எம்.எஸ். அமீர் ஹசைன்

அரசியல் அமைப்பிற்கான 18 ஆவது திருத்தமும் 19 ஆவது திருத்தமும் நாட்டிற்கு சாபக்கேடு என்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா 2019 ஜூன் 26 ஆம் திகதி தெரிவித்தார். ஊடக பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி இந்த அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் குறித்து மனமுடைந்து விரக்தி நிலையில் இருந்து வருவதன் வெளிப்பாடே இவ்வாறு பகிரங்கமாக அதுவும் ஊடக பிரதானிகள் முன்னிலையில் தெரிவிக்கக் காரணமாகின்றது.

ஊடக பிரதானிகளை அழைத்து 19 ஆவது திருத்தம் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நீக்கப்பட வேண்டும் என்று கூறியதன் மூலம் அவர் எதிர்பார்ப்பது ஊடக பிரதானிகள் அவர்கள் சார்ந்த ஊடகங்கள் மூலம் 19 இற்கு எதிரான பொதுமக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவாகும்.

எந்த ஒரு விடயத்தையும் இல்லாதொழிப்பதற்கு அல்லது புதிதாகக் கொண்டு வருவதற்கு அது தொடர்பான பொதுமக்கள் அபிப்பிராயம் கட்டியெழுப்பட வேண்டும். அதற்காக பகிரங்க கலந்துரையாடல்கள், விவாத மேடைகள், பொதுமக்களை சென்றடையும் வகையில் பிரசுரங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் எல்லாவற்றையும் இலகுவாக செய்ய முடிவது ஊடகங்கள் வாயிலாக அகும். அதனாலே இந்தக் கருத்தை ஊடக பிரதானிகளிடம் கூறியுள்ளார்.
பொதுவாக பார்க்கின்ற போது ஜனாதிபதி அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் தொடர்பாக ஏன் இந்தளவிற்கு வெறுப்பிலும் விரக்தியிலும் இருக்கின்றார் என்று பார்த்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் அவரால் நினைத்த எதையும் இரவோடு இரவாக செய்துகொள்ள முடியாத இக்கட்டான நிலை இருந்து வருகின்றது. அதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா இந்த அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் முன்னிலையில் பலமுறை மண்டியிட்டு தோல்வியை ஏற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதன் காரணமாகவே ஒருபோது இனித்த கனி இப்போது ஜனாதிபதிக்குக் கசக்கின்றது. அதுவே 19 நாட்டிற்கு சாபக் கேடாகக் தெரிவதற்கு காரணமாகின்றது.

2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி மக்கள் ஆணையின் மூலம் பதவிக்கு வந்த ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலாக 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி பலவந்தமாக பதவி நீக்கினார். பிரதமரும் அவர் தமையிலான அமைச்சரவையும் அவர்கள் இருந்த இடத்தை விட்டு ஒரு அங்குலமும் நகரவில்லை.

பதவி நீக்கப்பட்ட பிரதமரும் அவரது அமைச்சரவையும் அலரிமாளிகையை விட்டு வெளியேற மஹிந்தவாத விமல் வீரவன்ச 72 மணித்தியால கால அவகாசம் வழங்கினார். அவ்வாறு வெளியேறத் தவறினால் மக்கள் படையுடன் சென்று பலவந்தமாக வெளியேற்றுவதாக சபதம் விடப்பட்டது. ஆனாலும் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை. பின்னர் 14 நாட்களின் பின்னர் செய்வதற்கு எதுவும் இல்லாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அறிவித்தல் செய்தார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை மீண்டும் பதவியில் நியமிக்கும் நிலை ஏற்பட்டால் அடுத்த நிமிடமே பதவி விலகுவேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அறிவித்தார். அதுவும் விட்டுக்கொடுக்காத ரணில் தலைமையிலான அமைச்சரவை உயர் நீதிமன்றத்தின் தயவை நாடியது. கடைசியில் ஜனாதிபதி ஐ.தே.க. அரசாங்கத்தை பதவி நீக்கியமை, தன்னிச்சையாக பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை மீறும் செயல் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இறுதியில் பிரதமர் ரணில் தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்தை மீண்டும் நியமிக்கும் நிலை ஏற்பட்டதோடு அதுவரையில் மைத்திரிபால சிரிசேனா அனுபவித்து வந்த 23 அமைச்சர்களைக் கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சியை இணைத்த கூட்டாட்சியையும் இழந்தார். அதன்பின்னர் உயர் பதவியில் இருந்த அதிகாரி ஒருவரை ஜனாதிபதி பதவி நீக்கியபோது அந்த பதவி நீக்கம் அரசியல் அமைப்பிற்கு முரணான செயல் என்று அரசியல் அமைப்பு பேரவை தெரிவித்து பதவி நீக்கியவரை மீண்டும் பதவியில் அமர்த்தியது.

அவ்வாறே தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்ற பாராளுமன்றத் தெரிவுக்குழுவை உடன் நிறுத்தாவிட்டால் இனி ஒருபோதும் அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதும் இல்லை, அமைச்சரவை கூட்டத்திற்கு வருவதும் இல்லை என்று 2019 ஜன் 07ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை நடத்தி ஜனாதிபதி பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆனாலும் ஒரு வாரத்தின் பின்னர் ஐ.தே.க. அமைச்சரவையின் முன்னிலையில் மண்டியிடும் வகையில் வந்து அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார்.

ஜனாதிபதியின் எதிர்பார்ப்பின்படி பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்த பின்னர் நிறுத்த முடியாது. அதற்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வேண்டும். அதனால் அந்த விடயத்திலும் ஜனாதிபதியின் எதிர்பார்ப்புக்கு 19 தடையாக அமைந்தது.

அதேபோன்று நியமனங்கள் விடயம், பொலிஸ் மா அதிபரை பதவி நீக்க எடுத்த நடவடிக்கை என்று பல விடயங்களில் ஜனாதிபதி முட்டி மோதிக்கொண்டுள்ளார். இந்நிலையில் பார்க்கும் போது ஜனாதிபதிக்கு இந்த அரசியல் அமைப்பிற்கான 19 மனத்தாங்கங்களையும் விரக்தியையும் ஏற்படுத்தாமல் இருக்க முடியாது. அதனால்த்தான் இந்தளவிற்கு விரக்தி அடைந்துள்ளார். ஆனால் இவர் 2014 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக ஐ.தே.க. வால் நியமிக்கப்பட்ட போது வழங்கிய வாக்குறுதிகளில் இந்த 19 மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக சமர்ப்பித்து 2015 ஏப்ரல் 28 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது கூறயதாவது. உலகில் எந்த ஆட்சியாலாவது ஜனாதிபதி ஒருவர் தமக்கு இருக்கின்ற அதிகாரங்களைக் குறைத்துக் கொள்வதற்கு இணங்கிய வரலாறு இருக்கின்றதா? அந்தளவிற்கு நான் மிகவும் வெளிப்படையாக நடந்துகொள்கின்றேன். ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியின் அதிகாரத்தை கூட்டிக்கொள்வதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்து. ஆனால் நானோ அதற்கு மாற்றமாக செயல்படுகின்றேன். இதனைக் கருத்தில் எடுத்து அரசியல் அமைப்பிற்கான இந்தத் திருத்தத்திற்கு முரண்பாடுகளை மறந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

இந்த 19 நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பல்வேறுவிதமான முறைப்பாடுகளும் விமர்சன ங்களும் இருந்து வந்தன. 19 ஆவது திருத்தம் 2015 மார்ச் 24 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது உயர் நீதிமன்றத்தில் 19 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றும் 14 மனுக்கள் 19 இற்கு எதிராக செய்யப்பட்ட மனுக்களாகும். ஆந்த 14 மனுக்களையும் பரிசீலனை செய்த கே. சிரிபவன் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றவும் சில பிரிவுகளை திருத்தம் செய்யவும் அனுமதி வழங்கி இருந்தது. அத்துடன் அன்று நிலைமையை சரியாகப் புரிந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அப்போது முன்வைக்கப்பட்ட திருத்தங்களை சமர்ப்பிக்கவும் அதனைப் பரிசீலிக்கவும் பாராளுமன்றத்தில் ஆறுபேர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்தார். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அஜித் பெரேரா ஆகியோரும் எம்பிக்களான எம். சுமந்திரன், அனுர பிரியதர்சன யாப்பா, ரஜீவ விஜேசிங்க மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து 174திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின் பின்னர் ஆளும் கட்சி தரப்பால் 63 திருத்தங்களும் எதிர்க்கட்சி தரப்பால் 111 திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.

இவற்றைப் பரிசீலனை செய்து வாக்கெடுப்பு நடைபெற்ற 2015 ஏப்ரில் 28 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு முன்னர் குழுவின் சமர்ப்பணம் முன்வைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியால் கோரப்பட்டது. ஆனாலும் வாக்கெடுப்பு நடைபெற்ற செவ்வாயன்று மாலை 6.00 மணியாகியும் முடிவு எட்டப்பட்டி ருக்கவில்லை. பின்னர் 6.00 மணிக்கு முடிவடையவிருந்த விவாதம் மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிக்கப்பட்டு திருத்தம் முன்வைத்தவர்களான மஹிந்த தரப்பு மற்றும் ஜனாதிபதியான மைத்திரிபால சிரிசேனா தரப்பு சுதந்திரக் கட்சியினரோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குறிப்பிட்ட முக்கியமான இரண்டு திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் நிலைமை சாதகமாக மாறியது.

இதன் காரணமாகவே 19 ஆவது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னரும் குழுநிலையில் அவ்வப்போது திருத்தங்கள் தொடர்பாக சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டதோடு வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றது. இறுதியில் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் திருத்தங்களுடனான பிரேரணைக்கு ஆதரவாக 212 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் பதிவாகியது. எவ்வாறாயினும் 10 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்தளவு ஆதரவுடன் நிறைவேறிய ஒரு மசோதாவாக 19 ஆவது திருத்தம் அமைகின்றது.

இவ்வாறு மைத்திரிபால சிரிசேனா மிகவும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றிய 19 இன்று அதே ஜனாதிபதிக்கு நாட்டின் சாபக் கேடாகவும் அதனை நீக்காதவரையில் நாட்டை முன்னேற்ற முடியாது என்ற நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு பிரதான காரணம் நிறைவேற்று அதிகாரம் என்ற பெயரில் தனி நபர் ஒருவர் அதிகாரத்தை பயன்படுத்தி சர்வாதிகாரியாக மாறும் நிலைக்கு 19 ஆவது திருத்தத்தில் தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

19 இன்படி பதவிக்கு வரும் அரசாங்கம் ஒன்று ஒருவருடம் பூர்த்தியடைந்த எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி நினைத்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தலாம் என்ற நிலை இல்லாதொழிக்கப் பட்டிருக்கின்றது. ஆனால் 19 இற்கு முன்னர் இருந்த ஒரு வருட நிறைவில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற அதிகாரத்தை வைத்தே 2004 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அப்போதைய ஐ.தே.க. ஆட்சியைக் கவிழ்த்தார். அந்த அதிகாரம் காரணமாக ஜனாதிபதி வேறு கட்சி, பிரதமரும் அமைச்சரவையும் கொண்ட அரசாங்கம் வேறு கட்சி என்ற நிலையில் ஆட்சி அமைந்தால் அரசியல் ஸ்தீரமற்ற நிலை உருவாகி அடிக்கடி தேர்தல் நடத்தப்படுகின்ற நிலை ஏற்படுகின்றது.

இந்நிலைமைகளைக் கவனத்தில் எடுத்தே 19 இல் பதவிக்கு வருகின்ற அரசாங்கம் அதன் முதலாவது கூட்டத்தை நடத்தும் தினத்தில் இருந்து நான்கரை வருடங்கள் ( 4 1/2) நிறைவடையும் வரையில் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று 70 (1) சேர்க்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறே ஜனாதிபதியின் பதவிக்காலம் 06 வருடங்கள் என்றிருந்தது 05 ஆக குறைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அரச பதவி நியமனங்கள், பதவி நீக்கம் தொடர்பாக கவனம் செலுத்த 10 சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதோடு அரசியல் அமைப்பு பேரவையும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஏனைய திருத்தங்களாக அரசியல் அமைப்பின் பிரிவுகளான 30, 31, 33, மற்றும் 33.அ என்பவைகளாக அமைகின்றது. அரசியல் அமைப்பின் 07ஆம் அத்தியாயத்திற்கு புதிய இணைப்பு செய்யப்பட்டிருக்கின்றது. அத்துடன் அமைச்சரவை நியமிக்கப்படும் போது ஜனாதிபதி பிரதமரின் அறிவுரைக்கமைய அமைச்சரவையை நியமிப்பார் என்று இருந்த பிரிவை பிரதமரிடம் வினவிய பின்னர் என்று திருத்தம் செய்யுமாறும் எதிர்க்கட்சியினர் அப்போது வேண்டிக் கொண்டனர். இறுதியில் அவ்வாறே திருத்தம் செய்ய வேண்டியேற்பட்டது. அத்துடன் அமைச்சரவையின் தலைவர் பிரதமர் என்ற விடயமும் உட்படுத்தப்பட்டிருக்கின்றது.

10 சுயாதீன ஆணைக்குழுக்கள் காரணமாக அரச நிர்வாக மற்றும் உயர் பதவிகள் அனைத்தும் அரசியல் மயப்படுத்தலில் இருந்து பாதுகாக்கப் பட்டிருக்கின்றது. தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அந்த 10 ஆணைக்குழுக்களில் முக்கியமான 05 ஆணைக்குழுக்களாகும். அரசியல் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்த அமைப்பிற்கான 17 ஆவது திருத்தத்தில் இவை உட்படுத்தப் பட்டவைகளாக இருந்தாலும் அரசியல் அமைப்பிற்கான 18 ஆவது திருத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அவை நீக்கப்பட்டவைகளாகும்.

19 உள்ள அரசியல் அமைப்பு பேரவை காரணமாக 2019 ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பதவியில் இருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தவை ஜனாதிபதியால் பதவி நீக்கிவிட முடியவில்லை. அதனால் அவரை கட்டாய லீவில் அனுப்பிவிட்டு ஜனாதிபதி அவருக்குத் தேவையான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளார். இவ்வாறு பார்க்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அரசியல் அமைப்பை மீறும் வகையில் நிறைவேற்று அதிகாரத்தை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்த முற்பட்ட போதும், அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் இந்த 19 ஆவது திருத்தம் தடையாக அமைந்திருக்கின்றது. 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் 2016 ஆம் ஆண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஐ.தே.க. ஆட்சியை கவிழ்த்து பாராளுமன்றத்தை கலைத்திருப்பார். ஆனாலும் முடியவில்லை.

அதனால் அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் சாபக் கேடாக அமைந்திருப்பது நாட்டிற்கல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவிற்கே ஆகும். எந்த வகையிலும் அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் நீக்கப்படக் கூடாத நடைமுறைக்கு அவசியமான திருத்தமாகும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 19 ஐ நீக்க வேண்டிய தேவை எதுவும் தற்போதைக்கு இல்லை. செய்ய வேண்டியது ஐ.தே.க. அரசாங்கத்தோடு பதவிக்கு வந்த காலம் முதல் முரண்பாட்டை தவிர்த்து சுயநல அரசியல் செயற்பாட்டை கைவிட்டு இணங்கிப் போய் இருந்தால் நாடு அபிவிருத்தி அடைந்திருக்கும்.

மாறாக ஜனாதிபதி சுற்றுலா ஜனாதிபதியாக மாறி இருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதிகளாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தன, சந்திரிகா பண்டரநாயக்கா குமாரதுங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த போது வெளிநாட்டு அழைப்புக்கள் வந்தபோது பிரதமரை அல்லது வெளிவிவகார அமைச்சரை அனுப்பி பிரதிநிதித்துவம் செய்யச் செய்வதே வழக்கமாக இருந்து வந்தது. ஜே. ஆர் காலத்தில் அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த ஏசி.எஸ் ஹமீத், சந்திரிகா காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் சர்வதேச மாநாடுகள் என்றும் உலகத் தலைவர்கள் என்றும் சந்திப்புக்களை நடத்தி இருதரப்பு உறவை மிகவும் பலமான முறையில் கட்டி எழுப்பி இருந்தனர்.

ஆனால் சர்வதேச உறவுக்கு இப்போது என்ன நடந்திருக்கின்றது? நாட்டில் அபிவிருத்தி மற்றும் சட்டம், நீதி நிர்வாகத்தை சரிவர நடத்துவதில் கவனம் செலுத்துவதை விட்டு தவறாமல் கிடைக்கின்ற அழைப்புக்களுக்கு வெளிநாடு செல்வதிலே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா கவனமாக இருந்து வருகின்றார்.

தற்போதைய நிலையில் அவருக்குத் தேவைப்பட்டிருப்பது பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதாகும். ஏதாவதொரு வகையில் ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிப்பதாகும். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவது 19 என்பதால் அதனை சாபக் கேடாகவும் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாகவும் காட்டி நாட்டில் மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. 19 ஐ நீக்க எடுக்கும் ஜனாதிபதியின் கண்மூடித்தனமான செயற்பாட்டிற்கு எதிராக மக்கள் பலம் அணி திரள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

(Visited 1 times, 1 visits today)