மு.திருநாவுக்கரசு

”ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற முஸ்லிம் மதச் சட்டங்கள் பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். 72 கன்னிகள் தேவை என்று ஓர் அடிப்படைவாதி கருதினால் நாம் அனைவரும் இறக்க நேரிடும். அடிப்படை வாதம் நாட்டில் இருந்து இல்லாது ஒழிக்கப்படும்.

”மதத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுச் சட்டத்துக்கு அப்பால் சென்று எவரும் செயற்பட முடியாது.பல பெண்களை திருமணம் செய்துகொள்ள முடியும் என்பதை முழுமையாக மாற்றி அமைத்து அனைவரும் பொதுச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப் படுவார்கள்.”என்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ 23.06.2019 அன்று கேகாலையில் பெருந்திரளான மக்கள் மத்தியிலான பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

அன்றைய தினம் கண்டியில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது ராஜபக்ஸ அணி நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில பின்வருமாறு குறிப்பிட்டமையும் இத்துடன் இணைத்துக் கவனிக்கத் தக்கது.

”பயங்கரவாத அமைப்புக்களுக்கான தடை மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கான தடை என்பனகூட அவசரகாலச் சட்டதின் கீழ் தான் தடை செய்யப்பட்டுள்ளன.
அவசரகலாச் சட்டம் தளர்த்தப்படுமாக இருந்தால் தற்போது பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அனைத்தும் சாதாரண அமைப்புக்கள் ஆகிவிடும். இதனால் கைது செய்யப்பட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். அதேபோல குறித்த ஆடைகளுக்கான தடையும் இல்லாது போய்விடும். இந்த விடயம் குறித்து இரண்டு அரசியல் தரப்புக்களும் சிந்தித்து செயற்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டின் பாதுகாப்புக்காகவும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

”மத்ரஸா பாடசாலைகள் தொடர்பிலும் இன்று பல கேள்விகள் எழுந்துள்ளன இவை தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”
ஜாதிக்க ஹெல உறுமய கட்சித் தலைவர் சம்பிக்க ரணவக்க ” அல்ஜிகாத் அல்கொய்தா ” என்ற தலைப்பில் சிங்களத்தில் மிக வசீகரமான அட்டைப் படத்துடன் ஒரு நூலை 2013 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார் . அனைத்து மதபீட மஹாநாயக்கர்களிடமும் இந்நூலை அவர் கையளித்துள்ளார்.
2090ஆம் ஆண்டில் இலங்கையின் பெரும் பான்மை இனமாக முஸ்லிம் இனம் வந்துவிடும் என்று இந்நூலில் அவர் எழுதியுள்ளார். இந்த அபாய எச்சரிக்கையுடன் கூடவே இலங்கையை ஒரு முஸ்லிம் நாடாக ஆக்குவதற்கான ஆதரவை அளிக்க பல வெளிநாட்டு முஸ்லிம் தலைவர்கள் தயாராக உள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1953ஆம் ஆண்டு டி.ஸி. விஜேவர்த்தன ஆங்கிலத்தில் எழுதிய ‘ ”Revolt in the temple”(விகாரையில் புரட்சி) 1956ஆம் ஆண்டு பௌத்த விசாரணைக்குழு வெளியிட்ட ”The Betrayal of Buddhism” என்ற நூலும் 1950களின் மத்தியில் எழுந்த இரண்டாவது பௌத்த மறுமலர்ச்சியின் எழுச்சிக்கான பெரும் தூண்டுகோல் அளித்த நூல்களாய் அமைந்தன.அவ்வாறே ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் உருவான 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலை மற்றும் தொடர்ச்சியான தமிழின எதிர்ப்பு யுத்தம் என்பனவற்றுக்கான தூண்டு கோல்களாக கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மந்தியூ என்பவரால் 1979ஆம் ஆண்டு சிங்களத்தில் எழுதப்பட்ட ”சிங்கல ஜாதியே ஹதிசி சத்துறு” (சிங்கள இனத்தின் திடீர் எதிரி ) என்ற நூலும் அதைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட ”ஹவுத கொட்டியா? ” (யார் புலிகள்? ) என்ற நூலும் அமைந்தன.

இவர் எழுதிய சிங்கல ஜாதியே ஹதிசி சத்துரு நூலின் அட்டைப் படமானது இந்தியாவில் இருந்து ஒரு இரட்ச்சத கரம் இலங்கையின் கழுத்து பகுதியில் ஒரு சுருக்கு கயிற்றை வீசி இந்தியாவுடன் இழுத்து கட்டுவதான வண்ணப் படத்திலான காட்சியைக் கொண்டிருந்தது. அதாவது ஈழத்தமிழரை பயன்படுத்தி இலங்கையை இந்தியா தன்னுடன் இணைக்கப் போகின்றது என்பதே இதன் பொருள்.மேற்படி இந்த வரிசையில் தற்போது சம்பிக்க ரணவக்க எழுதியுள்ள நூல் முஸ்லிம் எதிர்ப்பு வாதத்தை அதன் உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடியது.

மஹா சங்கத்தினர் ,சிங்கள அரசியல் தலைவர்கள்,சிங்கள அறிஞர்கள் ,மாணவர்கள் ,பொது மக்கள் ,மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் இந்நூல் முஸ்லிம் மக்கள் தொடர்பாக பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மஹா சங்கத்தினர், அரசியல் வாதிகள் மற்றும் அறிஞர்கள் ஊடகவியலாளர் மத்தியில் இருந்து மேற்படி முஸ்லிம்களின் வேகமான மக்கள் தொகை அதிகரிப்பு தொடர்பான அச்சங்கள் பெரிதும் வெளிவந்த வண்ணம் உள்ளன .முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பானது ஓர் இயல்பான வளர்ச்சி (natural growth) என்பதை தாண்டி அது ஒரு பெரும் சனத்தொகை வெடிப்பாக (population explosion) அமைந்துள்ள அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் பெரிதும் வடிவம் பெற்றுவிட்டது.

விடுதலைப் புலிகளின் வெடிகுண்டுகளைக் கண்டு அச்சம் அடைந்ததை விடவும் முஸ்லிம்களின் வேகமான இனப்பெருக்க வெடிப்பை கண்டு சிங்கள தரப்பினர் மிகப்பெரும் அச்சம் அடைகின்றதான காட்சி வெளிப்படுகிறது.

மேற்படி ரணவக்கவின் நூல் மஹா சங்கத்தினர், அரசியல் தலைவர்கள்,உயர் குழாத்தினர் மற்றும் அடிமட்ட மக்கள் என சிங்கள மக்கள் மத்தியில் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்துள்ளது.சம்பிக்க ரணவக்க ஒரு சாதாரண தரத்தை சார்ந்தவர் அல்ல. அவர் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் என்ற வகையில் அவரது எழுத்துக்கு சமூக மட்டத்தில் இயல்பாகவே அறிவியல் அங்கீகாரம் இருக்கும். இந்நூல் கூறும் கருத்துக்கள் நிதர்சனம் மிக்கவை என்ற எண்ணத்தை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் சிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தி உள்ளன.

சர்வதேச பயங்கர வாதம் தொடர்பான நிபுணர் என்று கூறப்படும் கலாநிதி ரொஹான் குணரட்ன கடந்த மாதம் கொழும்பில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றினார்.அந்தக் கருத்தரங்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ என்போர் அருகருகே அமர்ந்திருந்து பார்வையாளர்களாய் கலந்து கொண்டனர். அதில் உரையாற்றிய ரொஹான் குணரட்ன முஸ்லிம் அடிப்படை வாதிகளின் ஐந்து விழுமியங்களை குறிப்பிட்டு அதில் ஒன்றாக ”ஓர் ஆணுக்கு 72 அழகிய இளம் பெண்கள்” என்ற அம்சத்தை அழுத்திக் கூறி பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் நோக்கி பெயர் கூறி அழைத்து கிண்டலாகவும் கேலியாகவும் அதைச் சுட்டிக்காட்டிய ஆங்கில உரையை காணொளி வாயிலாகக் காண முடிந்தது.

இந்நிலையில் அரசியல் வாதிகள் தமக்கு ஏற்ப மேற்படி கருத்துக்களை சாதகமாக்கி கொள்ள முற்படுவர் என்பதில் சந்தேகம் இல்லை.குறிப்பாக ஜூன் 23ஆம் திகதி கேகாலையில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ பேசிய மேற்படி பேச்சும் அதே தினத்தன்று அவரது ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு வெளியிட்ட கருத்தும் வலுவான முஸ்லிம் எதிர் எதிர்ப்பு வாதத்தை கொண்டதாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தப் பிரகடனங்களாகவும் உள்ளன. முஸ்லிம்கள் மீது ராஜபக்ஸாக்களுக்கு இருக்கும் கோபத்தை அவர்களது நோக்கு நிலையில் வைத்து புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.2015ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வெறும் 4,49,072 வாக்குகளால் மட்டுமே ராஜபக்ஸ தோல்வியடைந்தார்.மைத்திரிபாலா சிறிசேனவுக்கு முஸ்லிம்கள் அளித்திருந்த வாக்குகளில் சுமாராக 2,25,000 வாக்குகளை அவர்கள் மாறி ராஜபக்ஸவுக்கு அளித்திருந்தால் நிச்சயம் ராஜபக்ஸ வெற்றி பெற்று இருப்பார்.

ராஜபக்ஸாக்களுக்கு தமிழ் மக்கள் மீது கோபம் இருக்க முடியாது. அதாவது இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்கள் ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களிப்பது இயல்பு. ஆனால் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறி தீவிரவாத முஸ்லிம் மேலரங்கத் தலைவர்களையும் அவ்வாறு சாஹ்ரான் போன்ற முஸ்லிம் தீவிரவாத தலைமறைவு இயக்கத் தலைவர்களையும் போஷித்து தமிழின எதிர்ப்பு அரசியலை ராஜபக்ஸாக்கள் முன்னெடுத்தனர். இதன்போது முஸ்லிம் வர்த்தகர்களையும் ,போசித்ததுடன் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்புகளிலும் வாய்ப்புக்களை வழங்கி முஸ்லிம் பகுதிகளுக்கென சாதகமான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்படி தமிழின எதிர்ப்பை முன்னெடுக்கும் நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட்டனர்.

இவ்வாறு தம்மால் போசிக்கப்பட்ட முஸ்லிம்கள் தமக்கு எதிராக வாக்களித்ததை அவர்களால் சகிக்க முடியவில்லை. ஆதலால் தீவிர முஸ்லிம் எதிர்ப்பு வாதம் பேசி அதிகப்படியான சிங்கள வாக்குகளை பெறமுடியும் என்று அவர்கள் ஒரு பக்கம் கருதுவதுடன் அதேவேளை இன்னொரு பக்கம் முஸ்லிம்களின் வாக்குகள் ராஜபக்ஸாக்கள் பக்கம் சாயவும் இதனால் வாய்ப்பும் உண்டு.அதாவது முஸ்லிம்களின் மொத்த சனத்தொகையில் 52% இனர் தென்பகுதியில் வாழ்கின்றனர். மிகுதி 48% இனர் தான் வடக்குகிழக்கில் வாழ்கின்றனர். தெற்கில் வாழும் 527 முஸ்லீம்களும் சிங்களவரை ஒட்டியும் அவர்களை அண்டியும் அவர்களில் தங்கியும் வாழ்கின்றனர். எனவே ராஜபக்ஸாக்கள் தேர்தலில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு இருக்கக்கூடிய பலமான சிங்கள சமூகப் பின்னணியில் தம்மால் தெற்கில் அமைதியாக வாழமுடியாதென்ற அச்சம் அங்குள்ள முஸ்லிம் மக்களின் நெஞ்சங்களில் இருப்பது இயல்பு. ஆதலால் முஸ்லிம்களின் வாக்கு கள் கடந்த தேர்தலில் நிகழ்ந்தது போல் இனி ஒரு பக்கம் போகாது. இரு கட்சியினருக்கும் 5050 என்ற விகித்தால் பிரிய வாய்ப்புண்டு.

அதேவேளை கிழக்கின் நிலைமை சற்று வித்தியாசமானது.அங்கு வாழும் முஸ்லிம்கள் சிங்கள சமூகத்திற்கு அதிகம் அஞ்சவேண்டியதில்லை. எனவே அங்கு கிடைக்கக்கூடிய முஸ்லிம் வாக்குகளைப் பாதுகாக்க ரணில் விரும்புகிறார். ஆதலால் கல்முனை பிரதேச சபையை தரம் உயர்த்தும் விவகாரத்தில் முஸ்லிம்களின் எதிர்ப்பைப் பெறாமல் அவர்களது ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் ரணிலின் கவனம் குவிந்துள்ளது.

33ஆயிரம் தமிழ் மக்களையும் வெறுமனே 3000 முஸ்லிம் மக்களையும் கொண்ட 29 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்ட இந்தப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் கோரிக்கை 1993ஆம் ஆண்டிலேயே அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற விடயமாக இருக்கிறது.இன்னும் ஒரு தடவை அமைச்சரவை அங்கீகாரத்தை பெறவும் தேவையில்லை.காலத்துக்குக் காலம் மாறிவந்த ஆட்சியாளர்கள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றாது விட்டமை அவர்களுடைய தவறாகும்.”என்று கல்முனையில் அனந்தி சசிதரன் ஜூன் 22 ஆம் திகதி கருத்து வெளியிட்டார்.

இங்கு கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்த வேண்டும் என்ற போராட்டத்தில் பொது பல சேனாத் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்தின தேரரும் ஈடுபட்டுள்ளனர். இப்பின்னணியில் கல்முனை உப பிரதேச சபை தரம் உயர்த்தப்படும் போது மேற்படி இரண்டு பௌத்த மத குருக்களும் கைகாட்டும் ஜனாதிபதி வேட்பாளருக்கு அங்குள்ள தமிழ் மக்கள் இயல்பாகவே வாக்கு அளிப்பர் என்ற நிலையுண்டு. இந்த இரண்டு பௌத்த மத குருக்களும் ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள்.

ஆதலால் முஸ்லிம்களின் வாக்குகளை இழக்கக் கூடாது என்ற நோக்கின் அடிப்படையில் தேர்தல் வரை காலம் கடத்தி தமிழரை ஏமாற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியை ரணில் நாடினார். அதற்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்  சுமந்திரனை 3 மாதம் கால அவகாசம் கோரி ரணில் தூது அனுப்பினார். இச்செயலை கண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாமா வேலை செய்கிறது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கண்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.எப்படியோ அனைத்து பக்கத்தாலும் இறுதியில் பாதிப்பு தமிழரின் கழுத்தை நோக்கியே பாய்வதை காணலாம்.

(Visited 1 times, 1 visits today)