“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் செய்ட் அல் ஹுசென்  வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றபோதிலும், அடுத்த வரும் மார்ச் மாதம் வரையில், இலங்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” எனக் குறிப்பிடுகின்றார் பிரான்ஸைத் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ச.வி.கிருபாகரன்.
இலங்கை குறித்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசெனின் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் அடுத்த கட்டமாக என்ன நடைபெறும் என்பதையிட்டு தினக்குரலுக்கு விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் உள்ளன. அதனைவிட, கடந்த மார்ச்சில் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இப்போது ஆணையாளரின் அறிக்கையும், உறுப்பு நாடுகளின் அறிக்கைகளும்தான் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கைகள் இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கலாம். ஆனால், இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாது. பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டிருந்தால் மட்டுமே அது இலங்கையைப் பாதிப்பதாக அமைந்திருக்கும்.
மனித உரிமைகள் பேரவையில் 2019 மார்ச் வரை இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு முன்னதாக இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அடுத்த வருடத்தில் இலங்கை கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. ஜெனீவாவில் செயற்படும் தமிழ் அமைப்புக்கள் அடுத்த மார்ச் வரையில் பொறுத்திருக்காமல் தமது இராஜதந்திர நகர்வுகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும்.
மனித உரிமைள் பேரவையில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் அடுத்த வருடமும் இருக்கும். தமிழ்த் தரப்புக்கள் அவர்களின் மூலமாக அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும். அதற்கான செயற்பாடுகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் அது மனித உரிமைகள் விவகாரத்தை கைகளில் எடுக்கப்போவதில்லை. ஏனெனில் இந்தியாவிலும் மனித உரிமைகள் பிரச்சினை உள்ளது. ஆனால், அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்கும் சாத்தியம் உள்ளது.”
இவ்வாறு ச.வி.கிருபாகரன் மேலும் தெரிவித்தார்.
(Visited 23 times, 1 visits today)