அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை வைத்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை மிரட்டிவரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னுடன் அமர்ந்து சமாதானம் பேசுவதற்கு தயாராக இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதற்கு முன்னதாக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என வடகொரியா வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்திருந்தார்.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், டிரம்ப்பின் முடிவால் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின்னர், டிரம்ப்பும் வடகொரியா அதிபரும் இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் அளித்தால் அது நேச நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகளில் முறிவை ஏற்படுத்துவதுடன், பேரழிவாகவும் அமைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ‘வடகொரியாவுடன் சமாதானம் ஏற்படுத்துவது தொடர்பான உடன்படிக்கை தயாரிக்கும் பணி வெள்ளை மாளிகையில் மும்முரமாக நடந்து வருவதாகவும், இது பூர்த்தி அடைந்தால் இந்த உலகத்துக்கு மிகவும் நன்மையாக அமையும். இந்த உடன்படிக்கையில் இருவரும் கையொப்பமிடும் நேரத்தையும், இடத்தையும்தான் இனி முடிவு செய்ய வேண்டும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், கடந்த 28-11-2017 அன்றிலிருந்து வடகொரியா ஏவுகணை பரிசோதனை எதையும் செய்யவில்லை.

ஏவுகணை சோதனைகளை நடத்தப் போவதில்லை என சமாதானம் பேசிவரும் அமெரிக்க அதிகாரிகளிடம் வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளது. அந்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

(Visited 89 times, 1 visits today)