நாவல் அல்ல.

கதையின் களமாக இலங்கை மட்டுமன்றி மலேயாவும் வருகின்றது. தமிழகத்திலிருந்து புறப்பட்ட மக்கள் இலங்கைக்கு மட்டுமன்றி மலேயாவுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள கொக்கோ தோட்டங்களில் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அது குறித்தும் இந்த நாவல் பேசுகின்றது. ஒரு சமூகத்தின் கதையை ஒரு நாவலாக எழுதியிருப்பதன் மூலம் அந்த மக்களின் உணர்வுகளை, அவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய நெருக்கீகளை நுலாசிரியர் உணர்வுபூர்வமாக வெளிக்கொண்டுவந்திருக்கின்றார். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார் எனச் சொல்லலாம். இந்த நூல் மலையக மக்களின் வரலாற்றில் முக்கியமான கால கட்டங்களை வெளிப்படுத்தும் அரிய புகைப்படங்களையும் கொண்டிருக்கின்றது.

பேசாப்பொருள் பேசத் துணிந்தேன் என்கிறார் மகாகவி பாரதி. எழுத்தாளனும் “கவிஞனும் பேசாப்பொருளை பேச வேண்டும்” எனக் குறிப்பிடும் நூலாசிரியர், “ஆகவே இந்த நூலின் மூலம் அதனைப் பேசமுனைந்தேன்..” எனக் கூறுகின்றார். ஒரு சமூகத்தின் வரலாற்றை பாத்திரப் படைப்புக்கள் மூலம் ஒரு சிறந்த நாவலாக்கியுள்ள மாத்தளை சோமுவிடமிருந்து தமிழ் சமூகம் இன்னும் பலவற்றை நிச்சயமாக எதிர்பார்க்க முடியும்.

(Visited 89 times, 1 visits today)