சீனாவின் “ஒரே மண்டலம் ஒரே பாதை’ பொருளாதார முன்முனைப்பு, சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமைய இடமளிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன எச்சரித்திருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அதற்கு முன்பாக என்.எச். கே.க்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்திருக்கிறார்.

சீனா சார்பு ஆட்சியாளராக விளங்கிய மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற சிறிசேன, சமநிலையான வெளிநாட்டுக் கொள்கையை நிலைநிறுத்தப் போவதாக உறுதியளித்திருந்தார். ராஜபக்ஷ நிர்வாகத்தில் இலங்கை அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்குவதற்கு அனுமதித்திருந்தது. இந்தத் துறைமுகம் தென்னாசியாவில் பாரியதாக விளங்கும் அதேவேளை, ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைய மாட்டாதென சீனா தெளிவுபடுத்த வேண்டும் என்று சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்கு பெய்ஜிங் பயன்படுத்த முடியும் என்ற கவலைகள் காணப்படுவதை தான் புரிந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இரு தரப்பு உடன்படிக்கையை மீறி விடயங்கள் இடம்பெறுவதற்கு தனது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் தரமான உட்சார் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான ஜப்பானின் திட்டங்கள் குறித்து தனது ஆவலை சிறிசேன வெளிப்படுத்தவுள்ளார்.

(Visited 124 times, 1 visits today)