போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஸ்ரிபன் றாப் கலந்து கொள்கின்ற முக்கியமான நிகழ்வொன்று ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரிபன் றாப் களமிறங்குவது இலங்கை அரசாங்கத்துக்கு புதிய நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும் என ஜெனீவாவிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று திங்கட்கிழமை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபையில் “How the International System has Failed to Provide Accountability for Mass Atrocities: Ongoing illegal detention, torture and sexual violence against Tamils in Sri Lanka” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற பக்க நிகழ்விலேயே முன்னாள் தூதர் கலந்து கொள்ள இருக்கின்றார்.
இந்நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையை கண்காணிகும் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளருமாகிய றிச்சாட் ரொஜெர்சும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் போர் குற்றங்களை அடிப்படையாக வைத்து இலங்கை தொடர்பிலான தீர்மானங்களை அமெரிக்காவே முன்னின்று கொண்டு வந்திருந்த நிலையில், போர் குற்றவிவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரேயே தமிழர் தரப்பு ஜெனீவாவில் களம் இறக்கியிருப்பது முக்கியத்துவம் உள்ள ஒன்றாக கருதப்படுகின்றது.
இன்று நண்பகல் ஜெனீவா நேரப்படி 12:30 மணிக்கு 25ம் இலக்க பக்க அறையில் இந்நிகழ்வு இடம்பெற  இருக்கின்றது. ஜெனீவா சென்றுள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும்  இதில் கலந்துகொள்வார்கள்.
(Visited 86 times, 1 visits today)