நஜீப் பின் கபூர்

ஜனாதிபதி நாட்டை குழப்புகிறாரா நாடு அவரை குழப்புகிறதா
போதைக்காரர்களுடன்; 19ம் தூக்கு மேடைக்கு தயாராகின்றது!
தமது தரப்பு வேட்பாளரை உச்சரிக்க கட்சிகள் தயங்குகின்றன
கானல் நீராகின்ற ஜனாதிபதி மைத்திரி வேட்பாளர் எதிர்பார்ப்பு!
கோதாவை வேட்பாளராக ஒரு போதும் ஏற்கமாட்டேன் வெல்கம

னாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கே நான்கு மாதங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவும் அதுவரை அதிகாரத்தில் இருப்பார். அதுவரைக்கும் ஆளும்தரப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அது சரி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றுதான் நாம் கருதுகின்றோம்.

ஜனாதிபதியின் சில நடவடிக்கைகள் தொடர்ப்பில் ஒரு குழப்பமான நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. சஜித்தை ஆதரிப்பது தொடர்பான அவர் கருத்தில் கட்சிக்காரர்களிடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டதனால் இப்போது இதுவிடயத்தில் அவர் பின்வாங்கி இருக்கின்றார் என்று தெரிகின்றது.

இந்த நான்கு மாதங்களையும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மைத்திரி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன தேர்தல் ஏற்பாடுகளைச் செய்கின்ற காலமாகக் கருதி நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதைக் காணமுடிகின்றது. என்றாலும் இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் யார் யார் என்பது திட்டவட்டமாகத் தெரியாத நிலை, என்று சொல்வதை விட அவர்களை அறிமுகம் செய்து வைப்பதில் பல்வேறுவகையான நெருக்கடிகளை அந்தக் கட்சிகள் எதிர் நோக்கி வருகின்றன.

ஆனால் திட்டவட்டமாக சிலர் வேட்பாளர் இல்லை என்பதை நாம் முன்பே சொல்லி இருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியில் சஜீத்தை அந்த இடத்தில் நிறுத்துவதற்கு கட்சியிலுள்ள அமைச்சர்கள் பலரே இப்போது பகிரங்கமாகப் பேசத் துவங்கி இருக்கின்றார்கள். அதே நேரம் அவருக்கு அதற்கான கல்வித் தகைமை இல்லை என்று ரவி கருணாநாயக்க நேரடியாகவே பேசிவருவதையும் அவதானிக்க முடிகின்றது. இது தனிப்பட்ட குரோதம்.

நமது நாட்டில் கல்வித் தகைமை குறைந்த பலர் நல்ல ஆட்சியாளர்களாக இருந்து வந்திருக்கின்றார்கள். செயல்பாட்டுக்காரர்களும் தியாகங்களை செய்யக் கூடியவர்களும் நல்ல சிந்தனை உள்ளவர்களும் ஆட்சித் தலைவர்களாக வரலாம் என்ற நிலைப்பாட்டில் நாமும் இருக்கின்றோம். நன்கு படித்து கல்வி அறிவுள்ளவர்களாகவும் கள்வர்களாகவும் மக்கள் சொத்துக்களை சூரையாடுகின்றவர்களாகவும் இருந்து அரசியல் செய்பவர்களை விட நாம் முன் சொன்னவர்கள் மேலானவர்கள்.

மஹிந்த தரப்பில் இன்னும் கோதாவுக்குதான் முதலிடம் என்றாலும் சாமல், தினேஷ் போன்றவர்கள் பெயரும் அங்கு கடந்த சில தினங்களாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கோதாவை வேட்பாளராக்கினால் நான் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன், அவர் என்றதும் எனக்கு கொலைகள்தான் ஞாபத்திற்கு வருகின்றது என்று அந்த அணியைச் சேர்ந்த குமார் வெல்கம துணிச்சலுடன் கூறி இருக்கின்றார். அத்துடன் தற்போது அந்தக் கட்சி தன்னை இவ்வாறான பிரச்சினைகளினால் ஓரம் கட்டி வருவதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கடந்த வாரம் மஹிந்த தரப்புடன் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக சுதந்திரக் கட்சிச் செயலாளர் தயாசிரி தெரிவிக்கின்றார். இதற்கிடையில் சுதந்திரக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி என்று அறிவித்திருக்கின்றது. இதற்குக் காரணம் சஜீதை ஆதரிப்பது தொடர்பாக மைத்திரி வெளியிட்ட கருத்து அந்தக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கடந்த வாரம் ஏற்படுத்தி இருந்தது. இந்த அறிவிப்பு மைத்திரியின் அரசியல் முதிர்ச்சியைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.

இதனைச் சமாளிக்கவே இந்தப் புதிய அறிவிப்பு இப்போது வெளியாகி இருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம். சில சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனிதனுடன் அரசியல் செய்தால் தாம் அரசியல் ரீதியில் அழிந்து போக வேண்டி வரும் என்று தமக்குள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அறிவிப்பை தெரு வார்த்தையில் சொல்வதானால் பீடி அடிக்கின்ற அறிவிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஜேவிபியும் தனது வேட்பாளர் பற்றி அறிவித்திருக்கின்றது. இவை எல்லாம் அரசியலில் பேரம் பேசுகின்ற நிலைக்கு முன்னர் பாதை போடுகின்ற ஏற்பாடுகள்தான்.

சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிக்கு ஜனாதிபதி வேட்பாளர் கிடையாது என்ற நிலையில் ஏதோ ஒரு அரசியல் அதிகரத்தைப் பிடிக்கத்தான் இந்தக் காய் நகர்த்தல்கள் நடக்கின்றன. ஆனால் மஹிந்த அணியில் பிரதமர் பதவிக்கு எவரும் பங்கு கேட்க முடியாது. அங்கு மர உச்சயில் கொடியுடன் மஹிந்த நிற்கின்றார்.

இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரி முதலில் எந்தத் தேர்தலை நடத்துவது என்று தனது சட்ட ஆலோசர்களிடம் கேட்டிருக்கின்றார். இது பற்றி அவர் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்தவுடனும் கலந்துரையாடி இருக்கின்றார்.
சட்ட ஆலோசகர்கள் தாங்களுக்கு முன் கூட்டிப் பொதுத் தேர்தலை நடாத்த முடியாது. அதற்கு வாய்ப்புக்களில்லை என்றாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் ஒரு கருத்துக் கணிப்பை நீங்கள் மேற்கொள்ள சட்டத்தில் இடமிருக்கின்றது என்று அவர்கள் கூறி இருக்கின்றார்கள். தேர்தல்கள் கைக்கெட்டிய நிலையில் இருக்கும் போது கருத்துக் கணிப்பை நடாத்தினால் வீண் செலவுகள் ஏற்படும். இது கடும் விமர்சனத்திற்கு ஆளாகும் என்பதால் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.
இதற்கிடையில் வருகின்ற ஆகஸ்ட் 11ம் திகதி 2 மணிக்கு கொழும்பு சுகததாச மைதானத்தில் நடக்கின்ற ஸ்ரீ லங்கா பொது சன முன்னணியின் பேராளர் மாநாட்டில் வைத்து மஹிந்த ராஜபக்ஸ உத்தியோக பூர்வமாக அந்தக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வர இருக்கின்றார் என்று தெரிகின்றது. தற்போது டம்மி வேலை செய்கின்ற பேராசிரியர் பீரிசுக்கு வேறு ஒரு பதவி வழங்கப்படலாம் என்று தெரிகின்றது.

அரசியல் அமைப்பின் 19வது திருத்தம் குறித்து மைத்திரி தற்போது தெரிவிக்கும் கருத்துக்கள் குறித்து ஆளும் தரப்பு தனது கடுமையான விமர்சனங்களைச் செய்து வருகின்றது. தமிழ்த் தரப்புக்களும் முஸ்லிம் தரப்புக்களும் கூட அவரின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள வில்லை.
அமைச்சர் ராஜித இதனை நிறைவேற்றுவதில் அன்று முன்நின்று உழைத்த மைத்திரி இப்படிப் பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது. அத்துடன் இது சோபித தேரருக்குச் செய்கின்ற அவமரியாதையாகவும் நாம் பார்க்க வேண்டும். இதற்கு எதிராக அவர் எதாவது நடவடிக்கை எடுத்ததால் அதனை நாம் தோற்கடிப்போம் என்றும் அவர் எச்சரிக்கின்றார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியையும் பிரதமரையும் வந்து விளக்கமளிக்குமாறு கேட்டிருக்கின்றது. பிரதமர் தயார். ஜனாதிபதியோ நான் இந்தத் தெரிவுக்குழு முன்னால் வரமாட்டேன் என்றும் தன்னை அழைக்கின்ற அதிகாரம் இந்தத் தெரிவுக் குழுவுக்கு இல்லை என்றும் அடித்துக் கூறிவிட்டார். ஆனால் தெரிவுக்குழுவும் விட்ட பாடில்லை. ஜனாதிபதி கட்டாயம் வந்துதான் ஆகவேண்டும் விளக்கம் தரத்தான் வேண்டும்! இல்லாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இப்போதில்லா விட்டாலும் அவர் பதிவியில் இருந்து விலகிய பின்னர் கூட நீதி மன்றம் இது பற்றி அவரிடத்தில் கேள்வி எழுப்ப முடியும் என்று தர்க்கம் பண்ணுகின்றார் தெரிவுக்குழு உறுப்பினர் சுமந்திரன்.

ஜனாதிபதி கட்டாயம் அங்கு போகத்தான் வேண்டும். பதில் சொல்லத்தான் வேண்டும் என்று ஜேவிபி தலைவர் அனுர குமாரதிசாநாயக்காவும் கூறுவதுடன் அவர் தன்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காகத்தான் அங்கு வரப்பின்வாங்குகின்றார் எனவும் குறிப்பிட்டிருகின்றார். நாமும் இதற்கு ஜனாதிபதி முகம் கொடுப்பதுதான் முன்மாதிரியாக இருக்கும் என்று கருதுகின்றோம். ஆனால் இந்தத் தெரிவுக்குழு ஒரு கேலிக் கூத்துப்போலும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

காரணம் முக்கிய குற்றவாளியாக இனவாதிகள் அடையாளப்படுத்துகின்ற முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அழைக்கப்பட்டு சட்சியமளிக்கப் போன இடத்தில் இன்று எங்களுக்கு வேறு ஆலுவல்கள் இருக்கின்றன என்று ஒரு முறையும் அடுத்த நாள்போன போது எங்கள் உறுப்பினர்கள் பல பேர் இன்றில்லை என்று சொல்லி அவர் திருப்பி அனுப்பப் பட்ட நிகழ்வுகள் எந்த வகையிலும் பொறுப்பற்றது. இது தெரிவுக்குழுவை நம்பிக்கை இழக்கச் செய்கின்ற விடயங்களாக நாம் பார்க்கின்றோம். அத்துடன் பெரும் குற்றவாளிகள் பலர் அதன் அங்கத்தவர்களாக இருப்பதும் எமது விமர்சனத்திற்குக் காரணமாக அமைகின்றன.

முக்கியமான போதைவஸ்து வியாபாரிகள் நான்கு பேரைத் தூக்கில் போடுவதற்கு ஜனாதிபதி கையெழுத்துப்போட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டாலும் இந்தக் கட்டுரை தயாராகின்ற நேரம் வரை அவர்கள் விபரங்கள் வெளிவரவில்லை. இதனை சிறைச்சாலை அதிகாரிகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றார்கள். ஊடகங்களில்தான் நாமும் இது பற்றிப்பார்த்தோம் என்பது அவர்கள் நிலை.
இவர்களை தூக்கில் போடுவதற்கு சர்வதேசக் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.
பிரித்தானியா கடுமையாக எதிர்க்கின்றது. இலங்கை இப்படி நடந்து கொண்டால் நாம் எதிர்காலத்தில் இலங்கை குறித்து எமது தற்போதய நிலைப்பாடுகளில் மாற்றங்களை எற்படுத்திக் கொள்ள வேண்டி வரும் என்று அவை எச்சரித்து வருகின்றன. முக்கிய உலகப் பிரமுகர்களும் இது விடயத்தில் தனது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள். ஆனால் ஜனாதிபதி இது விடயத்தில் உறுதியாக இருப்பது போல் தெரிகின்றது. இவர்கள் தூக்கிலிடப்பட்டால் 43 வருடங்களின் பின் இது முதல் முறை என வரலாற்றில் பதிவாகும். உலக நாடுகள் இதனை எதிர்ப்பதை மைத்திரி கருத்தில் கொள்ள மாட்டார் என நாம் நம்புகின்றோம் அவர் பதவிக் காலம் இன்னும் நான்கு மாதங்களில் முற்றுப் பெறுகின்றது என்பதால் அது
அமைச்சர் மங்களவும், இதனைத் தானும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பகிரங்கமாகவே பேசி இருக்கின்றார். ஆனால் பொதுவாக ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டை பெரும்பாலான பொதுமக்கள் அங்கீகரிக்கின்றார்கள் என்பதனை நாம் பலருடன் பேசிப்பார்த்ததில் தெரிகின்றது. இவர்களுடன் சேர்த்து 19 வது அரசியல் திருத்தத்திற்கும் தூக்கு மேடை அமைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்கிரமரத்ன இதில் பல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றது என்று கூறுகின்றார். இதற்குப் பதிலாக ஜேவிபி முன் மொழிந்துள்ள 20 திருத்தத்தை நிறைவேற்றினால் இது சரியாகிவிடும் என்றும் அவர் குறிப்பிடடிருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஸ கொண்டு வந்த 18வது திருத்தத்தை சரி செய்யவே இது அன்று தேவைப்பட்டது. இதனையே மைத்திரி பதவிக்கு வர அன்று முக்கிய கோஷமாக மேடைகளில் முழங்கியதை நாடு இன்னும் நினைவில் வைத்திருக்கின்றது

(Visited 1 times, 1 visits today)