“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்றை தமிழ் மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது. சர்வதேச சமூகத்தின் அழுதம் அதிகரிப்பதற்கும் அதன் மூலமாக தமக்கு சாதகமான நிலை ஒன்று ஏற்படும் என்ற நம்பிக்கையும் இதனால் அவர்களுக்கு ஏற்படுகின்றது” என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 37 வது கூட்டத் தொடரில் த.தே.கூ. சார்பில் கலந்துகொண்டவருமான சிரஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள்  ஆணையாளரின் அறிக்கை வெளிவந்திருக்கும் நிலையில் அது தொடர்பாக ஜெனீவாவிலிருந்து தினக்குரலுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சிறிதரன் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம். 2015 ஆம் ஆண்டின் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் அடிப்படையிலான தமது கடப்பாடுகளில் இலங்கை அரசு முன்னேற்றத்தைக் காட்டவல்லை, பொறுப்புக் கூறலில் அவர்கள் எதனையும் செய்யவில்லை என்பதை ஆணையாளர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்தநிலையில் மனித உரிமைகள் பேரவையின தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாற்றுவழி தொடர்பாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார். சர்வதேச தீர்பாயம் ஒன்றை நோக்கிய ஒரு சொற்குறிகாட்டியாக இது அமைந்திருக்கின்றது. ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்கு சர்வதேசத்துக்கும் ஒரு வெறுப்புணர்வைக் கொடுத்திருக்கின்றது என்பதையும் அவதானிக்க முடிந்தது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைப்பதில் கூட இந்த நிமிடம் வரையில் சட்டரீதியான நடவடிக்கைகள் முழுமையடையவில்லை. அரசின் இந்தப் போக்கு சர்வதேச சமூகம் இலங்கை மீது கொண்டுள்ள கவலைகளை அதிகரிக்கச் செய்திருக்கின்றது. ஜெனீவாவில் இதனைத் தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கடந்த 70 வருடங்களுக்கும் அதிகமாக இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்தவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அவர்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்றைக் கொடுத்திருக்கின்றது. சர்வதேச சமூகத்தின் அழுதம் அதிகரிப்பதற்கும் அதன் மூலமாக தமக்கு சாதகமான நிலை ஒன்று ஏற்படும் என்ற நம்பிக்கையும் இதனால் அவர்களுக்கு ஏற்படுகின்றது.
சர்வதேசத்தின் மேற்பார்வைலயிலும், ஐக்கிய நாடுகளின் பொறிமுறையிலும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய வலியுறுத்திக் கூறுகின்றோம். இவ்வியத்தில் சர்வதேச சமூகத்துக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க நாமும் தயாராக இருக்கின்றோம் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெரியப்படுத்துகின்றோம்”
(Visited 26 times, 1 visits today)