தி.ஞானசேகரன்

தமிழ் இலக்கியத்தில் புனைவுக்கட்டுரை என்பது ஓர் இலக்கிய வகைமை. இது விவரணக்கட்டுரை, ஆராய்ச்சிக்கட்டுரை, தகவல்தரும்கட்டுரை என்பனவற்றிலிருந்து வேறானது. புனைவுக்கட்டுரையில் கற்பனையும் அழகியல் அம்சமும் பாத்திரவார்ப்பும் இணைந்திருக்கும். தமிழிலக்கிய உலகில் இன்று புனைவுக் கட்டுரையின் தலைமைப் படைப்பாளியாகத் திகழ்பவர் ஆசி கந்தராஜா.

அவுஸ்திரேலியாவில் வாழும் ஆசி கந்தராஜா ஓர் ஈழத்து எழுத்தாளர். பூங்கனியியல், உயிரியல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியரான இவர், ஜேர்மனி, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் பயின்றவர். 20 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் பூங்கனியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம்பற்றி விரிவுரைகள் ஆற்றியவர். இத்துறையில் பல கல்விமான்களை உருவாக்கியவர். இத்துறையில் 70க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். ஜேர்மன் நாட்டில் 13 ஆண்டுகள் வாழ்ந்த இவர், தற்போது 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

பல்கலைக்கழகப் பணி நிமித்தம் இவர் சென்ற நாடுகளில், தான் கண்ட வித்தியாசமான நிகழ்வுகள், வாழ்வியல் தரிசனங்கள் ஆகியவற்றைப் படைப்புகளாகத் தருகிறார். அதேவேளை சாமானியர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அறிவியல் விஷயங்களையும் இவர் புனைவுக்கட்டுரைகளாகத் தருகிறார். ஞானம் சஞ்சிகையில் ஆசி கந்தராஜா சிறுகதைள், குறுநாவல், புனைவுக்கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் புனைவுக்கட்டுரைகளே அதிகமானவை. இவர் ஞானம் சஞ்சிகையில் எழுதிய புனைவுக்கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் முகநூலிலும் மீள்பிரசுரமாகியுள்ளன.

‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக்கத்தரிக்காய்…!’  தொகுப்பில் அடங்கியுள்ள புனைவுக்கட்டுரைகளில் ஏழு கட்டுரைகள் ஞானம் சஞ்சிகையில் வெளிவந்து வாசகர்களிடையே பெரும் பாராட்டடைப் பெற்றவை. வீரசிங்கம் பயணம் போகிறார் என்ற கட்டுரை தினக்குரலில் தொடராக வெளிவந்தது. இத்தொகுப்பில் உள்ள செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக்கத்தரிக்காய், ஒட்டுக்கன்றுகள், மரங்களும் நண்பர்களே, என்.பி.கே. ஆகிய படைப்புகள் யாழ்ப்பாணப் பிரதேசத்தைப் பகைப்புலமாகக் கொண்டவை.

தான் பிறந்து வளர்ந்த யாழ்மண்ணின் விவசாயம் தொடர்பான பெருஞ் செல்வங்கள் அழிந்து போகின்றனவே அவற்றை மீளெழுச்சி பெறச் செய்யவேண்டும், அதற்கான அறிவியலை சாதாரண மக்களும் பெறவேண்டும், அவர்கள் விழிப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்கின்ற ஆதங்கம் ஆசிரியரின் அடிமனதில் கனன்று கொண்டிருக்கின்றதோ என்ற எண்ணம் மேற்குறிப்பிட்ட படைப்புகளை வாசிக்கும்போது தோன்றுகிறது.

‘எட தம்பி, அப்ப எங்கடை யாழ்ப்பாணத்துக்குப் பெருமை சேர்த்த கறுத்தக் கொழும்பான் மாம்பழமும் கொடிகாமத்துப் பலாப்பழமும், நீர்வேலி மண்ணில் விளைந்த இதரை வாழைப்பழமும் தங்களின் தூய பரம்பரைச்சுவைகளுடன் இப்ப இல்லையெண்டு சொல்லுறியோ?’ என்று ஒரு பாத்திரம் பேசுவது இந்த எண்ணத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைகிறது. மேற்குறிப்பிட்ட ஆக்கங்களில் ஆசிரியர், அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த யாழ்ப்பாணச் சூழலை அக்கால மக்களின் வாழ்வியலை வாசகர்முன் கொண்டுவருகிறார்.

கைதேர்ந்த புனைகதையாளனின் திறனுடன்; மண்ணின் மைந்தர்களுக்கேயுரிய மண்வளச் சொற்றொடர்களை ஆங்காங்கே புகுத்தி வாசகனைப் படைப்புடன் ஒன்றச் செய்கிறார். எடுத்துக்காட்டாக, ‘கத்தரிக்காய்கள் பல்லிளித்தன’, ‘மனைவிக்குக் குழையடித்து’, ‘மாமிக்குப் புளிப்பத்தியிருக்க வேண்டும்’, ‘வெட்டிப் புருடாவிட்டு’, ‘நீண்டநேரம் பீலாவிடுவார்’, ‘பேடு கூவித்தான் பொழுது விடியும்’ ‘காதைக்கடித்தன சில ஊர்ப்பெரிசுகள்’, ‘ஆச்சியின் வாய் நமநமக்க’, ‘பொட்டளி போலக்கட்டி’, ‘கை நனைக்காமல் போவதில்லை’, ‘என்ன விண்ணாணமோ எனப் புறுபுறுத்தபடி’ போன்ற சொற்பிரயோகங்களைக் கூறலாம்.

இந்த மொழிசார் நளினங்கள் வாசகனை படைப்புடன் ஒட்டியுறவாடச் செய்வதோடு புனைவின் அழகியல் அம்சங்களுக்கு வலுச்சேர்க்கின்றன. விலாங்கு மீன்கள் என்ற புனைவுக்கட்டுரையில் அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வரலாற்றையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விபரிக்கும் ஆசிரியர், ‘ஈழத்தமிழர் மத்தியில் மதுவும் போதைப்பொருட்களும் திட்டமிட்டவகையில் அறிமுகம் செய்யப்படுவதை நினைத்து பரமலிங்கம் உணர்ச்சிவசப்பட்டார்’ என யாழ்ப்பாணத்துப் பின்னணியை ஒப்பிட்டு நோக்குவது தற்செயலானதல்ல.

ஆசிரியரின் படைப்புலகம் யாழ்ப்பாணத்தைச் சுற்றியே சுழல்கிறது. வீரசிங்கம் பயணம் போகிறார் என்ற கட்டுரை லெபனானுக்கு பேராசிரியராகப் போகும் வீரசிங்கம் என்ற யாழ்ப்பாணத்து மனிதரின் அனுபவங்களாக விரிகிறது. இதில் அவர் மரபணு மாற்றம் செய்யப்படும் பயிர்கள் பற்றியும் லெபனானில் கீழைத்தேய மக்களின் வாழ்வு பற்றியும் அந்நாட்டின் அரசியல் வரலாறு பற்றியும் இஸ்லாத்தின் மதப்பிரிவுகள் பற்றியும் பதிவு செய்துள்ளார்.

‘தென்லெபனாலில் யாழ்ப்பாணச் சுவாத்தியம் உண்டு. அங்கு மா, வாழை, தோடை, எலுமிச்சை, தொடக்கம் எல்லா உலர்வலயப் பயிர்களும் நன்கு வளரும்’ என யாழ்ப்பாணத்துச் சுவாத்தியத்தை தென்லெபனான் சுவாத்தியத்துடன் இணைத்துக் காட்டுகிறார். மைனாக்கள் என்ற கட்டுரை பிஜித்தீவு அரசியல் பற்றியும் மக்கள் வாழ்வியல் பற்றியும் அங்கு கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யச்சென்ற இந்திய வம்சாவளியினரது இன்றைய நிலை பற்றியும் பேசுகிறது. தம்பித்துரை அண்ணனும் பேரனும் ஐந்து ஐமிச்சங்களும் என்ற கட்டுரை சமகாலத்தில் மக்களிடையே நிலவும் சந்தேகங்கள் சிலவற்றிற்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் தருவதாக அமைகிறது.

ஆசி கந்தராஜாவின் புனைவுக்கட்டுரைகளில் யாழ்ப்பாணத்துக் கதாபாத்திரங்கள் வராத கட்டுரைகளைக் காணமுடிவதில்லை. மொத்தத்தில், விஞ்ஞான பூர்வமானதும் அறிவியல் சார்ந்ததுமான சிக்கலான விடயங்களை இலகு தமிழில் சொல்லிவிடும் சூட்சுமம் ஆசி கந்தராஜாவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் புனைவுக்கட்டுரை என்ற வகைமையை அறிமுகம்செய்த பெருமையை ஞானம் சஞ்சிகைக்கு அளித்ததோடு தமிழின் உலகத்தரமான சில சிறுகதைகளை ஞானம் சஞ்சிகையில் எழுதி சஞ்சிகையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் ஆசி கந்தராஜா. அவரது இந்தப் புனைவுக்கட்டுரைத் தொகுப்பினை ஞானம் பதிப்பகத்தி னூடாக வெளிக்கொணர்வதில் நாம் பெருமை அடைகிறோம்.

(Visited 58 times, 1 visits today)