இலங்கையில் நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இறுதியாக நடைபெற்ற 3-வது போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதின.

இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பங்களாதேஷ் களம் இறங்கியது. தமிம் இக்பால் (47), லித்தோன் தாஸ் (43), முஷ்பிகுர் ரஹிம் (72 அவுட் இல்லை) ஆகியோரின் அதிரடியால் 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 215 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளும் பவுண்டரிகள், சிக்சராக பறக்க விட்டதால் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். அடிக்கடி ஆலோசனை கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் நான்கு ஓவர்கள் குறைவாக வீசியது கண்டறியப்பட்டது.

ஐசிசி விதிமுறைப்படி நான்கு ஓவர்கள் என்பது அதிகப்படியான குற்றமாகும். இதனால் இலங்கை அணி கேப்டனுக்கு இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது. இரண்டு டிமெரிட் புள்ளிகள் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 ஆகியவற்றில் பங்கேற்க முடியாது.

இதில் எது முதலில் வருகிறதோ, அப்போது இது நடைமுறை படுத்தப்படும். அதன்படி தற்போது டி20 தொடர் நடைபெற்று வருவதால் நாளை நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும், 14-ந்தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் சண்டிமல் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற இலங்கை வீரர்களுக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணி ஒரு ஓவர் குறைவாக வீசியதால் வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதமும், கேப்டனுக்கு 20 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

(Visited 22 times, 1 visits today)