தென் ஆபிரிக்க இடது கை துடுப்பாட்ட வீரர் ஜே.பி. டுமினி ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

தென் ஆபிரிக்காவில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான மொமென்டம் ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நைட்ஸ் கேப் கோப்ராஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய நைடஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேப் கோப்ராஸ் அணி துடுப்பெடுத்தாடியது.

36 ஆவது ஓவர் முடிவில் கேப் கோப்ராஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் எடுத்திருந்தது. எஸ்.எம். கோமாரி 65 ஓட்டங்களும் டுமினி 30 பந்தில் 34 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

37 ஆவது ஓவரை எடி லெய் வீசினார். டுமினி எதிர்கொண்டார். முதல் நான்கு பந்துகளையும்
சிக்சருக்கு விளாசினார். ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் அடித்தார். 6 வது பந்தை எடி லெய் நோ போல் ஆக வீசினார். அதில் ஒரு பவுண்டரி விளாசினார்.

இதனால் ஓட்டம் சமநிலை ஆனது. நோ போலுக்கு பதிலாக வீசிய கடைசி பந்தையும் சிக்சருக்கு துரத்தினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் குவித்து டுமினி சாதனை படைத்துள்ளார்.

டுமினி ஒரே ஓவரில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாச கேப் கோப்ராஸ் 37 ஓவரில் 245 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டுமினி 37 பந்தில் 70 ஓட்டங்கள் குவித்தார்.

2013 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற பிரிமியர் லீக்கில் சிம்பாப்வே வீரர் சிகும்புரா ஒரு ஓவரில் 39 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக உள்ளது.

(Visited 8 times, 1 visits today)