வத்தளை வாழ் தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்த இந்து தமிழ் தேசிய பாடசாலை கனவு நிறைவுக்கு வந்திருக்கிறது.

அருணபிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகர் அவர்களினால் வத்தளையில் புகையிரத வீதி, ஹுனுப்பிடிய எனும் இடத்தல் அமைந்துள்ள சுமார் 95 பேர்ச்சஸ் காணியை கல்வி அமைச்சுக்கு அன்பளிப்பு செய்யப்படும் நிகழ்வும் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை அமைப்பதற்கான கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் விழாவும் இன்று அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வத்தளை மாபோலை மாநகரசபை உறுப்பினர்களான சசிகுமார், விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலாம் தரத்தில் இருந்து வத்தளையில் செயற்படும் தமிழ் மொழிமூல ஒரு தேசிய பாடசாலையாக இப் பாடசாலை அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடசாலைக்காக 4 மாடி கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த மதிப்பீடு 8 கோடி ரூபாவாக மதிப்பிடிப்பட்டுள்ளதுடன் முதற்கட்ட ஒதுக்கீடாக 3 கோடி ரூபா அமைச்சர் மனோ கணேசன் அவர்களால் ஒதுக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)