ந.ஜெயகாந்தன்

நாட்டினதும் பாராளுமன்றத்தினதும் அவதானத்தை கண்டி வன்முறையின் பக்கம் திருப்பி “வலுக்கட்டாயமாக காணாமல்போவதிலிருந்து அனைவரையும் பாதுகாத்தல்’ தொடர்பான  சட்ட மூலத்தை பலவந்தமாக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் கலாநிதி ஜீ.எல்.பீரிஸ், அதேபோன்று புதிய அரசியலமைப்பையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் முற்றாக செயலிழந்த நிலையிலேயே இருப்பதாகவும் இதனால் தற்போதைய பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தினால் தீர்வு காண முடியுமென முக்கிய அமைச்சர்கள் கூட நம்பிக்கை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில்;

வலுக்கட்டாயமாக காணாமல்போவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டத்துக்கு மகாநாயக்க தேரர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமையால் இரண்டு தடவைகள் பாராளுமன்றில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டும் அது கைவிடப்பட்டது.

ஆனால், கண்டியில் ஏற்பட்ட மோதல் மற்றும் அமைதி நிலையைப் பயன்படுத்தி நாட்டின் பார்வையை வேறு திசையில் செலுத்தி மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு அதனை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. நாட்டினதும் பாராளுமன்றத்தினதும் பார்வையை வேறு பக்கம் திருப்பிவிட்டு நாட்டுக்கு பாதிப்பான சட்ட மூலங்களை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கும் இதேபோன்ற நடவடிக்கைகளையே பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை தற்போது அரசாங்கத்திலுள்ள பிரபல அமைச்சர்களுக்கு கூட இந்த அரசாங்கத்தினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கை இல்லாது போயுள்ளது. அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் முற்றாக செயலிழந்த நிலையிலேயே இருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பொலிஸார் கடமையை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றால் அரசாங்கம் சகலரினாலும் நிராகரிக்கப்படும் நிலைமையிலேயே இருக்கின்றது. அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளால் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் கூட அமைச்சர்களினால் சரியாக குறிப்பிடவும் முடியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.

(Visited 27 times, 1 visits today)