கொற்றை பி.கிருஷ்ணானந்தன்

ஒரு நல்ல எழுத்தாளன் சமுதாயத்தைப் புறக்கணித்து விட்டு இலக்கியம் படைப்பதில்லை.
சமுதாயத்தைப் புறக்கணித்துவிட்டு எழுதப்படுபவை நல்ல இலக்கியமாக
ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை என்பது அனைத்துத் தரப்பினராலும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது.

அவ்வகையில் வட அல்வை க.சின்னராஜனின் படைப்புகள் அவருடைய சமுதாய அக்கறையை வெளிப்படுத்தி நிற்பவை. அவ்வப்போது பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் வெளிவரும் அவரது படைப்புகள் யாவும் இதையே பதிவிட்டுச் சென்றாலும் மிக அண்மையில் வெளிவந்த தண்ணீர் என்ற சிறுகதைத் தொகுப்பு உறுதியாக இக்கருத்தையே அழுத்திச் சொல்கிறது எனலாம்.

ஜீவநதியின் 119ஆவது வெளியீடாக வந்துள்ள தண்ணீர் பற்றி விமர்சனமாக இல்லாமல் ஓர் அறிமுகமாகவும் நூலாசிரியர் வடஅல்வை க.சின்னராஜன் பற்றியதுமாகவே இச்சிறு கட்டுரை அமைகின்றது.

மனித நேயமற்ற மனிதர்களின் குரோதம் , விரோதம், சுயநலம், குறுகிய மனப்பாங்கு போலிக்கௌரவம் போன்றவைதான் சமூகத்தின் அவலங்களுக்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றன.

இவற்றைத்தன் எழுத்தால் படம் பிடித்து இலக்கியம் படைப்பவர்களுடன் தன்னையும்இணைத்துக் கொண்டவர் க.சின்னராஜன் தன் படைப்புக்கேற்ற விதத்தில் செயற்கைத் தன்மையற்ற இயல்பான நேர்த்தியுடன் வெளிப்படுத்தும்ஆற்றல் சின்னராஜனுக்கு கை வந்திருப்பது ஒரு வெற்றியாகும்.
1970 களில் கவிதைகளோடு இலக்கியப்பரப்புக்குள் கால்பதித்த இவர் ஆரம்பகாலங்களில், புதுவை க.சின்னராஜன், சித்திரா சின்னராஜன் என்னும் பெயர்களிலும் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தவர்.

பின்னைய காலங்களில் சிறுகதை, கட்டுரை ,விமர்சனம் என்று தனது எழுத்துப்பணியைவிசாலித்துக்கொண்டார்.

பல கவிதைப் போட்டிகளிலும் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்றதோடு வல்லை வெளி கவிதைத் தொகுப்புக்கு 2013ஆம் ஆண்டுக்கான வடக்குமாகாண சிறந்த கவிதை நூலுக்குரிய விருதையும் பெற்றுக் கொண்டார்.

1985களில் சோலைக்கிளியின் புதுக்கவிதை பற்றி கடுங்கோபத்துடன் ஒரு கட்டுரை என்ற தலைப்பில் கவிஞர் முருகையன் மல்லிகையில் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக கடும் நிதானத்துடன் ஒரு கடிதம் என்று எழுதியதுனூடாக புதுக்கவிதைக்கு ஆதரவாக தனது கருத்தைத் தெளிவாக முன்வைத்தவர் க.சின்னராஜன் மக்கள் வங்கியின் ஓய்வு பெற்ற முகாமையாளரான இவர் எழுபதுகளில் கவியரங்கம், பட்டிமன்றங்களில் பங்கு பற்றி வந்தவர்.

இப்போது சிறுகதைகளைத் தருவதிலேயே முழு ஆர்வம் காட்டிவரும் சின்னராஜன் இப்போதுதான் தனது முதலாவது தொகுதியைத் தருவது வியப்புக்குரியது

1977 இல் கீரன் கையெழுத்துச் சஞ்சிகையில் வந்த குறிஞ்சி மலர் என்ற சிறுகதையில்
தொடங்கி 1918இல் தினக்குரலில் பிரசுரமான ஒரு வங்கியும் வாடிக்கையாளரும் என்ற கதை வரைக்குமான பதினான்கு சிறுகதைகள் இத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

மிக நீண்ட காலத்திற்கான முதிர்ச்சி பின்னைய காலத்தைய கதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றது என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கலாநிதி த.கலாமணி நூலுக்கான அணிந்துரயைச் சிறப்பாக வழங்கியுள்ளார். எழுத்தாளர் நந்தினி சேவியா ; எனக்குப்பிடித்த சிறுகதை எழுத்தாளர் சித்திரா சின்னராஜன் என்ற தலைப்பில் தனது முகப்புத்தகத்தில் எழுதியவற்றில் சிலவரிகள் நூலுக்கு மேலும் அணி சேர்க்கின்றது.

சாகித்தியரத்னா தெணியானின் நூலாசிரியர் பற்றிய சிறு அறிமுகம் நூலின் பின்னட்டைக்கு அழகுசேர்க்கின்றது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நாடகக்கலைக்குத் தங்களை அர்ப்பணித்த நடிகர்களான தனது மூத்த உறவுகள் பதினான்கு பேருக்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் நூலாசிரியர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அழகான அட்டைப்படத்துடன் மிகுந்த கலை நேர்த்தியுடன் பதிப்பித்துக் கொடுத்திருக்கிறார் ஜீவநதி க.பரணீதரன்.

ரூபா 300 விலை குறிப்பிடப்பட்டுள்ள ‘தண்ணீர் சிறுகதைத் தொகுதியானது மண்டபத்தில் ரூபா 250க்கு வழங்கப்பட்டது.

ஏற்கனவே கலைப்பரிதி, கலைப்பாரதி, கலைக்கலசம், என்ற கௌரவ பட்டங்களைப் பெற்றுக் கொண்ட வட அல்வை க.சின்னராஜனுக்கு மேலும் பல பட்டங்களும், விருதுகளும் கிடைக்க இந்நூல் வழியமைக்கும் என நம்பலாம் .

(Visited 1 times, 1 visits today)