புகழேந்தி தங்கராஜ்
எழுதியுள்ள
ஒரு புலனாய்வு நூல்

சமகால வரலாற்றில் இலங்கையை உலுக்கிய மூன்று படுகொலைகள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவருவதற்காக தமிழகத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான புகழேந்தி தங்கராஜ் முன்னெடுத்த முயற்சியின் பலன்தான் ”ரத்த ஜாதகக் கதைகள்” என்ற இந்த நூல். ஒரு புலனாய்வு நாவல்போல மிகவும், விறுவிறுப்பாகவும் தான் சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறார் புகழேந்தி தங்கராஜ். ஒரு இயக்குநர் என்பதற்கு மேலாக மிகவும் சிறந்த ஒரு புலனாய்வு எழுத்தாளர் என்பதையும் இந்த நூலில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் உணர்வாளரான புகழேந்தி தங்கராஜ், தமிழ் மக்களின் விடுதலைப் போரை மையமாகக் கொண்ட ‘காற்றுக்கென்ன வேலி’ ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படங்களின் வரிசையில் ‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தை அண்மையில் பல தடைகளையும் தாண்டி வெளியிட்டார். அதன் மூலம் ஒரு சிறந்த இயக்குனராகவும், ஈழத் தமிழர் பிரச்சினைகளை திரைப்படங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லும் ஒருவராகவும் தங்கராஜ் அடையாளம் காணப்பட்டார். இப்போது அவர் ஒரு சிறந்த புலனாய்வு எழுத்தாளர் என்பதை அவர் கடந்த வாரம் சென்னையில் வெளியிட்ட ”ரத்த ஜாதகக் கதைகள்: கொலை செய்! பழியை புலிமேல் போடு!” என்ற நூல் வெளிப்படுத்தியிருக்கின்றது.

லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, வாசிம் தாஜுதீன் என்கிற மூவரின் படுகொலைகளையும் அது தொடர்பான புலனாய்வையும் மையப்படுத்தி, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதியதுதான் இந்த செய்திக்கதை என தனது முன்னுரையில் குறிப்படுகின்றார் நூலாசிரியர் தங்கராஜ். ”கதை என்று சொல்ல முடியாத அளவுக்கு பெரும்பாலும் நிஜங்களாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றது ஒவ்வொரு பக்கமும். சாட்சியங்களின் வாக்குமூலங்கள், நீதிமன்றத்தில் சி.ஐ.டி. சம்ர்பித்த அறிக்கைகள், ஊடகச் செய்திகள், புலனாய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் என்று உண்மைகளைக் கொண்டே இந்த நூல் பின்னப்பட்டிருக்கின்றது” எனவும் தங்கராஜ் குறிப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானதுதான்.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கையை உலுக்கிய மர்மப்படுகொலைகளில் முக்கியமானவை மூன்று. முதலாவது சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை. 2009 ஜனவரியில் அது அந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றது. இந்த நூலில் முதலாவதாக இடம்பெற்றிருப்பது லசந்தவின் படுகொலை குறித்த கதைதான். பட்டப்பகவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவுள்ள ஒரு வீதியில் வைத்து அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இப்போது பத்து வருடங்கள் சென்றுள்ள நிலையிலும், இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை.

இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள அரசியல், அது குறித்த விசாரணை திடீரென நிறுத்தப்பட்டதன் பின்னணி என்ன என்பது போன்ற பல தகவல்களை தேவையான ஆதாரங்களுடன் ஆணித்தரமாக இந்த நூலில் முன்வைக்கின்றார் தங்கராஜ். இதற்கான தகவல்களைச் சேகரிப்பதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கின்றார் என்பதை நூலை வாசிக்கும் போது உணரமுடிகின்றது. மிக் விமான பேரம் குறித்து சன்டே லீடர் வெளியிட்ட புலனாய்வு அறிக்கையுடன் ஆரம்பமான பிரச்சினை, எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை தங்கராஜ் சிறப்பாக விபரிக்கிறார்.

பலவருடகாலமாக மர்மமாக உள்ளவற்றில் மற்றொன்று பிரகீத்தின் மர்ம மறைவு. பத்திரிகையாளரும் கார்ட்டூனிஸ்ட்டுமான பிரகீத் என்னெலியகொட, காணாமல் போனதன் பின்னணி என்ன? அவருக்கு என்ன நடந்தது? என்பதும் இந்த நூலில் புலனாய்வுச் செய்திக் கதையாக வருகின்றது. ஏற்கனவே வெளிவந்த செய்திகளிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களாக இருந்தாலும், பல விஷயங்களை இணைத்து கோர்வையாகத் தரும் போது உண்மையில் என்ன நடைபெற்றது? இதன் பின்னணி என்ன? என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் தங்கராஜ் தருகின்றார்.

மூன்றாவது மர்ம மரணம் வாசீம் தாஜூதீனின் கொலை. அது கொலையா? விபத்தா? என ஆரம்பித்து அது கொலைதான் என்ற முடிவுக்கு புலனாய்வாளர்கள் வந்திருந்தார்கள். இது தொடர்பான விசாரணைகள் 2015 ஆட்சி மாற்றத்துடன் சூடுபிடித்தது. பின்னர் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் பின்னணி என்ன? தாஜூதீனுக்கு உண்மையில் நடந்தது என்ன? இதனை புலனாய்வு செய்கிறார் தங்கராஜ்.

இலங்கையை உலுக்கிய மூன்று படுகொலைகள் குறித்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டாலும், அதன் பின்னணியை துல்லியமாகத் தருகின்றது இந்த நூல். திரைப்பட இயக்குனர் தன்னுடைய புலனாய்வுப் பார்வையில், பல உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றார். மிகவும் சிறப்பாக தர்க்க ரீதியாக ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூல் தங்கராஜை ஒரு சிறந்த எழுத்தாளனாக உயர்த்தியிருக்கின்றது என கூறமுடியும்.

தமிழகத்தின் பிரபல ஊடக நிறுவனமான ‘நக்கீரன்’ வெளியிட்டுள்ள இந்த நூலின் விலை 200 (இந்தியா) ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நூலை ஒன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் www.books.nakkheeran.in அல்லது www.nakkheeran.in என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். மின்னஞ்சல் nakkheeran2003gmail.com.

(Visited 1 times, 1 visits today)