ச. சுந்தரதாஸ்

அடிமைப்பெண்

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். தயாரித்த இரண்டாவது படம் அடிமைப் பெண் நாடோடி மன்னன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பத்தாண்டுகளுக்குப்பின் இந்தப் படம் உருவானது. முதலில் எம்.ஜி.ஆர். சரோஜாதேவி நடிப்பில் சில காட்சிகள் எடுக்கப்பட்டு பின்னர் சரோஜாதேவி படத்திலிருந்து நீக்கப்பட்டு ஜெயலலிதா இரட்டை வேடத்தில் இதில் நடித்ததோடு  மட்டுமன்றி அம்மா என்றால் அன்பு என்ற பாடலையும் தனது சொந்தக் குரலில் பாடியிருந்தார். அசோகன் மனோகர் சோ பண்டரிபாய் ராஜஸ்ரீ என்று பலர் நடித்த இப் படத்தில் எம்.ஜி.ஆருடன் சில காலம் முரண்பட்டிருந்த சந்திரபாபுவும் நடித்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தயாரிப்பாளரான எம்.ஜி.ஆர். படத் தயாரிப்பிற்கான செலவைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதை படத்தின் காட்சிகளும் பிரம்மாண்டமும் எடுத்துக் காட்டின. சரித்திரக் கால கதை என்ற போதும் பலவித அரங்குகளை அமைத்து அசத்தியிருந்தார் கலை இயக்குனர் அங்கமுத்து.

நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்த போது நிதி நெருக்கடிக்கு எம்.ஜி.ஆர். ஆளாகியிருந்தார். இதன் காரணமாக படத்தின் இறுதிப் பகுதியையே கேவா கலல் படமாக்கியிருந்தார். ஆனால் 1969 ல் வெளி வந்த அடிமைப் பெண்ணை முழு நீள ஈஸ்ட்மன் கலரில் தயாரித்தார் எம்.ஜி.ஆர்.

ஆரம்பத்தில் அடிமைப் பெண் படத்தை எம்.ஜி. ஆரே டைரக்ட் செய்வதாக இருந்தது. ஆனால் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தால் டைரக்ட்செய்யும் பொறுப்பை கே. சங்கரிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பிற்கான சென்ற நடிகர்கள் கலைஞர்களை மட்டுமன்றி அவர்களுடன் வந்த நண்பர்களையும் எவ்விதக் குறையுமின்றி எம்.ஜி.ஆர். கவனித்துக் கொண்டதை சோ பல தடவைகள் பாராட்டி எழுதியுள்ளார். அதேபோல் நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருந்த சந்திரபாபுவுக்கும் கணிசமான தொகை படத்தில் நடிப்பதற்கு வழங்கப்பட்டது.

படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு ராஜஸ்தானில் படமாக்கப்பட்டது. ராஜஸ்தானின் அரண்மனை, பாலைவனம் என்று அனைத்தையும் தனது கமராவின் மூலம் அள்ளிக் கொண்டார் ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி. சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். போடும் சண்டை விறுவிறுப்பாக இருந்தது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்தப் படத்தில் தான் முதன் முதலில் எம்.ஜி.ஆருக்கு ஆயிரம் நிலவே வா என்று பாடியிருந்தார். கே. சங்கர் படத்தை இயக்க கே.வி.மகாதேவன் இசையமைத்தார். தாயில்லாமல் நானில்லை என்ற பாடலை டி.எம்.எஸ். குரலில் ஜொலித்தது. எம்.ஜி.ஆர். நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளருமாக இருந்து உருவாக்கிய அடிமைப் பெண் இருபத்தைந்து வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. இலங்கையிலும் நூறு நாட்கள் ஓடி ரசிகர்களை கவர்ந்தது.

உலகம் இவ்வளவுதான்

மிகக் குறுகிய காலத்திற்குள் ஏராளமான படங்களில் நடித்து சாதனை புரிந்த
நாகேஷின் இருநூறாவது படம் உலகம் இவ்வளவுதான். இதில் நாகேஷûடன் சோவும் மனோரமாவும் நடித்திருந்தார்கள். வேதா இசையமைத்திருந்தார். ஒரு நாள் நல்லவனாகவும் மறுநாள் கெட்டவனாகவும் மாறி மாறி வாழும் கதாநாயகன் பாத்திரத்தை நாகேஷ் ஏற்று சிறப்பாக நடித்திருந்தார். இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான் என்ற பாடலும் விஜயஸ்ரீயின் நடன அசைவுகளும் பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. தேவதாஸ் வெற்றிப் படத்தை டைரக்ட் செய்த வேதாந்தம் ராகவையா இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

குழந்தை உள்ளம்

நடிகையாகவே தமிழ்த் திரையில் வலம் வந்து கொண்டிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி முதன் முதலில் இயக்குனராக அவதாரம் எடுத்தப் படம் குழந்தை உள்ளம். முதல் படத்திலேயே தன் கணவர் ஜெமினி கணேசனை டைரக்ட் செய்யும் வாய்ப்பும் அவருக்கு கிட்டியது. வாணிஸ்ரீ சௌகார் ஜானகி மனோகர் ஆகியோர் நடித்த இப்படத்திற்கு எஸ்.பி. கோதாண்டபாணி இசையமைத்திருந்தார். இவரே எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு முதன் முதலில் படத்தில் பாடும் சந்தர்ப்பத்தை வழங்கியவர். அதனால்தான் தனது ரெக்கார்டிங் தியட்டருக்கு கோதண்டபாணி ரெக்காரிடிங் தியட்டர் என்று நன்றியுடன் பாலசுப்பிரமணியம் பெயர் வைத்தார். குழந்தை உள்ளம் படத்தில் எஸ்.பி.பி. சுசிலாவுடன் சேர்ந்து பாடிய முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு என்ற பாடல் இலங்கை வானொலி மூலம் பிரபலமானது.

தங்கச் சுரங்கம்

ஆங்கிலத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவந்து ஒரு கலக்கு கலக்குவதைப் பார்த்த தமிழ்த் தயாரிப்பாளர்கள் தமிழிலும் அதே பாணியில் படங்களை உருவாக்கத் துடித்தார்கள். டைரக்டர் ராமண்ணாவுக்கு சிவாஜியை ஜேம்ஸ் பாண்டாக நடிக்க வைத்துப் பார்க்க ஆசை. அதன் விளைவு தங்கச் சுரங்கம் உருவானது. ஆக்ஷன் ஹீரோவாக ஸ்டைல் நடிகராக இதில் சிவாஜி தன் நடிப்பைக் காட்டியிருப்பார். அவருக்கு துணையாக கவர்ச்சியும் ரொமான்சும் காட்டும் விதத்தில் பாரதி வெண்ணிற ஆடை நிர்மலா போலித் தங்கத்தை தயாரித்து நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கப் பார்க்கும் வில்லன் மிஸ்டர் ”பை” யாக ஒ.ஏ.கே. தேவர் இவர்களுடன் நாகேஷ் எஸ். வரலஷ்மி ஜாவர் சீதாராமன் மனோகர் என்று பலர் தோன்றிய இப் படத்திற்கு மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்.

சிவாஜியின் நாட்டுப் பற்றை விளக்கும் நான் பிறந்த நாட்டிற்கு எந்த நாடு பெரியது. கிணற்றிற்குள் படமாக்கப்பட்ட சந்தனக் குடத்திற்குள்ளே பந்துகள் உருண்டு வந்து போன்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. படம் 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தபோது போலித் தங்கமாவது செய்வதாவது என்று அலட்சியமாக சிலர் பேசினார்கள். ஆனால் சில காலத்திற்கு முன் சீனாவில் போலித்தங்கம் தயாரிப்பு என்று செய்திகள் வந்த போது தங்கச் சுரங்கம் படத்திற்கு மூலக்கதையை எழுதிய ஜி. பாலசுப்பிரமணியத்தின் கற்பனையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை ! வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அனல் பறக்கும் வசனங்களை எழுதிய பிரபல வசன கர்த்தா சக்தி கிருஷ்ணசாமி தான் இந்தப் படத்திற்கும் நவீனமான முறையில் வசனங்களை எழுதியிருந்தார். கலரில் வெளிவந்த தங்கச் சுரங்கம் ஸ்டைல் மன்னனாக சிவாஜியை காட்டியது.

(Visited 1 times, 1 visits today)