பாரதி

”போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை குற்றஞ்சாட்டப்பட்டவரும் செய்ய முடியாது. குற்றஞ்சாட்டுபவரும் செய்ய முடியாது. இரண்டுக்கும் பொதுவாக உள்ள ஒரு அமைப்புத்தான் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை. அப்படிக் கேட்பதில் ஒரு சட்ட நியாயம் இருக்கின்றது. இலங்கையில் அதனைத்தான் நாமும் வலியுறுத்துகின்றோம்” என்று சொல்கிறார் இந்தியாவின் ஓய்வுபெற்ற நீதியரசரும், தமிழகத்தின் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளருமான துரைசாமி அரிபரந்தாமன்.

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி சென்னையில் சுமார் 3,000 சட்டத் தரணிகளின் கையொப்பங்களைப் பெற்றுக்கொண்டுவந்த அரிபரந்தாமன், அவற்றை ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் கையளித்திருக்கின்றார். மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் பங்குகொள்வதற்காக ஜெனீவா வந்திருந்த அரிபரந்தாமன், கூட்டத் தொடர் முடிவடைந்திருந்த நிலையில், ஞாயிறு தினக்குரலுக்கு தொலைபேசி மூலமாக நேர்காணல் ஒன்றை வழங்கினார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கேள்வி: முதல் முறையாக ஜெனீவாவுக்கு வந்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருக்கின்றீர்கள். நீண்டகாலம் இந்தியாவில் நீதியரசராகக் கடமையாற்றிய அனுபவமும் உங்களுக்குள்ளது. அந்தப் பின்னணியில், இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நா. மூலமாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?

பதில்: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெறுவது ஒரு ஜனநாயகப் போராட்டம். தமிழ் மக்கள் இந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை பயன்படுத்துவதை ஒரு நல்ல முயற்சியாகவே நான் பார்க்கிறேன். ஏனென்றால், தினமும் பெருமளவு அரசு சாராத என்.ஜி.ஓ.க்களின் பிரதிநிதிகள் இங்கு இடம்பெற்ற பக்க நிகழ்வுகளில் உரையாற்றுவார்கள். அதில் 10 முதல் 15 வரையில் ஈழத் தமிழர்களின் குரல்களாக ஒலிக்கின்றன. இதன்மூலமாக ஈழத் தமிழர்கள் குரல் சர்வதேசத்தை எட்டுகின்றது. அந்த வகையில் பரந்தளவில் தமிழ் அமைப்புக்கள் மனித உரிமைகள் பேரவையில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள்.

பெங்களூரிலிருந்து போல் நியூமன் என்ற பேராசிரியர் இங்கு வந்திருக்கின்றார். அதனைவிட தமிழகத்திலிருந்து சட்டத் தரணிகள் சிலர் என்னுடன் வந்திருக்கின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் பலர் வந்திருக்கின்றார்கள். இதனைவிட பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சிலர் இங்கு வந்திருக்கின்றார்கள். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இரத்த உறவினர்கள் சிலர் இங்கு வந்திருந்தார்கள். இவர்கள் அனைவருமே இங்கு இடம்பெற்ற பக்க நிகழ்வுகளிலும், பிரதான நிகழ்விலும் உரையாற்றியிருக்கின்றார்கள். இவை சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இதற்கு உரிய பலன் கிடைக்கும் என நிச்சயமாக நம்புகின்றேன்.

கேள்வி: பேரவையில் உரையாற்றக்கிடைத்த சந்தர்ப்பங்களில் எவ்வாறான விடயங்களை நீங்கள் முக்கியமாக வலியுறுத்தினீர்கள்?

பதில்: இவற்றில் இரண்டு விடயங்களை நாம் வலியுறுத்தினோம். ஒன்று போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்பது. இரண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது. இவற்றை வலியுறுத்தி நாம் இங்கு உரையாற்றியிருந்தோம். இவற்றை வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கவனமாக அவதானித்தார்கள். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கின்றது. ஆக, இந்தப் பிரச்சினை இப்போது ஒரு அனைத்துலகப் பிரச்சினையாகிவிட்டது என்பதைத்தான் ஜெனீவாவில் உணர முடிந்தது.

கேள்வி: ஆணையாளரின் அறிக்கை புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: ஆணையாளரின் அறிக்கையைப் பொறுத்தவரை அது 80 முதல் 90 வீதம் வரையில் கடுமையான குற்றச்சாட்டுக்களை இலங்கை மீது முன்வைக்கிறது. 10 முதல் 20 வீதம் வரையில் பாராட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் செய்வதாகச் சொன்ன பலவிடயங்களைச் செய்யவில்லை என்பதை ஆணையாளரின் அறிக்கை தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். தீர்வுக்கான அமைப்புக்களை உருவாக்கவில்லை. பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான கால அட்டவணை ஒன்றை இலங்கை முன்வைக்கவில்லை என்பதையும், காணாமலாக்கப் பட்டோர் சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை என்பதையும், உண்மை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவில்லை என்பதையும், நிவாரணம் வழங்குதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையும் ஆணையாளரின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இராணுவம் 36 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வைத்திருப்பதை ஏற்கமுடியாது என்றார்கள். முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்திருந்தார்.

பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை அமைக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இவ்வாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த அறிக்கை சிறப்பாக இருக்கின்றது. இலங்கை மீதான குற்றவாசிப்பாகவே அது இருந்தது.

ஆனால், பன்னாட்டு விசாரணை வருமா இல்லையா என்பது எமது அழுத்தங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். அறிக்கையின் இறுதிப் பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் பொறுப்புக்கூறலுக்காக சர்வதேச நியாயாதிக்கம் அமைக்கப்படலாம் எனத்தான் முடித்திருக்கின்றார். அதனையிட்டு உறுப்பு நாடுகள் எவ்வாறு பார்க்கப்போகின்றன என்பது முக்கியமானதாகும். இதனை ஐ.நா. சபையை நோக்கி, பாதுகாப்பு சபையை நோக்கி நகர்த்த வேண்டும். இதற்கு இலங்கை அரசு நிச்சயமாக முட்டுக்கட்டை போடும். அதனால், இதனை முன்னெடுப்பதற்கான அழுத்தங்களை புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழகத்திலுள்ள தமிழர்களும் கொடுக்க வேண்டும் அதன் மூலமாகவே சாதகமான ஒரு நிலையை நாம் ஏற்படுத்த முடியும்.

கேள்வி: இலங்கையிலிருந்து சிங்களவர்கள் இம்முறை பெருமளவில் வந்திருந்தார்கள். பக்க நிகழ்வுகளில் இவர்கள் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்ததை நீங்கள் நேரில் பார்த்தீர்கள். நீங்கள் உரையாற்றிய பக்க நிகழ்வு ஒன்று கூட இவ்விதம் குழப்பப்பட்டது. இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறும் விவாதம். அதில்தான் முக்கியமான விவாதங்கள் இடம்பெறும். அங்கு பெப்ரவரி 26 முதல் மார்ச் 23 வரை விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதனைவிட உப குழு அல்லது பக்க நிகழ்வுகளை நடத்துவதற்கான மண்டபங்களும் உள்ளன. இவற்றில்தான் சுமார் 30 க்கு மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில் ஒன்றரை மணித்தியாலத்துக்கு ஏற்பாடு செய்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கூட்டங்களை நடத்த முடியும்.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் ஒன்றரை மணி நேர கூட்டங்களில் நானும் கலந்துகொண்டேன். இவ்வாறு நானும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்திலும் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்தக் கூட்டங்களின் இறுதியில் கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பளிக்கப்படும். கூட்டத்துக்கு வராமல், கூட்டம் முடியும் தருணத்தில் மண்டபத்துக்குள் வந்து இவர்கள் கேள்வி கேட்கின்றார்கள். அதிலிருந்தே தெரிகின்றது அவர்கள் கூட்டத்தைக் குழப்புவதற்காகவென்றே வருகின்றார்கள் என்பது. கூட்டத்துக்கே வராதவர்கள் எவ்வாறு அதற்குள் வந்து கேள்வி எழுப்ப முடியும்?

ஜனநாயக முறைப்படி இங்கு நாம் எமது கருத்துக்களைப் பகிர்கின்றோம். இதற்குள் வந்து குழப்பங்களை ஏற்படுத்தி கூட்டத்தை நடத்தமுடியாமல் செய்வது என்பது ஜனநாயக விரோதமான அநாகரீகமான ஒரு செயற்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது. இது மனித உரிமைகள் போன்ற ஒரு சபையில் இடம்பெறக் கூடிய மிகவும் மோசமான அநாகரீகமான ஒரு செயற்பாடு. இது போன்ற செயற்பாட்டை வேறு எங்கும் காண முடியாது. இதன்மூலமாக அவர்கள் அம்பலப்பட்டுப்போவதாகவே நான் கருதுகின்றேன்.

உதாரணமாக தனிநாடாகப் பிரிந்துசெல்ல முற்படும் கட்டோலேனியா ஒரு பக்க நிகழ்வை நடத்தும் போது, ஸ்பெயின் பிரதிநிதிகள் பங்குகொள்கின்றார்கள். கட்டோலேனியா பிரிந்துசென்றதை ஸ்பெயின் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக அவர்கள் உப குழுக்கூட்டங்களுக்குள் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்துவதில்லை. ஜனநாயக முறைப்படி, நாகரீகமாக ஐ.நா. போன்ற ஒரு சபையில் எவ்வாறு நடக்க வேண்டுமோ அவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்.

கேள்வி: மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பதில்: இந்த அமர்வில் இந்தியா எந்தவிதமான கருத்தையும் சொல்லவில்லை. பொதுவாக அவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அனுசரணையாக இருப்பார்கள். அவர்களுடைய வெளியுறவுக்கொள்கை இலங்கைக்கு சாதகமானதாகவே இருக்கின்றது.

கேள்வி: ஐ.நா.வின் நிலைப்பாட்டில் மாற்றங்களை அவதானிக்க முடிகின்றதா?

பதில்: ஆம்! நிச்சயமாக அதனைச் சொல்ல முடியும். 2009 இல் போர் முடிவுக்கு வந்தபோது இருந்த நிலைப்பாட்டுக்கும் இப்போதிருக்கும் நிலைப்பாட்டுக்கும் இடையில் நிறைய மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. போர் முடிவுக்கு வந்தபோது இரண்டு தீர்மானங்கள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டன. ஒன்று: போர் குறித்த உள்நாட்டு விசாரணை ஒன்று அவசியம் என்ற தீர்மானம். இரண்டு: பயங்கரவாதத்தை முறியடித்த மகிந்த ராஜபக்ஷவைப் பாராட்டுவது என்ற தீர்மானம். இதில் முதலாவது தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. விசாரணைகள் தேவையில்லை என்று சொல்லப்பட்டது. ராஜபக்ஷவைப் பாராட்டும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.

இப்போது நிலைமை பெருமளவுக்கு மாற்றமடைந்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத் தரப்பு விசாரணையை தாம் செய்கிறோம் என்கின்றார்கள். தகவல் அறியும் சட்டத்தை கொண்டுவந்திருக்கின்றோம் என்கிறார்கள், காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தை அமைத்துள்ளோம் என்கிறார்கள், அதற்காக சட்டமூலம் கொண்டுவந்திருப்பதாகச் சொல்கிறார்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகச் சொல்கின்றார்கள்.

இவ்வாறெல்லாம் இலங்கை அரசாங்கம் இன்று சொல்லிக்கொள்வதற்கு எமது குரலின் வலிமைதான் காரணம். நாம் அமைதியாக இருந்திருந்தால் இது எதுவும் நடைபெற்றிருக்காது. நாங்கள் தொடர்ச்சியாகக் கொடுத்துவந்த அழுத்தங்களால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

இப்போது ஒரு கலப்பு விசாரணை என்கின்றார்கள். அதாவது இலங்கை விசாரணையை நடத்தும் ஐ.நா. மேற்பார்வை செய்யும். இதுதான் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், நாம் சொல்கிறோம், நீங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்களே ஒரு விசாரணையைச் செய்ய முடியாது. நாம், குற்றஞ்சாட்டுபவர்கள் விசாரணையைச் செய்ய முடியுமா? முடியாது! குற்றஞ்சாட்டப்பட்டவரும் செய்ய முடியாது.

குற்றஞ்சாட்டுபவரும் செய்ய முடியாது. இரண்டுக்கும் பொதுவாக உள்ள ஒரு அமைப்புத்தான் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகவுள்ளது. அந்தக் கோரிக்கையில் ஒரு சட்ட நியாயம் இருக்கின்றது. அதில் ஒரு இயற்கை நீதியும் இருக்கின்றது. அதனைத்தான் நாமும் வலியுறுத்துகின்றோம்.

(Visited 149 times, 1 visits today)