ரவிச்சந்திரன்

ஒரு நாட்டை முற்றுமுழுதாக அழிக்க வேண்டுமாயின் அதற்கான மிகச் சிறந்த வழி எப்படியாவது அந்த நாட்டு மக்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை பழக்கப்படுத்துவதேயாகும். அதன்மூலம் அந்நாட்டின் ஆன்மாவையே அழித்துவிட முடியும். போதைப்பொருளுக்கு அடிமையானவன் எவ்வித சட்டதிட்டங்களையும் மதிப்பதில்லை. ஆகையால் போதைப்பொருள் மூலம் ஒட்டுமொத்த நாட்டையே அழிக்கலாம் என்பது மிக உறுதியான ஒரு விடயமாகும் என பேராசிரியர் பிரென்சிஸ் கெம்ஸ் கூறுகின்றார். இதனாலேயே உலகின் பல நாடுகள் போதைப்பொருள் வியாபாரத்தை கடுமையான தண்டனைகளைக் கொண்டு கட்டுப்படுத்தி வருகின்றன.

ஒரு சமூகத்தில் போதைப்பொருள் பரவும்போது அச்சமூகம் எந்த அளவு பாதிக்கப்படுகின்றது என்பதற்கும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு சமூகம் எந்த அளவு நன்மை பெறுகின்றது என்பதற்கும் உலகில் முதலிடம் வகிக்கும் நாடாக சிங்கப்பூர் இருந்து வருகின்றது.
அன்று ஒரு சேரி குடியேற்றமாகவும் சகலவித சமூக குற்றங்களுக்குமான ஒரு தளமாகவும் விளங்கிய சிங்கப்பூர் இன்று ஒரு சொர்க்கபூமியாக மாற்றப்பட்டிருக்கின்றது என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் அந்த நாட்டுக்குப் பங்கம் விளைவிக்கும் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவரும் குற்றத்திற்கு மரண தண்டனையும் இலஞ்சம், ஊழல் உள்ளிட்ட நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகத்தை விளைவிக்கும் பாரிய குற்றங்களுக்கான தண்டனையும் அனைவருக்கும் சமமான முறையில் செயற்படுத்தப்படுவதேயாகும்.

போதைப்பொருள் மீதான தமது நாட்டின் நிலைப்பாட்டை அந்நாட்டின் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே. சண்முகம் ஐக்கிய நாடுகள் சபையின் 69வது கூட்டத்தொடரில் இவ்வாறு எடுத்துக் கூறியிருந்தார்.

உலகில் பாதுகாப்பான சமூகங்களில் ஒன்றாக எமது சமூகத்தை உலகம் ஏற்றுக்கொள்வதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் போதைப்பொருளுக்கும் அதனுடன் தொடர்புபட்ட குற்றங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றமையே ஆகும். போதைப்பொருளுக்கு அடிமையாளர்கள் முந்நூறு பேருக்கு ஒரு வாரத்திற்கு போதுமான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மரண தண்டனையை சந்திக்க நேரிடும். இது பழிதீர்ப்பு அல்ல. மாறாக இது அச்சத்தை ஏற்படுத்துதலும் சட்டத்தின் நேர்மையான வெளிப்படுத்தலும் ஆகும்.

இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் போன்றே அன்று சிங்கப்பூரிலும் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக சிங்கப்பூர் அரசு மரண தண்டனையை முன்மொழிந்த போது அதற்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் கொதித்தெழுந்தன. அதன்போது சிங்கப்பூர் பிரதமர் லீக் குவான் யூ கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.

போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது கருணை காட்டுவதனால் சிறந்ததோர் சமூகத்தை உருவாக்கலாம் என சிலர் கருதக்கூடும். ஆயினும் ஒருவர் சிங்கப்பூரில் தரையிறங்குவதற்கு முன்னரே குறிப்பிட்ட அளவைக் கடந்த போதைப்பொருளை குறிப்பாக தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களை கொண்டுவருவதனால் உங்களுக்கு மரண தண்டனையை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்படும். அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது அதையும் மீறி ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் அக்குடும்பத்தின் பல தலைமுறைகளையும் அழிப்பதற்கு காரணமாக அமையும் போதைப்பொருளை யாராவது நாட்டிற்குள் கொண்டு வருவார்களாயின் எமது மக்களைக் காப்பாற்றுவதற்காக சட்டரீதியான ஒரு கொலை என்பது பாரிய விடயமல்ல. எமது எதிர்கால சந்ததியினரை படிப்படியாகக் கொல்லும் பல கிலோ போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்திவரும் ஒருவருக்கு எதிராக மரண தண்டனையை விதிப்பதென்பது ஒரு பாரிய விடயமல்ல.

மாறாக போதைப்பொருள் கடத்தல்காரர்களை சிறையில் அடைப்பதாயின் சிறைச்சாலைகள் நிரம்பி வழிய ஆரம்பிப்பதால் மென்மேலும் சிறைச்சாலைகளை உருவாக்க நேரிடுவதுடன் அது நாட்டுக்கு ஒரு தேவையற்ற தொடர் பிரச்சினையாகவும் சுமையாகவுமே அமையும் எனக்கூறி அந்த எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் போதைப்பொருள் வியாபாரமும் பாதாள உலக செயற்பாடுகளும் நாட்டின் அரசியல் செயற்பாடுகளுடன் மறைமுகமான தொடர்புகளைப் பேணி வந்திருக்கின்றது. இதனாலேயே போதைப்பொருளுக்கு எதிரான ஒரு உறுதியான செயற்பாடு என்பது இதுவரை காலமும் இந்த நாட்டில் சாத்தியப்படாது இருந்து வந்திருக்கின்றது. சட்டத்தின் மூலம் குற்றவாளிக்கு மரண தண்டனையை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு நீதிமன்றங்களில் எழுதப்பட்ட போதிலும் அதனை நிறைவேற்றுவதற்கான இறுதி உத்தரவைப் பிறப்பிப்பதற்கு இதுவரை காலமும் இந்த நாட்டை ஆண்ட எந்த அரச தலைவரும் முன்வரவில்லை. இதனாலேயே கடந்த 43 வருடங்களாக இந்த நாட்டில் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மரண தண்டனைகளை நிறைவேற்றாத நிலைமை இருந்து வருகின்றது.

ஆயினும் போதைப்பொருள் ஒட்டுமொத்த நாட்டுக்கே பாரிய சவாலாக மாறி அது இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினையும் வழிதவற வைக்கும் நிலை ஏற்பட்டிருப்பதனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உணர்ந்திருப்பதனாலேயே இப்போது போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மரண தண்டனையை செயற்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெறும் வழக்கு விசாரணைகளின் முடிவில் பல்வேறு மட்டங்களிலான தீர்ப்புகள் அவர்களுக்கு எதிராக வழங்கப்படுகின்றது. அபராதம், சிறை தண்டனை ஆகியவற்றைக் கடந்து ஒரு சிலருக்கு மரண தண்டனையும் வழங்கப்படுகின்றது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது குற்றவாளிகளின் தோற்றத்தைப் பொறுத்ததாக அன்றி தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றது.

நீதியின் தர்க்கம் ‘தண்டனையானது குற்றத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும்” என்ற அடிப்படையிலேயே அமைகின்றது. பொது சமூகத்தின் நன்மை, ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேவையினை அடிப்படையாகக் கொண்டே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்தவகையில் சட்டம் என்பது ஒரு நாட்டின் பொது உடன்பாடே அன்றி தனிமனித விருப்பு வெறுப்பாக அது அமைவதில்லை. ஆகையால் சட்டத்தின் அடிப்படையானது சமூக நீதி என்பதையே இலக்காகக் கொண்டிருக்கின்றது.

அப்படிப் பார்க்கின்றபொழுது பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ள ‘மரண தண்டனை” என்ற விடயம் சிலர் நினைப்பதைப் போல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனும் தனிமனிதரின் விருப்பு வெறுப்பு அன்றி இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய அரச தலைவனால் எடுக்க நிர்ப்பந்திக்கப்படும் ஒரு தீர்மானமாகும்.

அந்தவகையில் நமது நாட்டின் இருப்புக்கு சவாலாக அமைந்திருக்கும் போதைப்பொருளுக்கு எதிராக நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய சட்டத்தை செயற்படுத்த வேண்டியது நாட்டை ஆள்பவரின் தவிர்க்க முடியாத ஒரு கடமையாகும். ஒட்டுமொத்த நாடும் படிப்படியாக போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்ற நிலையில் அதன் முதலாவது இலக்காக பாடசாலை மாணவர்களும் இளம் சமுதாயத்தினரும் இருந்து வருவதால் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நாட்டின் தலைவர் என்ற வகையில் சட்டத்தை செயற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஆயினும் கோடீஸ்வர போதைப்பொருள் கடத்தல்காரர்களால் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை இலட்சாதிபதி போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கொண்டு இந்த நாட்டின் இளைய தலைமுறையினர் மத்தியில் போதைப்பொருளை விநியோகித்துவந்த குற்றவாளிகளுக்கு விசாரணையின் மூலம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதை மனித உரிமை மீறலாகக் காண்பவர்கள் அத்தீர்மானத்தை எதிர்த்து ஆங்காங்கே குரல் கொடுக்கின்றனர். ஆயினும் அவர்கள் தற்போதைய நிலையில் இந்த நாட்டில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அடிமையாகி இருக்கின்றார்கள் என்ற உண்மையையும் வருடாந்தம் ஐம்பது பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் இந்த நாட்டுக்குள் சஞ்சரிக்கின்றது என்ற உண்மையையும் கண்டும் காணாமலும் அறிந்தும் அறியாதவர்களைப் போலும் இருக்கின்றனர். ஆகையால் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம் என்ற கோஷத்திற்குப் பின்னால் மறைக்கப்படும் உண்மையை அறிந்து செயற்பட வேண்டியதே நாட்டையும் மக்களையும் உண்மையாக நேசிப்போரின் இன்றைய பொழுதின் கட்டாய கடப்பாடாக அமைகின்றது.

 

(Visited 1 times, 1 visits today)